யார் இந்த அறிவியலின் குழந்தைகள்?

By நேயா

ஏழாம் வகுப்பு படிக்கும் ஜோசப்பும் காசிமும் நண்பர்கள். ஒவ்வொரு துறை, வேலைப் பிரிவு சார்ந்து புதிய சொற்களைத் தேடுவது அவர்களுக்குப் பிடிக்கும். அவர்கள் சொல் வேட்டையாளர்கள். ஒவ்வொரு வேலை நடைபெறும் இடத்துக்கும் தைரியமாகச் செல்வார்கள்.

அங்கே வித்தியாச வித்தியாசமான சொற்களைத் தேடிக் குறித்துக்கொள்வது, அது சார்ந்த அறிவைப் பெறுவதை அவர்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சொல் வேட்டையின்போது ஜோசப் தொலைந்துபோய் விடுகிறான். அதே நேரத்தில் அவர்களது வகுப்பில் இருக்கும் சாய் பல்லவியைப் பார்த்தால் எல்லாருக்கும் பயம். ஏன்? அவள் கேள்வி கேட்பதில் தேர்ந்தவள்.

ஏற்கெனவே தெரிந்த பதில்களைச் சொல்வதைவிட, புதிய கேள்விகளைக் கேட்டு சிந்திக்கத் தூண்டுபவள். காணாமல் போன ஜோசப் என்ன ஆனான், அவனைக் கண்டுபிடிப்பதில் காசிம், சாய் பல்லவி, அறிவியல் ஆசிரியர் முருகானந்தம் ஆகியோரின் பங்கு என்ன? இந்தச் சிறிய கதைப் புத்தகத்தின் வழியே சரியான, அறிவியல் பூர்வமான கேள்விகள் பல கேட்கப்பட்டுள்ளன.

நம்மைச் சுற்றி எத்தனையோ மூடநம்பிக்கைகள் குவிந்து கிடக்கின்றன. அந்த மூடநம்பிக்கைகள் நம்மைச் சிந்திக்கவிடாமல் செய்யும். புதியனவற்றைத் தேடுவதைத் தடுக்கும். நம் வளர்ச்சியைப் பெருமளவு முடக்கிவிடும். அதற்கு எதிராக அறிவியலின் துணை கொண்டு இந்தக் குழந்தைகள் மேற்கொள்ளும் பயணமே ‘அறிவியலின் குழந்தைகள்' கதை.

அறிவியலின் குழந்தைகள்,
ஆயிஷா இரா. நடராசன்
அறிவியல் வெளியீடு,
தொடர்புக்கு: 94880 54683

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE