கதைகளால் வாழ்கிறேன், கதைகளில் வாழ்கிறேன் | தேன் மிட்டாய் 24

By மருதன்

‘படி, படி, படி.’ இப்படி மூச்சுக்கு முன்னூறு முறை நச்சரித்தால் போதும். நம் குழந்தைகள் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்து மேதாவி ஆகிவிடுவார்கள் என்று அப்பா, அம்மாக்கள் நம்புகிறார்கள். ’எழுது, எழுது, எழுது.’ இப்படித் தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தால் போதும். தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கி, நம் மாணவர்கள் வானம்வரை உயர்ந்துவிடுவார்கள் என்று ஆசிரியர்கள் நம்புகிறார்கள்.

எல்லாரும் உயிரை வாங்குகிறார்களே, அதற்குப் புத்தகமே தேவலாம் என்று வேண்டா வெறுப்பாக எதையோ படித்து, எப்படியோ உருப்போட்டு, என்னத்தையோ எழுதி, வாழ்வில் என்னவெல்லாமோ செய்து கொண்டிருக்கிறார்கள் பிள்ளைகள். என்னமோ கல்வி, கல்வி என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, கல்வி!

‘நீ மட்டும் எப்படிப் படித்தாயாம் புதுமைப்பித்தன் என்கிறீர்களா?’ என்னையும் இப்படித்தான் ‘நை நை’ என்று நச்சரித்தார்கள். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். ‘ஏன் எப்போதும் ஆற்றங்கரைப் பிள்ளையார் போல் வீட்டுக்குள் உட்கார்ந்திருக்கிறாய்? விளையாட்டு எல்லாம் தெரியாதா உனக்கு? உன் வயது குழந்தைகள் எல்லாம் இப்படியா இரவு முழுக்கக் கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டு படித்துக் கொண்டிருக்கிறார்கள்? அந்தப் பாழாய்ப் போன புத்தகத்தை இப்போதே மூடிவை.’

ஆசிரியரின் தொணதொணப்பு எப்படி இருக்கும் தெரியுமா? ‘என்னப்பா இது? தேர்வு வருவதற்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கின்றன. இப்போதே எழுதி, எழுதிப் பழகிக் கொண்டிருக்கிறாயா? எப்போதும் நூலகத்தில் அடைந்து கிடந்து அப்படி என்னதான் செய்கிறாய்? புத்தகம் தவிர இந்த உலகில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பதை எப்போது தெரிந்துகொள்ளப் போகிறாய்?‘

பாவம். நான் பாடப்புத்தகங் களை விழுந்து, விழுந்து படித்துக் கொண்டிருப்பதாகவும் தேர்வுக்குத் தயார் ஆவதாகவும் எல்லாருக்கும் நினைப்பு. நான் படித்தவை அனைத்தும் கதைகள். ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லும்போது என் கண்கள் இறுதியாகப் பார்ப்பது புத்தகத்தை. ஒவ்வொரு நாளும் நான் கண் விழிப்பது புத்தகத்தில். இடையில் உறங்குவேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. கனவு கண்டு கொண்டிருப்பேன்.

நான் படித்த கதைகள் எல்லாம் என் கனவில் ஒவ்வொன்றாக உயிர் பெற்று வரும். நான் சந்தித்த கதாபாத்திரங்கள் எல்லாம் புத்தகத்தில் இருந்து வெளியில் குதித்து வந்து என்னோடு பேசும். நான் இதுவரை காணாத நாடுகளை, இதுவரை கால் பதிக்காத காடுகளை, இதுவரை கற்பனைகூடச் செய்ய முடியாத அதிசய உலகங்களை என் கனவுகளில் காண்பேன்.

விழித்திருக்கும்போதும் கனவுகள் விரிந்துகொண்டே இருக்கும். ஆசிரியர் சில எண்களைப் பலகையில் எழுதி வகுத்துக்கொண்டும் பெருக்கிக்கொண்டும் இருப்பார். நான் தேவதைகளோடும் பூதங்களோடும் விலங்குகளோடும் அரட்டை அடித்தபடி சுற்றித் திரிந்துகொண்டிருப்பேன். வரலாற்று ஆசிரியர் உள்ளே வருவதற்கும் கால இயந்திரம் என் ஜன்னலுக்கு அருகில் வந்து நிற்பதற்கும் சரியாக இருக்கும்.

அசோகர் மரம் நட்டார் என்று ஒற்றை வரியைத் திரும்பத் திரும்ப மாணவர்கள் மந்திரம்போல் மனப்பாடம் செய்து கொண்டிருக்கும்போது, நான் ஒரு பையிலிருந்து விதைகளை எடுத்து எடுத்து அசோகருக்கு அளித்துக்கொண்டிருப்பேன். ஜுலியஸ் சீஸர் எப்போது முதல் எப்போது வரை ஆண்டார் என்பதை ஆசிரியர் விளக்கிக்கொண்டிருக்கும்போது நான் ரோமாபுரி வீதிகளில் திரிந்துகொண்டிருப்பேன். கதைதான் வரலாறு. கதைதான் கல்வி. கதைதான் மொழி. கனவுதான் வாழ்க்கை.

கதைதான் அப்பா. கதைதான் ஆசிரியர். கதைதான் தேர்வும். ஆம், ஒருநாள் என் கனவில் ஒரு பெரிய மலை அளவு புத்தகம் தோன்றியது. ’ஏய் பையா, இதுவரை நூறு கதைகள் படித்துவிட்டாய். நூறு உலகங்களில் வாழ்ந்துவிட்டாய். ஆயிரம் கனவுகள் கண்டுவிட்டாய். நீயும் ஓர் உலகைப் படைக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.

எழுது. என் வயது மாணவர்கள் அனைவரும் வகுப்பறையைவிட்டு மைதானத்தை நோக்கித் துள்ளலோடு ஓடுவதைப் பார்த்திருக்கிறேன். என் மைதானம் காகிதம். வெள்ளை வெளேர் என்று விரிந்திருக்கும் ஒரு வெற்றுக் காகிதத்தில் என் கனவை எழுதுவேன். என் உலகத்தை என் சொற்களால், என் உணர்வுகளால், என் கைகளால் கட்டி எழுப்புவேன்.

நான் அறியாத பல உலகங்களைக்கதைகள் எனக்குக் காண்பித்திருக்கின்றன. நான் அறிந்த உலகை, நான் வாழும் உலகை, நான் அலைந்து திரிந்த வீதிகளை என் கதைகளில் கொண்டுவருவேன். பேரரசர்களையும் பெரும் வீரர்களையும் அல்ல, என் வீதியில் வாழும் சாதாரண மனிதர்களை, அவர்களுடைய துயரங்களை, அவர்களுடைய ஏக்கங் களை, அவர்களுடைய பாடுகளைஉலகுக்கு வழங்குவேன்.

கடவுளையும் எழுதுவேன், கந்தசாமிப் பிள்ளை யையும் எழுதுவேன். சொர்க்கத்தின் கதைகளையும் நரகத்தின் கதைகளையும் இணைப்பேன். என் கனவுகளாலும் கதைகளாலும் உலகை நிரப்புவேன். அவ்வாறு நிரப்பும்போது ஒரு புதிய உலகம் உயிர்பெற்று எழும். அது உங்கள் அனைவருக்கும் தெரிந்த உலகம்தான். அதே நேரம் புதுமையான உலகமும்கூட.

(இனிக்கும்)

- marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

9 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்