டிங்குவிடம் கேளுங்கள்: புதன் கோளைவிட வெள்ளிக் கோள் ஏன் வெப்பமாக இருக்கிறது?

By செய்திப்பிரிவு

சூரியனுக்கு மிக அருகில் புதன் கோள் இருந்தாலும் மிக வெப்பமான கோள் என்று வெள்ளியைச் சொல்கிறார்களே ஏன், டிங்கு?

– மா. கலையரசி, 7-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

நல்ல கேள்வி கலையரசி. சூரியக் குடும்பத்தின் இரண்டாவது கோள் வெள்ளி. இந்தக் கோளின் வளிமண்டலம் அடர்த்தியானது. இந்த வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு வாயு அதிகமாக இருக்கிறது. வெள்ளிக் கோளின் மேகங்கள் கந்தக அமிலத்தால் ஆனவை. எனவே வெள்ளிக் கோளில் இருந்து வெளியேறும் வெப்பத்தை ஈர்த்து வைத்துக்கொள்கின்றன. எனவே வெள்ளிக் கோள் புதன் கோளைவிட வெப்பமாக இருக்கிறது. சரி, புதன் கோள் ஏன் வெப்பம் குறைவாக இருக்கிறது?

சூரியனுக்கு அருகில் புதன் கோள் இருந்தாலும் அது மிகச் சிறியது. அதில் இருக்கும் வாயுக்களை வளிமண்டலமாக மாற்றி வைத்துக்கொள்ளும் ஈர்ப்பு சக்தி அதனிடம் இல்லை. அதனால் வெப்பம் விண்வெளிக்குச் சென்றுவிடுகிறது. எனவே புதன் கோளைவிட வெள்ளிக் கோள் வெப்பம் அதிகமாக இருக்கிறது.

கண்ணாடியில் ஏன் பிம்பங்கள் தலைகீழாகத் தெரிகின்றன, டிங்கு?

– பி. ஆஸ்டின் சிரில், 5-ம் வகுப்பு, எஸ்.வி.எம். பள்ளி, பல்லடம், திருப்பூர்.

கண்ணாடியில் பிம்பம் தலை கீழாகத் தெரிவதில்லை. இட, வல மாற்றமாக மட்டுமே தெரிகிறது. நாம் கண்ணாடியில் பார்க்கும்போது நம் பிம்பம் (ஒளி) கண்ணாடியில் விழுந்து, மீண்டும் திரும்பி (பிரதிபலிப்பு) வருகிறது. அதை நம் மூளை வேறு ஓர் உருவமாகப் பார்க்கிறது. அதாவது உங்கள் எதிரில் ஒருவர் நின்றால், அவரின் வலது கைக்கு நேரே உங்கள் இடது கை இருக்கும். இடது கைக்கு நேரே அவரது வலது கை இருக்கும். அதே மாதிரிதான் கண்ணாடியில் தெரியும் நம் பிம்பத்தை நம் மூளை வேறு ஓர் ஆளாக நினைத்துக்கொள்கிறது. நீங்கள் இடது கையை அசைத்தால், கண்ணாடியில் வலது கை அசைவது போல் தோன்றும். வலது கையில் ஒரு புத்தகத்தைப் பிடித்தால், கண்ணாடியில் இடது கை புத்தகத்தைப் பிடித்திருப்பதாக நமக்குத் தோன்றும். இது கண்ணாடியின் பிரதிபலிப்பு தன்மையால் ஏற்படுகிறது. அதை நாம் இடதை வலமாகவும் வலதை இடமாகவும் பார்க்கிறோம், ஆஸ்டின் சிரில்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE