அடடா, அவரைப் போன்ற ஒரு புத்திசாலியை இந்த உலகில் வேறு எங்குமே பார்க்க முடியாது என்று வியக்கிறார் ஷெர்லாக் ஹோம்ஸ். என்ன ஓர் அபாரமான அறிவு! அவருடைய மூளை தேனீயைப்போல் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியது. அவர் கவனத்திலிருந்து எதுவும் தப்பிப்பதில்லை. அவருடைய கணிப்புகள் என்றுமே தவறுவதில்லை. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் அவர் ஒரு ஜீனியஸ்!
ஷெர்லாக் ஹோம்ஸை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. உலகின் முதன்மையான துப்பறியும் நிபுணர். ஒருவராலும் தீர்க்க முடியாத மிகவும் கடினமான வழக்குகளைக்கூட மளமளவென்று தீர்த்து, குற்றவாளி யார் என்பதைக் கண்டறிந்து, நம்மை ஆச்சரியப்பட வைப்பார். அப்படிப்பட்ட ஷெர்லாக் ஹோம்ஸ் யாரை இப்படி ஆஹா ஓஹாவென்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார் தெரியுமா? ஜேம்ஸ் மோரியார்டி என்பவரைத்தான்.
ஷெர்லாக், மோரியார்டி இருவருமே லண்டனைச் சேர்ந்தவர்கள். லண்டனில் இவர்களுக்குத் தெரியாத சந்து பொந்து எதுவும் இல்லை. இருவருமே ஆழமாகக் கற்றறிந்தவர்கள். அறிவியல் தெரியும், வரலாறு தெரியும், தத்துவம் தெரியும், உளவியல் தெரியும், சட்டம் தெரியும். ஓவியக் கலை பற்றி உங்களுக்கு ஏதாவது சந்தேகமா? இந்த இருவரிடமும் கேட்கலாம். எந்த நூற்றாண்டு ஓவியம், யாரால் வரையப்பட்டது, அது அசலா போலியா அனைத்தையும் ஒரே பார்வையில் சொல்லிவிடுவார்கள். சிற்பக் கலை தெரியும். வேதியியல் தெரியும். கட்டிடக்கலை? அதுவும் தெரியும். கணிதம்? தண்ணீர் பட்டபாடுதான்.
தெரியாவிட்டாலும் உடனே கற்றுக்கொண்டு விடுவார்கள். பண்டைய ரோம் எப்படி இருந்தது என்பதை அவர்கள் தெரிந்துகொண்டாக வேண்டும். டைனோசார் எப்படி அழிந்தது என்பதைத் தெரிந்துகொண்டாக வேண்டும். டெலிபோன் எப்படி இயங்குகிறது என்று தெரிய வேண்டும். எல்லாவற்றையும் பற்றிப் படிக்க வேண்டும். எல்லாவற்றையும் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு விநாடிகூட சும்மா இருக்கக் கூடாது.
குறிப்பாக, மனித மூளை எப்படிச் செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வதில் இருவருக்குமே அளவு கடந்த ஆர்வம். அதிலும் குறிப்பாக, குற்றவாளிகளைப் பற்றிச் சிந்திப்பதில்தான் இவர்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டிருக்கிறார்கள். அதற்காகத்தான் இந்த இருவரும் வரலாறு முதல் கணிதம்வரை அனைத்தையும் கற்றுக்கொண்டார்கள். எது ஒரு மனிதனைக் குற்றம் செய்யத் தூண்டுகிறது? ஏன் ஒருவர் குற்றவாளியாக மாறுகிறார்? ஒரு திருட்டு அல்லது கடத்தல் அல்லது கொலை எப்படி நடக்கிறது? அதைச் செய்தவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது? முந்தைய காலங்களில் இப்படிப்பட்ட குற்றங்கள் நடந்திருக்கின்றனவா?
விடை தேடி இருவரும் கடுமையாக உழைத்தார்கள். வெறும் புத்தகங்களை மட்டும் படிக்காமல் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டார்கள். கத்தி, துப்பாக்கி, நஞ்சு, ரசாயனம் என்று பலவற்றைப் பரிசோதித்துப் பார்த்து அவற்றின் வெவ்வேறு வகையை ஆழமாகத் தெரிந்துகொண்டார்கள். இருவருக்குமே நல்ல நினைவாற்றல் இருந்தது.
