கதை | நாளைக்கு உணவு இருக்குமா?

By செய்திப்பிரிவு

மரங்கள் அடர்ந்த கிராமத்தின் அருகில் அழகிய குளம் ஒன்று அமைந்திருந்தது. மழைக்காலமாக இருந்ததால் அந்தக் குளம் முழுவதும் நீர் நிரம்பியிருந்தது.

அதில் நீர் விரும்பிப் பறவைகளான கொக்கு, உள்ளான், வாத்து, ஆலா, மீன்கொத்தி, நீர்க் காகம் போன்றவை நீரில் வாழும் உயிரினங்களை உண்டு மகிழ்ந்தன. அதனால் அந்தக் குளம் முழுவதும் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது.

சில மாதங்களில் மழைக்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கியது. நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போனது. இதைக் கண்ட பறவைகள் உற்சாகம் இழந்தன. ஆனாலும் அவ்வப்போது வந்து பூச்சிகளையும் மீன்களையும் பிடித்து உண்பதும் நனைந்த இறக்கைகளை வெயிலில் காயவைப்பதுமாகவும் இருந்தன.

சில நாள்களில் நீரின் அளவு குறைந்து, ஆங்காங்கே குளத்தின் மேடான தரைப் பகுதிகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. பள்ளமான பகுதிகளில் மட்டுமே சிறிய அளவில் நீர் தேங்கிக் கிடந்தது. குளம் பொலிவிழந்து காணப்பட்டது.

அன்று பெரிய பாறையின் பாதிப் பகுதி தண்ணீருக்கு மேலே தெரிந்துகொண்டிருந்தது. அந்தப் பாறையில் சில கொக்குகள் சோகமாக நின்றுகொண்டிருந்தன. அந்த வழியாகப் பறந்து சென்ற காகம் ஒன்று அவற்றைக் கவனித்தது. ஏதோ பிரச்சினை என்று நினைத்து, பதற்றத்துடன் கொக்குகளுக்கு அருகில் வந்து அமர்ந்தது. ஆனால், அந்தக் கொக்குகளோ எதுவுமே பேசாமல் தண்ணீரையே பார்த்தபடி நின்றிருந்தன.

காகம் லேசாகக் குரல் கொடுத்து, தன் வருகையைத் தெரிவித்தது. ஆனாலும் கொக்குகள் அதைக் கண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு, குளத்தையே பார்த்துக்கொண்டிருந்தன.

“என்னாச்சு?” என்று கேட்டது காகம்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீ போ” என்றது ஒரு வயதான கொக்கு.

“இல்லை, எப்போதுமே மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களைப் பார்க்கும்போதே எங்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். இன்று இப்படிச் சோகமாக இருப்பதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது” என்றது காகம்.

ஒன்றிரண்டு கொக்குகள் காகத்தின் பக்கம் வந்து அமர்ந்தன.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை காகமே. போன வாரம்கூட இதோ இந்தப் பாறை தண்ணீருக்குள் மூழ்கிதான் இருந்தது. ஆனால், இன்று வெளியே தெரியும் அளவுக்குத் தண்ணீர் வற்றிவிட்டது. இப்படியே போனால் அடுத்த சில வாரங்களில் இந்தக் குளத்தின் நிலை என்னாகும்? நாங்கள் எல்லாம் சுவையான மீன்களுக்கு என்ன செய்வோம்?” என்று ஒரு கொக்கு கூற, மற்ற கொக்குகளும் தலையாட்டின.

“ஓ, இதுதானா?”

“ஆமா, உனக்கென்ன... நீ செத்தது, சாகாதது, வெந்தது வேகாதது என்று எது கிடைத்தாலும் தின்பாய். நாங்கள் எல்லாம் அப்படியா?” என்றபடி தன் ஒருபக்க இறக்கையைக் கால்வரை விரித்து அலகால் கோதியது ஒரு கொக்கு.

“ஆமாம். அதுக்கு என்ன? அன்றன்று கிடைக்கும் உணவை மகிழ்ச்சியாக உண்ண வேண்டும். நாளைக்கான உணவு எங்காவது நமக்காகக் காத்திருக்கும் என்கிற நம்பிக்கைதான் மகிழ்ச்சியான வாழ்கையைத் தரும். நாளை என்ன ஆகுமோ என்று நினைத்து இன்றே கவலைப்பட்டுக்கொண்டு, இப்படி உண்ணாமல் உறங்காமல் நின்றிருந்தால் என்ன ஆகும் தெரியுமா? நீங்கள் சொல்வதைப் போல் அடுத்த மாதம் தண்ணீர் முழுவதுமே வற்றிவிட்டாலும் வேறு இடங்களுக்குப் பறந்து சென்று உணவைத் தேடும் அளவுக்கு நம் உடம்பில் தெம்பு இல்லாமல் போய்விடும். எனவே இன்றைக்கு நமக்குக் கிடைத்தவற்றை அனுபவித்து மகிழ்ச்சியாக இருப்பதற்குக் கற்றுக் கொள்ளுங்கள்” என்றது காகம்.

“நீ சொல்வதும் உண்மைதான். தண்ணீரும் உணவும் இருக்கும் வரை இங்கே இருப்போம். இல்லாவிட்டால் வேறு இடங்களுக்குச் சென்றுவிடுவோம். எல்லாரும் வாங்க, சாப்பிடலாம்” என்று அழைத்தது அந்த வயதான கொக்கு.

கொக்குகள் மீண்டும் சுறுசுறுப்பாக இறக்கைகளை விரித்துக்கொண்டு, குளத்தை நோக்கிப் பாய்ந்து சென்றன. காகம் மகிழ்ச்சியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்