அது ஒரு சிறிய குளம். அதில் ஏழெட்டுக் குட்டித்தவளைகள் இருந்தன. அம்மா தவளைக்கு மட்டும் வயிறு பெரிதாக இருந்தது.
அம்மா தவளை எப்போதும் வயிற்றை இப்படியும் அப்படியுமாக ஆட்டிக்கொண்டே இருக்கும். வயிற்றின் மீது உட்கார்ந்திருக்கும் குட்டித்தவளைகளுக்கு அது சந்தோஷமாக இருக்கும்.
“எங்களுக்கு எல்லாம் சின்ன வயிறு. உங்களுக்கு மட்டும் எப்படிம்மா பெரிய வயிறு?” என்று கேட்டது ஒரு குட்டித்தவளை.
“எனக்கும் வயிறு சின்னதாதான் இருந்துச்சு. நிறைய சாப்பிட முடியாது. அதனால குளக்கரையிலே இருந்த முனிவர்கிட்ட என் வயிறைப் பெரிசாக்கணும்னு சொன்னேன். அவரும் என் வயிறைப் பெருசா மாத்திட்டார்!” என்று வயிற்றைக் குலுக்கியது அம்மா தவளை. வயிற்றின் மீது உட்கார்ந்திருந்த குட்டித்தவளைகள் தண்ணீருக்குள் விழுந்தன.
அம்மாவின் வயிற்றை நினைத்து குட்டித்தவளை களுக்கு எப்போதும் பெருமிதம்தான். குளத்தில் இருந்த பூச்சிகள், மண்புழுக் களிடம் பெருமை பேசின.
அன்று குட்டித்தவளைகள் அம்மாவிடம் சென்றன.
“அம்மா, இந்தக் குளத்திலேயே கிடக்கிறது என்னவோ மாதிரி இருக்கு. நாங்கதான் வளர்ந்துட்டோமே. பக்கத்து ஊர் ஏரியைப் பார்த்துட்டு வரட்டுமா?” என்று கேட்டன.
“இந்தக் குளத்தை விட்டு யாரும் எங்கேயும் போகக் கூடாது” என்றது அம்மா.
அம்மா சொன்னதைக் கேட்டு, குட்டித்தவளைகள் அமைதியாக இருந்தன. ஒன்று மட்டும் எல்லாரும் தூங்கும்போது, பக்கத்து ஊர் ஏரிக்குச் சென்றது.
பெரிய ஏரி அது. கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை தண்ணீர். குட்டித்தவளைக்கு ஆச்சரியமாக இருந்தது.
அப்போது ஓர் எருமை தண்ணீர் குடிக்க வந்தது. அதைப் பார்த்து குட்டித்தவளை பயந்துவிட்டது.
‘அட! எவ்வளவு பெரிய உருவம்; எவ்வளவு பெரிய வயிறு!’ என்று நினைத்துக் கொண்டது.
இதுவரை எருமையைப் பார்த்தது இல்லை அந்தக் குட்டித்தவளை. துணிச்சலை வரவழைத்துக்கொண்டு, “யார் நீ?” என்று கேட்டது.
“நான் எருமை. நீ எங்கே இருந்து வர்ற?”
“நான் பக்கத்து ஊர் குளத்திலே இருக்கேன். எங்க அம்மாவுக்குத்தான் பெரிய வயிறுன்னு நினைச்சோம். உன்னோட வயிறு அதைவிடப் பெரிசா இருக்கே!”
“இதென்ன பெரிய வயிறு? இதைவிடப் பெரிய வயிறெல்லாம் இருக்கு” என்றது எருமை.
குட்டித்தவளையால் நம்பவே முடியவில்லை.
எருமையிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு குளத்தை நோக்கிச் சென்றது.
கரையிலேயே உட்கார்ந்திருந்த அம்மா தவளை, “எங்கே போயிட்டு வர்றே?” என்று கேட்டது.
“ஏரிக்குப் போனேன். உங்களுக்குதான் பெரிய வயிறுன்னு நினைச்சோம். உங்களைவிடப் பெரிய வயிறுள்ள எருமையைப் பார்த்தேன்!” என்றது குட்டித்தவளை.
இதுவரை அம்மா தவளையும் எருமையைப் பார்த்ததில்லை.
“என்னோட வயிறை விடவா எருமையோட வயிறு பெரிசா இருந்துச்சு?” என்று கேட்டுக்கொண்டே அம்மா தவளை, தம்பிடித்து வயிற்றைப் பெரிதாக உப்பியது.
“இதைவிடப் பெரிய வயிறு” என்றது குட்டித்தவளை.
மூச்சைப் பிடித்து வயிற்றைப் பெரிதாக்க, “இன்னும் பெரிசு!” என்றது குட்டித்தவளை.
குளத்துத் தண்ணீரைக் குடித்து, வயிற்றைப் பெரிதாக்கிக் காட்டியது அம்மா தவளை.
“அது இன்னும் பெரிசு” என்றது குட்டித் தவளை.
அம்மா தவளை குளத்துத் தண்ணீரைக் குடிக்கக் குடிக்க வயிறு பெரிதாகிக்கொண்டே போனது. குளத்தில் தண்ணீர் குறைந்துகொண்டே வந்தது.
குளத்தில் இருந்த மற்ற குட்டித்தவளைகள் கரைக்கு வந்தன. “என்னாச்சு? ஏன் அம்மாவோட வயிறு இவ்வளவு பெரிசாச்சு?” என்று கேட்டன.
நடந்த விஷயத்தைச் சொன்னது குட்டித்தவளை.
“ஐயோ... உங்க வயிறுதான் உலகத்துலேயே பெருசும்மா! தண்ணியைக் குடிக்காதீங்க” என்று குட்டித்தவளைகள் அம்மாவிடம் கெஞ்சின.
அம்மா தவளை தண்ணீர்க் குடிப்பதை நிறுத்தியது.
“அவரவர் உடம்புக்கு ஏத்த மாதிரிதான் வயிறு இருக்கணும். பழைய அம்மாவாக வாங்க” என்று சொன்னது அந்தக் குட்டித்தவளை.
அம்மாவும் வாயைப் பெரிதாகத் திறந்தது. தண்ணீர் வெளியே வந்தது.
அம்மா தவளையின் வயிறு பழைய நிலைக்கு வந்ததும் குட்டித்தவளைகள் நிம்மதி அடைந்தன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago