கதையைக் காணவில்லை! - கதை

By செய்திப்பிரிவு

கபிலனுக்கு அவனுடைய பாட்டி அவ்வளவு அழகாக ஒரு கதை சொல்லி இருந்தார். இரவு முழுவதும் அதை நினைத்துக்கொண்டே படுத்திருந்தான் கபிலன்.

‘‘நாளைக்குக் கடைசி வகுப்புல கதை சொல்ற நிகழ்ச்சி. நீதான் இந்த வாரம் கதை சொல்லப் போறே. நல்ல கதையா தேர்ந்தெடுத்துக்கோ’’ என்று ஆசிரியர் கூறியிருந்தார்.

“எனக்கு நல்ல கதையா சொல்லுங்க பாட்டி” என்று கபிலன் கேட்க, பாட்டியும் அவனுக்கு அவ்வளவு அழகான கதை ஒன்றைச் சொன்னார்.

காலையில் எழுந்த கபிலனுக்குத் திடீரென்று கதை மறந்து போய்விட்டது. அம்மாவிடம் போய்க் கேட்டான்.

“அம்மா, பாட்டி ஒரு சூப்பர் கதை சொன்னாங்களே? உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”

“இல்லையே, கதை சொல்ல ஆரம்பிக்கும் போதே நான் தூங்கிட்டேனே” என்றார் அம்மா.

அப்பாவிடம் சென்று, “பாட்டி ஒரு கதை சொன்னாங்களே... அதைச் சொல்லுங்க” என்று கேட்டான் கபிலன்.

“நான் வேலை முடிச்சு வர்றதுக்குள்ள நீங்க எல்லாரும் தூங்கிட்டீங்களே... புதுசா ஒரு கதை சொல்ற அளவுக்கு இப்போ எனக்கு நேரமும் இல்லை” என்றார் அப்பா.

பாட்டியிடமே கேட்டுவிடுவோம் என்று கபிலன் சென்றபோது, தன் மூக்குக் கண்ணாடியைத் தேடிக் கொண்டிருந்தார் தாத்தா.

“பாட்டி... பாட்டி...” என்று கபிலன் அழைக்கவும், “பாட்டி அதிகாலையிலேயே கிளம்பி உன் சித்தப்பாவைப் பார்க்கப் போயிட்டாங்க. என்ன விஷயம்?” என்றார் தாத்தா.

“என் கதையைக் காணோம் தாத்தா.”

“அடடா! என் மூக்குக் கண்ணாடியையும் காணோம். உன் கதையையும் காணோமா?” என்று தன் தேடலைத் தொடர்ந்தார் தாத்தா.

எவ்வளவு யோசித்தும் கபிலனுக்குக் கதை நினைவுக்கு வரவே இல்லை. அம்மாவும் அப்பாவும் விதவிதமாகக் கேட்டுப் பார்த்தார்கள். ‘ராஜா ராணி கதையா? விலங்குகள் கதையா? பள்ளிக்கூடத்தில் நடக்கிற கதையா? சுற்றுலா போற மாதிரி கதையா?’ என்று. கபிலனுக்கு நினைவே இல்லை.

பள்ளிக்குக் கிளம்பினான். வீட்டு வாசலில் கடிதங்களுடன் ஒருவர் நின்றிருந்தார். அவரிடம், “மாமா என் கதையைக் காணோம்” என்றான் கபிலன்.

“அடடா! நான் ஒரு முகவரியைத் தேடுறேன். நீ ஒரு கதையைத் தேடுறீயா? நம்ம ரெண்டு பேரோட முயற்சியும் வெற்றி அடையட்டும்” என்றார் அவர்.

பக்கத்து வீட்டு அத்தை பூப்பறித்துக் கொண்டிருந்தார். “அத்தை, என்னோட கதையைக் காணோம்” என்றான் கபிலன்.

“அடடா! நல்லா தேடு கிடைக்கும்” என்றார் அந்த அத்தை.

வழிநெடுக தெரிந்தவர், தெரியாதவர் அனைவரிடமும் கேட்டுக்கொண்டே சென்றான் கபிலன். பள்ளிக்குச் செல்லும் வரை கதை கிடைக்கவில்லை. நண்பர்களிடமும் கேட்டான், யாருக்கும் தெரியவில்லை.

“கபிலனோட கதையைக் காணலையாம்” என்பதே வகுப்பு முழுவதும் பேச்சாக இருந்தது.

“கதை எப்படிக் காணாமல் போகும்?” என்று சிலர் கேட்டார்கள்.

“எப்படியோ தெரியல. காணாமல் போச்சாம்” என்று பதில் அளித்தனர் கபிலனின் நண்பர்கள்.

மதியம் உணவு இடைவேளையின்போது பள்ளி வாசலில் நெல்லிக்காய் விற்றுக் கொண்டிருந்த பாட்டியிடம் நெல்லிக்காய் வாங்கிய கபிலன், “பாட்டி, என் கதையைக் காணோம்” என்றான்.

“கதை எங்கும் போயிருக்காது, நல்லா தேடிப் பாருப்பா” என்றார் அந்தப் பாட்டி.

கபிலனுக்குக் கதை கிடைக்கவே இல்லை. வகுப்பு ஆசிரியரிடம் சென்று, “டீச்சர், பாட்டி நேத்து எனக்கு ஒரு அழகான கதை சொன்னாங்க. ஆனா அந்தக் கதையை இப்ப காணோம்” என்றான் கபிலன்.

“அடடா! என்ன ஆச்சு?” என்று ஆசிரியர் கேட்க, காலை எழுந்தது முதல் நடந்த எல்லா விஷயங்களையும் சொன்னான் கபிலன்.

“அட! இதுவே ஒரு கதை மாதிரி இருக்கே! கதையைத் தேடி அலைஞ்ச கதைனு தலைப்பு வச்சு, இதையே சொல்லேன்” என்றார் ஆசிரியர்.

“நிஜமாவா டீச்சர்?”

“ஆமா, வகுப்புக்குப் போ... நான் வரேன்” என்று கபிலனை அனுப்பிவைத்தார் ஆசிரியர்.

வகுப்பில் கபிலன் கதையைத் தேடி அலைந்த கதையை சுவாரசியமாகச் சொன்னான். எல்லாருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

“பாருங்க, ஒரு விஷயம் அழகான கதையாக எப்படி உருவாகிருச்சு! இது கபிலனே உருவாக்கிய கதை. இதை எழுதினால் அவன் எழுத்தாளன். கதையாகச் சொன்னதால் கதைசொல்லி. இப்படி நீங்களே கதைகளை உருவாக்கலாம். வாழ்த்துகள் கபிலன்” என்றார் ஆசிரியர்.

“இதே மாதிரி நானும் கோழிக் குஞ்சு தேடின கதையைச் சொல்லவா?” என்றாள் கவிநயா.

“டீச்சர், நான் என் பந்து காணாமல் போன கதையைச் சொல்லவா?” என்றான் சிந்தன்.

“இனிமேல் தினமும் கடைசி அரை மணி நேரம். எல்லாரும் உங்க கதைகளைச் சொல்லலாம்” என்றார் ஆசிரியர். உடனே மகிழ்ச்சியில் கத்தினார்கள் மாணவர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்