அலெக்சாண்டர் கிரகாம் பெல் | விஞ்ஞானிகள் - 11

By ஸ்ரீதேவி கண்ணன்

அலெக்சாண்டர் கிரகாம் பெல் 1847, மார்ச் 3 அன்று ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பரோவில் பிறந்தார். 11 வயது வரை வீட்டிலேயே கல்வி பயின்றார். பின்னர் ராயல் பள்ளியில் சேர்ந்தார். அறிவியல் மீது ஆர்வம் கொண்டவர். பியானோ இசைப்பதிலும் ஒலி அலைகளை ஆராய்ச்சி செய்வதிலும் நேரத்தைச் செலவிட்டார்.

பெல்லின் தாய் காது கேளாதவர். தந்தை குரல் பயிற்சி, காதுகேளாதோருக்கான கல்வி கற்பிக்கும் ஆசிரியராக இருந்தார். எனவே சிறு வயதிலிருந்து அவர்களுக்கான பேச்சை ஆராய்ச்சி செய்தார் பெல். அமெரிக்கா சென்றார். அங்கு காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகளுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பள்ளியில் சேர்ந்தார். பின்னர் அது பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக மாறியது. உலகப் புகழ்பெற்ற ஹெலன் கெல்லரை உருவாக்கியதில் பெல்லின் பங்களிப்பு முக்கியமானது.

காது கேளாதவருக்குச் சொல்லித்தர குரலை ஆராய்ந்தவர், அதன் தொடர்ச்சியாகப் பேச்சைக் கடத்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அப்போதுதான் தந்தி கண்டறியப்பட்டது என்பதால் மனித குரலைக் கடத்த முடியும் என நம்பினார். மின்சாரத்தை ஒலியாக மாற்றும் விதத்தைக் கண்டறிந்தார்.

பெல் தொலைபேசியைக் கண்டறிய உதவியவர் வாட்சன். ஆளுக்கொரு தளத்தில் இருந்துகொண்டு பேச்சைக் கடத்தும் முயற்சியில் வெற்றிபெற்றனர். ”வாட்சன், இங்கே வா” என உதவியாளரை பெல் அழைத்ததுதான் தொலைபேசியில் நடந்த முதல் உரையாடல். காதில் விழுந்த வாட்சன் துள்ளிக் குதித்து ஓடினார். 1876 இல் தொலைபேசிக்கான காப்புரிமை கோரினார். அதே நேரத்தில் இன்னும் சிலரும் தாங்களும் தொலைபேசியைக் கண்டறிந்ததாக அறிவித்தனர். பலத்த போட்டிக்கு இடையே பெல்லுக்கு காப்புரிமை கிடைத்தது.
அடுத்த சில மாதங்களில் பெல் தனது கருவியைக் கண்காட்சியில் வைத்தார். யாரும் கண்டுகொள்ளப்படாத நிலையில், பிரேசிலின் அரசர் அதை கவனத்திற்குக் கொண்டுவந்தார். உடனே வணிகமயமாக்கினர். தொலைபேசி இணைப்புக்கான தொலைவு அதிகரித்தது.

1880 ஆம் ஆண்டு மின் அறிவியலில் சாதனை புரிந்ததற்காக ’வோல்டா; என்கிற பரிசை பிரெஞ்சு அரசு வழங்கியது. அந்தத் தொகையைக் காது கேளாதவர், வாய் பேசாதவரின் வாழ்க்கையை மேம்படுத்த கொடுத்துவிட்டார் பெல். வாஷிங்டனில் வோல்டா ஆய்வகத்தை நிறுவினார். தகவல் தொடர்பு, மருத்துவ ஆராய்ச்சி, காதுகேளாதவர்களுக்குப் பேச்சு கற்பிப்பதற்கான தொழில்நுட்பச் சோதனைகளில் ஈடுபட்டார்.

ஒலியைக் கடத்த ஒளியைப் பயன்படுத்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஃபோட்டோஃபோன் தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியம் என நிரூபித்தார். இது தொலைபேசிக்கு நிகரான கண்டுபிடிப்பு என்றாலும் வணிக ரீதியாக உருவாக்கப்படவில்லை. ஆனால் பின்னர் வந்த ஒளிமின்னழுத்த விளைவு பற்றிய ஆராய்ச்சிக்கு உதவியது. மெட்டல் டிடெக்டரை உருவாக்கும் முயற்சியில் பெல் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றார். அந்தக் கண்டுபிடிப்பு முதல் உலகப் போரில் பல உயிர்களைக் காப்பாற்றியது.

கனடாவில் தனது ஆய்வுகளை மேற்கொண்டார். 1890 களில் பெல் தனது கவனத்தை விமானத்தின் பக்கம் திருப்பினார். இறக்கை வடிவங்கள், உந்துவிசைத் தட்டு (புரொப்பல்லர்) வடிவமைப்புகளைப் பரிசோதித்தார். விமானக் கட்டுப்பாட்டில் நல்ல முன்னேற்றம் கொடுத்தது. 1907இல் வான் வழி பரிசோதனை அமைப்பை (Aerial experiment association) நிறுவினார்.

உலகம் முழுவதும் உள்ள காது கேளாதோர் பள்ளிகளுக்கு நிதியுதவி அளித்த கிரகாம் பெல், 1922 ஆகஸ்ட் 2 அன்று 75வது வயதில் மறைந்தார். அவர் மறைந்த அன்று அமெரிக்காவில் தொலைபேசி சேவைகள் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

- கட்டுரையாளர், எழுத்தாளர்

> முந்தைய அத்தியாயம்: ஐசக் நியூட்டன் | விஞ்ஞானிகள் - 10

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்