இடம் பொருள் மனிதர் விலங்கு: ஊர் சுற்றுங்கள்!

By மருதன்

ரா

குலுக்கு நடப்பதென்றால் உயிர். பக்கத்துத் தெருவிலிருந்து பக்கத்து ஊர், பக்கத்து மாநிலம், முடிந்தால் பக்கத்து நாட்டுக்குக்கூட நடந்து சென்றுவிடுவார். உத்தரப் பிரதேசத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ராகுல், தனது 13-வது வயதில் வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டார். “உலகம் பெரியது. நான் காடுகளைப் பார்க்க வேண்டும், மலைகளையும் பாலைவனத்தையும் பனிப்பாறைகளையும் பார்க்க வேண்டும். என்னால் வீட்டுக்குள் அடைந்து கிடக்க முடியாது” என்று அப்பா, அம்மாவிடம் சொல்லிவிட்டார். அப்படியானால் படிப்பு, எழுத்து எல்லாம் என்னாகும் என்று கேட்டபோது ராகுல் சொன்ன பதில் இது. “உலகம்தான் பாடப் புத்தகம். உலகம்தான் ஆசிரியர். நான் உலகத்திடம் இருந்து நேரடியாகக் கல்வி கற்கப் போகிறேன்!”

சரி,அதற்கு ஏன் நடக்க வேண்டும்? ரயில் வண்டியில் போனாலும் பல இடங்களைப் பார்க்க முடியும் அல்லவா என்றால், முடியும். ஆனால் அதில் ஒரு பிரச்சினை. ஒரு மணி நேரத்தில் ரயில் பல மைல்கள் வேகமாகக் கடந்து சென்றுவிடும். ஓர் அழகான அருவி இருக்கும். கண்மூடித் திறப்பதற்குள் அந்த அருவி காணாமல் போய்விடும். ஓர் அழகான குளம் இருக்கும். ஆனால் அதுவும் மின்னல்போல் மறைந்துவிடும். தொலைவில் ஒரு மலை இருக்கும். அட, அற்புதமாக இருக்கிறதே என்று ரசிப்பதற்குள் ரயில் அதைக் கடந்து சென்றுவிடும்.

ஒவ்வோர் ஊரிலும் மனிதர்கள் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். அவர்களுடைய ஆடைகள், சாப்பிடும் உணவு, பேசும் மொழி, பேசும், பாடும் முறை எல்லாமே வித்தியாசமாக இருக்கும். ஆனால் இந்த ரயில் வண்டிக்கு அதெல்லாம் தெரியுமா? படுத்துத் தூங்கி காலை எழுந்து பார்ப்பதற்குள் வேறொரு மாநிலம் வந்துவிடும். அப்படியானால் அந்தச் சில மணி நேரத்துக்குள் பல மலைகளை, குளங்களை, மரங்களை, செடிகளை, ஓடைகளை, மனிதர்களை, விலங்குகளை நான் பார்க்கத் தவறியிருக்கிறேன் என்றல்லவா பொருள்? எவ்வளவு இழப்பு!

பேருந்திலும் இதே கதைதான். ஏன் இப்படி வேக, வேகமாக அது பறக்க வேண்டும்?

ஒரு புத்தகத்தை எப்படிப் படிக்கிறோம்? அப்படியே எடுத்துப் படபடவென்று புரட்டிவிட்டு, முடிந்தது என்று மூடிவைத்து விடுகிறோமா? ஒவ்வொரு வரியாக, ஒவ்வொரு வார்த்தையாக ரசித்துப் படிக்கிறோமா இல்லையா? எப்படிச் சாப்பிடுகிறோம்? பொரியல், கூட்டு, பாயசம், அப்பளம் எல்லாவற்றையும் வாழை இலையோடு சேர்த்து அப்படியே மடக்கி வாயில் போட்டுக்கொள்கிறோமா? ஒவ்வொன்றையும் தனித்தனியே ரசித்துச் சாப்பிட்டு மகிழ்கிறோம் இல்லையா? அப்படிதான் பயணமும். ஒவ்வோர் அடியாக எடுத்து வைத்து நடக்க வேண்டும். ஒவ்வொரு காட்சியையும் நிதானமாக, நின்று பார்த்து ரசிக்க வேண்டும். ஒரு குளம் அழகாக இருக்கிறதா? அப்படியே அதற்குப் பக்கத்தில் உட்கார்ந்துவிடுங்கள் என்கிறார் ராகுல்.

