வெள்ளை சர்பத்! | கதை

By ஸ்ரீஜோதி விஜேந்திரன்

விடுமுறைக்குப் பாட்டி வீட்டுக்குச் சென்றுவிட்டு அன்றுதான் வீட்டுக்குத் திரும்பியிருந்தாள் மல்லி.

"அம்மா எனக்கு சர்பத் வேணும்."

"கொஞ்சம் பொறு, தரேன்” என்ற அம்மா, ஒரு பெரிய டம்ளரில் சர்பத்தைக் கொண்டுவந்து மல்லியிடம் கொடுத்தார்.

"ஐயோ... இது என்ன சிவப்பா இருக்கு? எனக்கு வெள்ளை சர்பத் வேணும்மா" என்று மல்லி சிணுங்கினாள்.

மறுபடி வண்ணம் சேர்க்காத சர்பத்தைக் கொண்டு வந்து கொடுத்தார் அம்மா.

"அம்மா, நான் கேட்டது சர்பத். பால் மாதிரி வெள்ளையா இருக்கும்.”

”சர்பத் இப்படித்தான் இருக்கும். நீ என்ன கேட்கிறேன்னு எனக்குப் புரியல. ஒருவேளை பால் சர்பத் கேட்கறீயா?”

ஆமாம் என்று தலை ஆட்டினாள் மல்லி. யூடியூபில் பார்த்து, பால் சர்பத் செய்து கொண்டுவந்து கொடுத்தார் அம்மா.

"நான் கேட்டது ஜூஸ் மாதிரி இல்லம்மா. இட்லி மாதிரி இருந்துச்சு."

“இட்லி மாதிரியா? அப்படி ஒரு சர்பத்தை நான் கேள்விப்பட்டதில்லையே மல்லி. நீ பேரைச் சரியாதான் சொல்றியா?"

மல்லிக்கு ஏமாற்றமாக இருந்தது.

“சரி, அது எப்படி இருந்ததுன்னு சொல்லு பார்க்கலாம்.”

"இட்லி மாதிரி இருந்தது. அதுக்குத் தொட்டுக்க தக்காளிச் சட்னியும் கொடுத்தாங்க" என்றாள் மல்லி.

"ம்... பெயரைத் தப்பா சொல்லிக்கிட்டிருக்கே. கொழுக்கட்டையா?"

"இல்லம்மா... கொழுக்கட்டை எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியும்."

”பாட்டிகிட்ட கேட்டுட்டு அப்புறமா செஞ்சு தரேன்.”

”பாட்டி இப்போ தூங்கிட்டு இருப்பாங்க. அவங்களை எழுப்பாதீங்க.”

“சரி, நாளைக்கு செஞ்சு தரேன்.”

“எனக்கு இப்பவே சாப்பிடணும் போல இருக்கு.”

சிறிது நேரத்தில் உணவு மேஜையில் இட்லி, இடியாப்பம், புட்டு, தக்காளிச் சட்னி ஆகியவற்றைச் செய்து வைத்தார் அம்மா.

“மல்லி, இங்கே வா.”

மல்லி ஓடிவந்து பார்த்தாள்.

"நீ சாப்பிட்டது இதுதானே?" என்று அம்மா ஆவலாகக் கேட்டார்.

"நான் கேட்டது இது எதுவுமே இல்ல. ஊர்ல நான் சாப்பிட்ட அதே மாதிரியான சதுர சர்பத்தான் வேணும்..."

"சதுரமான சர்பத்தா?"

"ஆமா, அது அப்படித்தான் இருந்தது."

"நீ எதையோ சாப்பிட்டுட்டு அதேதான் வேணும்னு அடம்பிடிச்சா என்ன பண்றது? பாட்டி வீட்டில் நீ சொல்ற சர்பத் செய்ய வாய்ப்பில்லை. யார் வீட்டில் சாப்பிட்டேன்னு சொல்லு.”

“பாட்டிதான் எனக்கு சர்பத்தைக் கொடுத்தாங்க. நான் யார் வீட்டுக்கும் போய்ச் சாப்பிடலை.”

பாட்டியைத் தொடர்புகொண்டார் மல்லியின் அம்மா.

"மல்லி வந்தப்ப வெள்ளையா சதுரமா ஏதோ ஒண்ணு தக்காளிச் சட்னி வச்சி சாப்பிட்டாளாமே... அதை சர்பத் சர்பத்னு சொல்லி, வேணும்னு அடம்பிடிக்கறா. நானும் சர்பத், இட்லி, இடியாப்பம், புட்டுன்னு ஏதேதோ செஞ்சு கொடுத்துட்டேன். இது எதுவுமே இல்லே, ஆனா சர்பத் வேணும்னு கேட்கிறாம்மா" என்று புலம்பினார் அம்மா.

பாட்டி சிரித்தார்.

"ஏம்மா சிரிக்கறீங்க?”

"அவ சாப்பிட்டது கிரிபத். நம்ம யமுனா செஞ்சு கொடுத்தா. அதை நீங்க சர்பத்துன்னு சொல்லி அடிச்ச கூத்தை நினைச்சுதான் சிரிச்சேன். கிரிபத் இலங்கைல சாப்பிடக்கூடிய உணவு. கிட்டத்தட்ட நம்ம ஊரு பால் சோறு மாதிரி, ஆனா தேங்காய்ப் பால் வச்சு செய்வாங்க. அதுகூட தொட்டுக்க சம்பல்னு துவையல் மாதிரி செஞ்சு சாப்பிடுவாங்க. அதைத்தான் மல்லி தக்காளிச் சட்னின்னு நெனச்சிட்டா..." என்று பாட்டி சொன்னதும் மல்லியின் அம்மாவுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

”கிரிபத் எப்படி சர்பத் ஆச்சு, சம்பல் எப்படித் தக்காளிச் சட்னி ஆச்சு? இனிமேல் சாப்பிடும்போது பெயரைக் கேட்டு நினைவில் வச்சுக்கணும் மல்லி” என்றார் அம்மா.

”சரிங்கம்மா, இப்போ கிரிபத் செய்யறீங்களா?”

”இட்லி, இடியாப்பம், புட்டு எல்லாத்தையும் இன்னிக்குக் காலி பண்ணு. நாளைக்கு செஞ்சு தரேன்” என்றார் அம்மா.

மல்லியும் மகிழ்ச்சியுடன் சாப்பிடச் சென்றாள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்