நான் ஏன் இப்படி வரைகிறேன்? | தேன் மிட்டாய் 36

By மருதன்

‘உங்களுக்கு என்ன ஆகிவிட்டது பிக்காசோ? ஆரம்பத்தில் தெளிவாகவும் அழகாகவும்தானே வரைந்து கொண்டிருந்தீர்கள்? இப்போதெல்லாம் உங்கள் ஓவியத்தைப் பார்க்கும்போது தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. கண் இருக்க வேண்டிய இடத்தில் காது இருக்கிறது. காது இருக்க வேண்டிய இடத்தில் கண். விரல்கள் கைகளைவிடவும் பெரிதாக இருக்க முடியுமா? முடியாது. ஆனால், நீங்கள் ஏனோ அப்படித்தான் வரைகிறீர்கள்.

இரண்டு மூக்குகள், மூன்று கைகள், ஒரு கால் என்று நீங்கள் வரையும் எந்த மனிதனையும் பார்க்கக் குழப்பமாக மட்டுமல்ல, கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. ஏன் இப்படி ஒரு தடாலடி மாற்றம் உங்களிடம்? எப்போது பழைய பிக்காசோ எங்களுக்குக் கிடைப்பார்? எல்லாரையும் ரசிக்க வைக்கும், எல்லாரையும் உற்சாகப்படுத்தும் ஓவியங்களை எப்போது மீண்டும் வழங்குவீர்கள்?’ இவ்வாறு கேட்பவர்களுக்கு நான் சொல்ல வேண்டியது ஒன்றுதான் இருக்கிறது. கர்னிகா. புதிதாக நான் வரைந்திருக்கும் ஓவியம். சில நிமிடங்கள் செலவிட்டு எனக்காக அந்த ஓவியத்தை ஆராயுங்கள்.

உங்களோடு உரையாடுவதற்கும் உங்கள் மயக்கத்தைப் போக்குவதற்கும் காத்துக்கொண்டிருக்கிறது என் ஓவியம். கர்னிகாவைப் பார்த்தவுடன் உங்கள் புருவங்கள் சுருங்கி, மனம் எங்கும் குழப்பம் விரிகிறதா? அப்படி யானால் நீங்கள் என் ஓவியத்தைச் சரியாகவே புரிந்து கொள்ள ஆரம்பித் திருக்கிறீர்கள்.

இந்தக் குழப்பத்துக்கு யார் காரணம்? ஓவியமா, ஓவியரா அல்லது ஆராய்ந்துகொண்டிருக்கும் நீங்களா? என்னைக் கேட்டால் இது நம் அனைவரின் குழப்பம் என்பேன். நாம் வாழும் உலகம் நேராக இல்லை. அது கோணல் மாணலாக வளைந்து கிடக்கிறது. நேர்மையாகச் சிந்திக்கும் ஆற்றலை நம் மூளை இழந்து கொண்டிருக்கிறது. நம் இதயத்தில் நச்சு கலந்துகொண்டிருக்கிறது. நம் கண்களில் குழப்பம் தேங்கிக் கிடக்கிறது. அந்தக் குழப்பம்தான் கர்னிகா.

என் தாய்நாடான ஸ்பெயினில்: ஓர் ஓரத்தில் சுருண்டு கிடக்கும் கிராமத்தின் பெயரைத்தான் என் ஓவியத்துக்கு அளித்திருக்கிறேன். ஒரு நாள் பொழுது விடிந்தபோது, ஒரு சிறுமி ஏதோ சத்தம் கேட்டு ஆச்சரியத்தோடு வீட்டைவிட்டு வெளியில் ஓடிவந்தாள். வானத்தை அண்ணாந்து பார்த்தாள். அடுத்த நொடி ‘அம்மா, அம்மா என்று மகிழ்ச்சியோடு கத்தியபடி உள்ளே ஓடினாள். இங்கே வந்து பாரேன்.

விர்... விர்... என்று சத்தம் போட்டபடி ஒரு பெரிய பறவை பறந்து கொண்டி ருக்கிறது. அது என்னைத் தேடிதான் வந்துகொண்டிருக்கிறது, அம்மா. அதை வீட்டுக்குள் அழைத்து வரட்டுமா? தின்பதற்கு ஏதேனும் தரட்டுமா? வீட்டில் என்னோடு வைத்துக் கொள்ளட்டுமா?’‘அதென்ன பறவை’ என்று அம்மா வியப்போடு கேட்டபோது, முதல் குண்டு மிகச் சரியாக அவர்கள் வீட்டுக்கூரையின்மீது வந்து விழுந்தது.

பெருத்த சத்தத்தோடு வெடித்தது. சத்தம் அடங்குவதற்குள் அடுத்தடுத்து வீடுகள் சரியத் தொடங்கின. என்ன ஏது என்று திகைப்பதற்கோ நிலைமையைப் புரிந்துகொண்டு அலறுவதற்கோ ஒருவருக்கும் நேரமில்லை. நூறாண்டுகள் வாழ்ந்த மரங்களும் பூச்செடிகளும் மண்ணோடு மண்ணாகக் கலந்தன.

மாடுகள் ஒரு பக்கமும் ஆடுகள் இன்னொரு பக்கமும் குதிரைகள் வேறொரு பக்கமும் சிதறி ஓட ஆரம்பித்தன. தும்பிகளும் வண்ணத்துப்பூச்சிகளும் கருகி விழுந்தன. நீல வானம் இருண்டு போனது. சிறுமிக்கும் அம்மாவுக்கும் கிராமத்திலுள்ள மற்றவர்களுக்கும் என்ன ஆனது, என்ன ஆகியிருக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை என்னால்.

வானில் வெள்ளைப் பறவையில் மிதந்துகொண்டே குண்டுகளை வீசிய மனிதன் யார்? உடனே கிளம்பிப் போய், கர்னிகாவையும் அதிலுள்ள அத்தனை உயிர்களையும் அழித்துவிட்டு வா என்று உத்தரவிட்ட மனிதன் யார்? அவனுடைய உயர் அதிகாரிகள் யார், தலைவர்கள் யார்? எப்படி அழிவை ஏற்படுத்துவது என்று சிந்தித்தவர்கள் யார், பயிற்சி அளித்தவர்கள் யார், விதவிதமான வடிவங்களில் ஆயுதங்களை உருவாக் கியவர்கள் யார்? இவர்களுக்கு அந்தச் சிறுமியின்மீது என்ன கோபம்? அம்மாவின்மீது என்ன கோபம்? கிராமத்து மனிதர்கள்மீது என்ன கோபம்? ஆடு, மாடுகள், தாவரங்கள், பூச்செடிகள்மீதும் கோபம்தான் கொண்டிருக்கிறார்களா? ஏன்?

நான் கண்ட மனிதன் நொறுங்கிக் கிடக்கிறான். கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் கண்கள் இல்லை. கேட்கும் திறனை இழந்துவிட்ட அவனுக்குக் காதுகள் இல்லை. கைகள் உடைந்திருக்கின்றன.

இதயம் சுக்கல்நூறாக உடைந்திருக்கிறது. என்னால் எப்படி அழகான, அமைதியான, அன்பான மனிதனை வரைய முடியும்? அந்த மனிதன் எங்கே வாழ்கிறான்? இல்லாத ஒன்றை எப்படி நான் கற்பனை செய்வது? அப்படியே செய்தாலும் எனக்கு உடைந்த மனிதன்தான் நினைவுக்கு வருகிறான். அவனுடைய உடைந்த செயல்கள்தான் நினைவுக்கு வருகின்றன.

நான் அச்சத்தில் உறைந்து நிற்கிறேன். என் அச்சம் நம் அச்சமாக மாற வேண்டும் என்பதால் வரைகிறேன். நம் கொடூரம் நம்மை அசைக்க வேண்டும், நம்மை மாற்றி அமைக்க வேண்டும் என்பதால் வரைகிறேன். நாம் தெளிவு பெற வேண்டும் என்பதால் நம் குழப்பத்தை வரைகிறேன். நாம் வெளிச்சத்தை நோக்கி நகர வேண்டும் என்பதால் இருளை வரைகிறேன். நாம் நேர்மையோடு நிமிர்ந்து நடக்கும் மனிதனாக மாற வேண்டும் என்பதால் உடைந்த மனிதர்களை வரைகிறேன்.

சிறுமி விரும்பிய வெள்ளைப் பறவை வந்து சேரும்போது நான் பழைய பிக்காசோவாக மாறுவேன். நம் கனவுகளில் வண்ணம் வந்து சேரும்போது நான் பழையபடி வரைய ஆரம்பிப்பேன். நீல வானம் கிடைக்கும்போது, வண்ணத்துப் பூச்சிகள் அச்சமின்றி பறக்கும்போது, பறவைகள் பழையபடி மிதக்க ஆரம்பிக்கும்போது, மரங்களும் செடிகளும் நிம்மதிப் பெருமூச்சு விடும்போது நானும் அழகிய இயற்கைக் காட்சிகளைத் தீட்டுவேன். அதுவரை இருண்ட காலத்தின் படங்களையே வரைந்து கொண்டிருப்பேன்.

செயல்தான் எல்லா வெற்றிக்கும் அடிப்படை. - பாப்லோ பிக்காசோ, உலகப் புகழ்பெற்ற ஓவியர்.(இனிக்கும்)

- marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்