ஒருமுறை பார்த்த காட்சியை, ஒரு முறை படித்த புத்தகத்தை, ஒருமுறை முகர்ந்த வாசனையை, ஒருமுறை கேட்ட இசையை அவர்கள் வாழ்நாள் முழுக்க மறந்ததில்லை. வெறும் காலடித் தடம் மட்டும்தான் இருக்கும். அதை வைத்துக்கொண்டு அவர் யார், அவர் வயது என்ன, அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்று மளமளவென்று இந்த இருவராலும் யூகித்துவிட முடியும்.
இப்படி எல்லாவற்றிலும் இருவரும் சமமானவர்கள்தாம். அதேநேரம், இந்த இருவருக்கும் ஒரே ஒரு வேறுபாடு இருந்தது. குற்றங்கள் மறைய வேண்டும், குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று ஷெர்லாக் விரும்பினார். குற்றங்கள் பெருக வேண்டும், என்னை யாரும் கண்டுபிடிக்கக் கூடாது என்று மோரியார்டி விரும்பினார். ஷெர்லாக் ஒரு துப்பறியும் நிபுணர் என்றால் மோரியார்டி ஓர் ஆபத்தான குற்றவாளி.
ஷெர்லாக் ஹோம்ஸுக்கு இது புரியவே இல்லை. நான் படித்த அதே புத்தகங்களைத்தான் மோரியார்டியும் படித்தார். நான் பயன்படுத்தும் அதே வழிமுறைகளைத்தான் அவரும் பயன்படுத்தினார். என்னைப் போலவே உலகிலுள்ள எல்லா விஷயங்களிலும் ஆர்வம் செலுத்தினார். இருந்தும் ஏன் அவர் எல்லோருக்கும் தீங்கு விளைவிக்கும் வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? ஏன் தன் திறமைகளை அழிவு காரியங்களுக்கு மட்டும் அவர் பயன்படுத்த வேண்டும்? மோரியார்டி விரும்பியிருந்தால் என்னைவிடத் திறமையான ஒரு துப்பறியும் நிபுணராக மாறியிருக்க முடியும்.
அல்லது நல்ல ஆய்வாளராகவோ பேராசிரியராகவோ ஆகியிருக்கலாம். தன்னுடைய அசாதாரணமான ஆற்றலைக் கொண்டு பல நல்ல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கலாம். மனித முன்னேற்றத்துக்கு உதவியிருக்கலாம். அதை எல்லாம் செய்யாமல் ஏன் மோரியார்டி ஒரு வில்லனாக மாற வேண்டும்?
இறுதியில் ஒரு வழியாகக் கண்டுபிடித்து, சண்டை போட்டு வீழ்த்திவிடுவார் என்றாலும் ஷெர்லாக் ஹோம்ஸ் ஒரு விஷயத்துக்காக நிச்சயமாக மோரியார்டியை நினைத்து வருந்தியிருக்க வேண்டும். இத்தனை படித்த மோரியார்டி மக்களை நேசிக்க மட்டும் ஏன் மறந்து போனார்? இத்தனை அறிவு இருந்தும் சமூகத்துக்கு அதைப் பயன்படுத்த வேண்டும் என்று எப்படி அவருக்குத் தெரியாமல் போய்விட்டது? அன்பு இல்லாத அறிவு பயனற்றது என்பதை ஏன் அவர் உணராமல் போனார்?
அவருடைய அறிவு மட்டுமா வீணாகிவிட்டது? மோரியார்டியைப் பற்றியே யோசித்து யோசித்து, அவரைக் கண்டுபிடிப்பதற்காகவே என் நேரத்தையும் அறிவையும் திறமையையும் செலவழிக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டுவிட்டது அல்லவா? எதிரும் புதிருமாக நிற்பதற்குப் பதில் நாங்கள் இருவரும் ஒன்றாக, ஒரே பக்கம் நின்று உழைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!
(ஷெர்லாக் ஹோம்ஸ், ஜேம்ஸ் மோரியார்டி இருவரும் ஆர்தர் கானன் டாயில் எழுதிய நாவல்களில் வரும் கதாபாத்திரங்கள்.)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago