“உங்களால் ஏற்று நடிக்க முடியாத வேடம் என்று ஏதாவது இருக்கிறதா ஆட்ரி ஹெப்பர்ன்?” - இந்தக் கேள்வியை என்னை அறிந்தவர்கள் யாரும் கேட்க மாட்டார்கள். அவர்களுக்குத் தெரியும். மறக்க முடியாத பல திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். கடினமான பல கதாபாத்திரங்களில் என்னைக் கரைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், என்னால் இறுதிவரை நடிக்கவே முடியாத ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. ஒரு சின்னஞ்சிறிய சிறுமியின் பாத்திரம். அதை நீதான் செய்ய வேண்டும் என்று நண்பர்களும் உன்னைவிடப் பொருத்தமானவர் இருக்க முடியாது
என்று தயாரிப்பாளர்களும் பேசிப் பார்த்து அலுத்துவிட்டார்கள். அவர்களை எல்லாம் விடுங்கள். உன் அளவுக்கு என் மகளை நெருக்கமாக அறிந்த இன்னொருவர் இருக்க முடியாது எனும்போது நீ ஏன் தயங்குகிறாய் என்று அவர் அப்பாவே என்னிடம் கேட்டிருக்கிறார். உண்மையில் தயக்கம்கூட இல்லை அது. அச்சம் என்றே தோன்றுகிறது. முதல் முதலாக ஆன் ஃபிராங்கின் டைரியைப் பிரித்துப் படித்த அந்தத் தருணத்தை நினைத்தால் இப்போதும் என் உடல் நடுங்க ஆரம்பித்துவிடுகிறது.
அதன்பின் எத்தனை முறை அவளுடைய எழுத்தை வாசித்திருப்பேன் என்று நினைவில்லை. எத்தனை இரவுகள் உறக்கம் இல்லாமல் தவித்திருப்பேன்? போதும், இனி உன்னைத் தொட மாட்டேன் என்று எத்தனை முறை அந்தப் புத்தகத்தைத் தள்ளி வைத்திருப்பேன்? எத்தனை முறை குலுங்கி அழுதிருப்பேன்? ஏதோ ஒன்றைப் பார்க்கும்போது, ஏதோ ஒன்றைச் செய்யும்போது, ஏதோ ஓரிடத்தில் சுற்றும்போது திடீரென்று ஆனின் முகம் நினைவுக்கு வந்து எத்தனை முறை என்னை இழந்திருப்பேன்? இதற்கு மேல் தாங்க முடியாது என்று ஓடிப்போய் அவள் புத்தகத்தை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு முதல் சொல்லில் இருந்து இறுதிச் சொல்வரை எத்தனை முறை ஆடாமல், அசையாமல் படித்து முடித்திருப்பேன்? இரட்டைக் குழந்தைகள் என்றுதான் அழைப்பார்கள் எங்கள் இருவரையும்.
ஒரே ஆண்டு பிறந்தோம். ஒரே கனவைச் சுமந்துகொண்டு வாழத் தொடங்கினோம். துயரம் இல்லாத உலகில் வாழ வேண்டும். சுதந்திரமாக எங்கும் சுற்றித் திரிய வேண்டும். சத்தமாகப் பாட வேண்டும், பூமி அதிர ஆட வேண்டும். உலகிலுள்ள இனிப்பை எல்லாம் அள்ளி அள்ளி விழுங்க வேண்டும். நன்றாகப் படிக்க வேண்டும். அப்பா, அம்மாவோடும் நண்பர்களோடும் இனிமையாகப் பொழுதைக் கழிக்க வேண்டும். அன்பும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் துள்ளலும் நிறைந்த ஓர் உலகில் வாழ வேண்டும்.
எல்லாமே தப்புத் தப்பாக எங்களுக்குக் கிடைத்தது. இருளும் அழுகையும் கசப்பும் நிறைந்த உலகில் ஒரே நேரத்தில் வந்து விழுந்தோம். வானம் முழுக்கப் பறவைகள் கேட்டோம். போர் விமானங்கள் கிடைத்தன. அன்பை விரும்பினோம். பகை கிடைத்தது. அமைதியை விரும்பினோம். போர் வந்தது. அறிவைத் தேடிச் செல்லத் துடித்தோம். அழிவு வந்து சேர்ந்தது. இசையால் மயங்க வேண்டிய எங்கள் காதுகளை அழுகையும் இரைச்சலும் சூழ்ந்துகொண்டன. உடைந்து விழும் சடலங்களைத்தான் எங்கள் புதிய கண்கள் தினம் தினம் கண்டன.
வெவ்வேறு இடத்தில் பிறந்திருந் தாலும் வெவ்வேறு பின்னணியில் வளர்ந்திருந்தாலும் இருவரும் ஒரே நெதர்லாந்துக்குதான் ஓடிவந்து அடைக்கலம் தேடினோம். ஒரு புதிய வாழ்வைத் தொடரலாம் என்று நினைத்தோம். போரிடம் இருந்து தப்பிவிட்டோம் என்று நினைத்தோம். தவறு. போரின் நீண்ட கரங்கள் எங்களைப் பாய்ந்து வந்து பற்றிக்கொண்டன. என் வீடும் ஆனின் வீடும் அருகருகே உள்ள நகரங்களில்தான் இருந்தன. ஒன்றாக வளர்ந்தோம். தனிமையையும் தாள முடியாத அச்சத்தையும் அருகருகில் இருந்தபடி உணர்ந்தோம். ஒன்றுபோல் எங்கள் கனவுகளைக் கைவிட்டோம். ஒன்றுபோல் இருளில் கரைந்தோம். ஒரே போர்தான்.
ஆனால், எங்கள் வலி ஒன்றல்ல. எங்கள் துயர் ஒன்றல்ல. எங்கள் கண்ணீர் ஒன்றல்ல. எங்கள் போராட்டம் ஒன்றல்ல. போர் அவளை விழுங்கியது. என்னை விட்டுவிட்டது. நானும் அவளும் ஒரே ஆண்டில்தான் எங்கள் 14ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினோம். சில மாதங்களில் அவள் சென்றுவிட்டாள். நாங்கள் நண்பர்களாக இருந்திருக்க வேண்டியவர்கள். ஒன்றாகச் சிரித்து, விளையாடித் திரிந்து இருக்க வேண்டியவர்கள். ஒன்றாக மரத்தடியில் அமர்ந்து புத்தகம் படித்திருக்க வேண்டியவர்கள். கதைகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டியவர்கள்.
எங்கள் ஒளிப்படங்களை அருகருகில் வைத்து அதே கண்கள், அதே காதுகள், அதே புன்னகை, அதே குழந்தை முகம் என்று எல்லாரும் சொல்லும்போது என் கண்களிலிருந்து நீர் வழிய ஆரம்பித்துவிடும். அவள் என்னுடைய ஆன். என்னுடன் ஒன்றாக வாழ்ந்திருக்க வேண்டிய, ஒன்றாக வளர்ந்திருக்க வேண்டிய ஆன். நான் அவளோடு இருந்திருக்க வேண்டும். அவளுடைய நடுங்கும் கைகளை நான் பற்றிக்கொண்டிருக்க வேண்டும்.
அவளைக் கட்டி அணைத்துக் கதகதப்பு அளித்திருக்க வேண்டும். அவளாவது என்னைத் தன்னோடு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். நாங்கள் வேறு உலகில் சந்தித்திருப்போம். வேறு உலகில் நெருங்கியிருப்போம். வேறு உலகில் சிரித்து மகிழ்ந்திருப்போம். போர் எங்களைத் துண்டித்துவிட்டது. இரு வேறு உலகங்களில் எங்களைப் போட்டு அடைத்துவிட்டது.
என்னால் எப்படி ஆன் போல் திரைப்படத்தில் தோன்ற முடியும்? என் சிரிப்பும் அவள் சிரிப்பும் ஒன்றுதான் என்றாலும், எப்படி என்னால் ஆன் சிரிப்பதுபோல் நடிக்க முடியும்? என்னால் எப்படி ஆன் போல் நடக்க முடியும்? எப்படி ஆன் போல் அமர முடியும்? எப்படி ஆன் போல் அழ முடியும்? என்னால் எப்படி மீண்டும் ஆன் போல் சின்னஞ்சிறிய சிறுமியாக மாற முடியும்? நீ மாற வேண்டாம், மாறுவதுபோல் நடி என்கிறார்கள்.
அவளைப் போல் நடிக்க வேண்டும் என்றால் நான் மீண்டும் என் பழைய காலத்துக்குத் திரும்பிப் போக வேண்டும். மீண்டும் அந்தப் போரைச் சந்திக்க வேண்டும். மீண்டும் அந்தக் காட்சிகளைக் காண வேண்டும். மீண்டும் அதே இடத்தில் அவளுக்கு அருகில் வாழ ஆரம்பிக்க வேண்டும். மீண்டும் எங்களுடைய 14ஆவது பிறந்தநாளை நாங்கள் தனித்தனியே கொண்டாட வேண்டும். அவள் என்னைவிட்டு இன்னொருமுறை பிரிய வேண்டும். மன்னியுங்கள். அந்தத் துயர் மீண்டும் எனக்கு வேண்டாம். அந்தக் கனத்தை நான் மீண்டும் சுமக்க விரும்பவில்லை. அந்த நினைவுகள் எதுவும் வேண்டாம் எனக்கு. என்னால் நடிக்க முடியாது.
(இனிக்கும்)
அன்பே சிறந்த முதலீடு. நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கொடுக்கிறீர்களோ அதைவிட அதிகமாகப் பெறுவீர்கள். - ஆட்ரி ஹெப்பர்ன், உலகப் புகழ்பெற்ற திரைக் கலைஞர், மனிதநேயர்.
- marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago