“ஏன்டா, இப்படி நெருக்கியடிச்சு உட்கார்ந்திருக்க? கொஞ்சம் தள்ளி உட்காரு. அனல் அடிக்கும்” என்று கார்த்திகா சொன்னாள். அங்கு கூடியிருந்தவர்களில் சற்றுப் பெரிய பெண் அவள்தான்!
இரும்பு அடுப்பில் வாணலி வைக்கப்பட்டிருந்தது. மரங்களில் இருந்து உதிர்ந்து விழுந்த காய்ந்த சுள்ளிக்குச்சிகளை வைத்து அடுப்பை எரித்தார்கள். சட்டி காய்ந்ததும் சிறிது எண்ணெய்யை அதில் ஊற்றினாள் கார்த்திகா. அதைப் பார்த்ததும் பாப்பாவுக்குச் சந்தோஷமாக இருந்தது. ஏனென்றால் அந்த எண்ணெய் பாக்கெட்டை வாங்கி வந்தவளே அவள்தான்.
எண்ணெய் காய்ந்ததும் கேரட், பீன்ஸ், வெங்காயத்தைச் சேர்த்தாள் கார்த்திகா. காய்கறி களைக் கொண்டுவந்த நவீன், “இதை நான் கொண்டுவந்தேன்” என்று உற்சாகமாகச் சொன்னான்.
காய்கறிகள் வெப்பத்தில் வதங்கியதும் இரண்டு சொம்பு தண்ணீரை ஊற்றினாள் கார்த்திகா.
தண்ணீர் கொதித்ததும் பாக்கெட்டைப் பிரித்து நூடுல்ஸை அதில் சேர்த்தாள் கார்த்திகா. இப்போது ஜிம்மியின் முகம் மலர்ந்தது. நூடுல்ஸ் பாக்கெட்களைக் கொண்டுவந்தவன் அவன்தான்.
“நான்தான் நூடுல்ஸ் பாக்கெட் வாங்கிட்டு வந்தேன்!” என்று மகிழ்ச்சியில் குதித்தான் ஜிம்மி.
“நான்தான் எண்ணெய் பாக்கெட் வாங்கிட்டு வந்தேன்” என்றாள் பாப்பா.
“அடுப்பும் சட்டியும் நான்தான் கொண்டாந்தேன்” என்று இன்னொரு குரல் வந்தது.
“கரண்டி, குச்சி, தீப்பெட்டி என்னோடது!” என்றது மற்றொரு குரல்.
நூடுல்ஸ் செய்வதில் தீவிரமாக இருந்த கார்த்திகா, “இப்ப சும்மா இருக்க மாட்டீங்களா? உங்களுக்கு நூடுல்ஸ் வேணுமா, வேணாமா?” என்று அதட்டினாள்.
“என்ன பண்றீங்க?” என்று கேட்டுக்கொண்டே எதிர் வீட்டம்மா எட்டிப் பார்த்தார்.
“நூடுல்ஸ் கிண்டுறோம்!” என்றாள் கார்த்திகா.
“இந்த வாரம் நூடுல்ஸா? போன வாரம் சப்பாத்திதானே?”
“ஆமாத்தே! அதுக்கு முந்தின வாரம் பொங்கல் செஞ்சோம். இந்த வாரம் பசங்க நூடுல்ஸ் கிண்டச் சொன்னாங்க. அதான்...”
“கூட்டான் நூடுல்ஸா? ஒவ்வொரு ஞாயித்துக் கிழமையும் இதே வேலையா போச்சு. ரொம்ப கவனமா சமைக்கணும். தீயில சுட்டுக்காதே” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றார் அந்த அம்மா.
“சரிங்கத்தே...” எனத் தலையாட்டிய கார்த்திகாவின் கவனம் எல்லாம் அடுப்பிலேயே இருந்தது.
அப்போது வயதான பாட்டி ஒருவர் அவர்கள் சமைத்துக்கொண்டிருக்கும் இடத்துக்கு எதிரில் இருந்த கல்லில் அமர்ந்தார். அவர் கார்த்திகா சமைப் பதையே பார்த்துக்கொண்டிருந்தார். நூடுல்ஸின் மணம் அவர் மூக்கில் ஏறியது. அவர் இதுவரை நூடுல்ஸ் சாப்பிட்டதில்லை. அவருக்கு இப்போது அதைச் சாப்பிட வேண்டும்போல் இருந்தது.