ராகுல் தன் வாழ்நாளில் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்து இந்தியா முழுவதையும் சுற்றிப் பார்த்திருக்கிறார். இலங்கை, ஜப்பான், கொரியா, சீனா, சோவியத் யூனியன் என்று பல நாடுகளுக்கும் போயிருக்கிறார். ரொம்ப ரொம்ப அவசியம் என்றால்தான் கப்பலில் ஏறுவார். தவிர்க்கவே முடியாது என்றால்தான் ரயில். வேறு வழியே இல்லை என்றால் குதிரை. மற்றபடி கால்நடைதான்.

13chsuj_Idam.jpg

போனோமா, சுற்றினோமா, வீடு வந்து சேர்ந்தோமா என்று இருக்க மாட்டார். நீங்கள் பேசுவது என்ன தெலுங்கா? அதை எனக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா என்பார். அடுத்து வங்காளி. அடுத்து சமஸ்கிருதம். பிறகு தமிழ், ஆங்கிலம். திபெத்துக்குப் போனால் திபெத்திய மொழி. உருது தெரியாமல் யாராவது இருப்பார்களா? பிரெஞ்சு எப்படி இருக்கும்? அதையும் ஒரு கை பார்த்துவிடுவோம். இந்த ஜெர்மானிய மொழி ரொம்பவும் சிக்கலானது என்கிறார்களே உண்மையா? ரஷ்ய மொழியை எங்கே கற்பது? இப்படி ஊர் ஊராகச் சுற்றி ராகுல் கற்றுக்கொண்டது முப்பது மொழிகளை! இந்த ராகுல் சாங்கிருத்யாயனுக்குத் தெரியாத மொழி என்று ஏதாவது உலகில் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டுப் போனார் நேரு.

அத்தோடு நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களையும் ராகுல் எழுதினார். இவர் எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ புத்தகம் அனைவரும் படிக்க வேண்டியது. அரிதான ஓலைச்சுவடிகளையும் ஓவியங்களையும் சேகரித்து நூலகங்களுக்கு அளித்தார். மதம், அரசியல், தத்துவம், வரலாறு என்று பலவற்றைக் கற்றுக்கொண்டார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக எழுதியதற்காகவும் பேசியதற்காகவும் சிறையில் அவரைச் சிறிது காலம் அடைத்து வைத்தார்கள். அப்போதும்கூட அவர் எதற்காக வருந்தினார் தெரியுமா? ஐயோ உள்ளே அடைத்துவிட்டார்களே, இனி எப்படி நான் ஊர் சுற்றுவது? எப்படிப் பல விஷயங்களைக் கற்பது?

ஒரு நாள் என்ன ஆனது தெரியுமா? தாடி, மீசை எல்லாம் வைத்துக்கொண்டு என்னென்னவோ மொழிகள் பேசியபடி சுற்றிக்கொண்டிந்த ராகுலை, சாமியார் என்று சிலர் நினைத்துவிட்டார்கள். அவரைத் தெரியாதா? அவருக்கு மந்திரம், தந்திரம் எல்லாம் தெரியும். அவரிடம் ஆசி பெற்றால் எல்லாத் துயரங்களும் மறைந்துவிடும் என்று மக்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

“சுவாமி, நீங்கள் எனக்குத் தாயத்து கொடுக்கும்வரை உங்களைவிட்டுப் போக மாட்டேன்” என்று ஒருவர் வீட்டுக்குள் வந்து உட்கார்ந்துவிட்டார். ‘சரி, இந்தா’ என்று அருகிலிருந்த ஒரு செப்புத் தகடை எடுத்துக் கொடுத்தார் ராகுல். வந்தவருக்குத் திருப்திஇல்லை. இதில் மந்திரம் ஏதாவது எழுதிக் கொடுங்கள் சுவாமி என்று நச்சரித்தார். ராகுல் திபெத்தில் சில வார்த்தைகள் எழுதிக் கொடுத்து அனுப்பினார். அந்த மனிதர் பயபக்தியோடு அதை வாங்கிக்கொண்டு புறப்பட்டுவிட்டார். ராகுல் எழுதிக் கொடுத்த அந்த மந்திரம் இதுதான். ‘அறிவை மட்டும் நம்பு. அறிவு பெற வேண்டுமானால் நன்றாக ஊர் சுற்று! மந்திரம், தந்திரம் எதையும் நம்பாதே!’

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்