“டொட்டடாய்ங்... நூடுல்ஸ் ரெடி!” என்று அடுப்பிலிருந்து சட்டியைக் கீழே இறக்கினாள் கார்த்திகா.
நூடுல்ஸை ஐந்து பாகங்களாகப் பிரித்து ஒவ்வொரு தட்டிலும் வைத்தாள். பின்னர் ஆறாவதாக ஒரு தட்டை எடுத்து வைத்து, அதில் ஒவ்வொரு தட்டிலும் இருந்த நூடுல்ஸிலிருந்து சிறு பகுதியை எடுத்து வைத்தாள்.
“இந்தத் தட்டு யாருக்கு?”
“அந்தப் பாட்டிக்கு!” என்று எதிரில் அமர்ந்திருந்த பாட்டியைக் காட்டினாள் கார்த்திகா.
ஜிம்மி குட்டியின் தட்டிலிருந்த நூடுல்ஸை எடுக்க முயன்றபோது, “நான் கொடுக்க மாட்டேன். எல்லாமே எனக்குத்தான்” என்றான்.
“பாட்டிக்குக் கொஞ்சம் கொடுக்கலாம்டா!”
“ம்ஹும். நூடுல்ஸ் கிண்டறதுக்குப் பாட்டி என்ன கொடுத்தாங்க? நாம எல்லாரும் ஆளுக்கொரு சாமான் கொடுத்தோம்ல?” என்று ஜிம்மி நூடுல்ஸ் நிறைந்த தட்டை எடுத்துத் தன் முதுகுக்குப் பின்னே மறைத்துக்கொண்டான்.
“ஒருத்தர் ஏதாவது கொடுத்தால்தான் பதிலுக்குக் கொடுக்கணுமா ஜிம்மி? நம்ம வீட்ல கேட்டாலே நமக்கு வேண்டியதைச் செஞ்சு கொடுத்துடுவாங்க. ஆனா, நாம எல்லாரும் ஆளுக்கு ஒரு பொருள் கொண்டுவந்து, நாமே சேர்ந்து சமைச்சு சாப்பிடும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு! அதுக்காகத்தானே இந்தக் கூட்டாஞ்சோறு விஷயத்தைத் தொடர்ந்து செய்யறோம். பாட்டிஇதுவரை நூடுல்ஸ் சாப்பிட்ட தில்லை போல... ஆசையா பார்க்குறாங்க பாரு...”
“நீங்க வேணா கொடுங்க. நான் தர மாட்டேன்” என உறுதியாக மறுத்தான் ஜிம்மி.
“சரி, நம்ம மட்டும் கொடுக்கலாம்” என்ற கார்த்திகா, ஆறாவது தட்டைப் பாட்டியிடம் கொடுத்து, சாப்பிடச் சொன்னாள்.
மகிழ்ச்சியுடன் வாங்கிய பாட்டி, உடனே சுவைத்துப் பார்த்தார்.
“எங்க காலத்துல எல்லாம் இது இல்ல. நல்லா பண்ணிருக்கீங்க! நீங்க எல்லாம் நல்லாயிருப்பீங்க! படிச்சுப் பெரிய ஆளா வருவீங்க!” என்று ஆசிர்வதித்தார் பாட்டி.
உடனே ஜிம்மிக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. ஒரு கை நூடுல்ஸை எடுத்துப் பாட்டியிடம் கொடுத்தான்.
“இல்ல கண்ணு, நீ சாப்புடு” என்று சிரித்தார் பாட்டி.
“நானும் படிச்சுப் பெரிய ஆளா வருவேன்னு சொல்லுங்க பாட்டி” என்று அன்போடு கேட்டான் ஜிம்மி.
ஜிம்மியை இழுத்து அணைத்த பாட்டி, “நீ மகராசனா இருப்ப. படிச்சுப் பெரிய கலெக்டரா வருவே!” என்று சிரித்தார்.
ஜிம்மியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
“அடுத்த வாரமும் கூட்டாஞ்சோறு சாப்பிட வாங்க பாட்டி” என்றான்.
கார்த்திகாவும் மற்றவர்களும் ஜிம்மியைக் கட்டிப் பிடித்துக்கொண்டனர்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago