இடம் பொருள் மனிதர் விலங்கு: பெஞ்சமின் ஏன் இப்படி இருக்கிறான்?

By மருதன்

பெ

ஞ்சமினை என்ன செய்வது என்று அவருடைய அப்பா, அம்மா இருவருக்கும் தெரியவில்லை. பொழுது விடிந்து, பொழுது சாய்ந்தால் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு தங்கள் மகனைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்துவிடுவார்கள். நமக்கு மட்டும் ஏன் இப்படியொரு விநோதமான பிள்ளை?

அக்கம் பக்கத்து குழந்தைகள் எல்லாம் துருதுருவென்று, எத்தனை புத்திசாலிகளாக இருக்கிறார்கள்? படிக்கச் சொன்னால் படிக்கிறார்கள். தூங்கு என்றால் தூங்குகிறார்கள். சொல் பேச்சு மீறுவதில்லை. பெஞ்சமின்? இவனுக்கு யாராவது, எதையாவது கற்றுக் கொடுத்துவிட முடியுமா? நாம் சொல்வதை என்றைக்காவது காது கொடுத்துக் கேட்டிருக்கிறானா?

ஒரே ஓர் உதாரணம். மழை பெய்தால் என்ன செய்வீர்கள்? தோட்டத்தில் இருந்தாலும் தெருவில் இருந்தாலும், எங்கே என்ன விளையாடிக்கொண்டிருந்தாலும் போட்டது போட்டபடி வீட்டுக்குள் ஓடிப் போவீர்களா, மாட்டீர்களா? இந்த பெஞ்சமின் என்ன செய்வான் தெரியுமா? மழை வரும் சத்தம் கேட்டால் போதும். எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு ஓடுவான். எங்கே? வீட்டுக்கு வெளியே!

பாவம் பத்து வயதுச் சிறுவனுக்கு என்ன தெரியும்? கொஞ்சம் மழையில் நனைந்து விளையாடினால் தப்பா என்று நீங்கள் கேட்கலாம். கொஞ்சம் மழையில் நனைந்தால் தப்பு இல்லைதான். காதைப் பிளக்கும் அளவுக்கு இடியும் கண்ணே கூசும் அளவுக்கு மின்னலும் பேய்போல் மழையும் இருக்கும்போது யாராவது வெளியில் சுற்றுவார்களா? கோபத்தை அடக்கிக்கொண்டு நாங்கள் கத்துவோம். அப்படி மழையில் என்ன செய்கிறாய் பெஞ்சமின்?

“அம்மா, நான் காற்றாடி விட்டுக்கொண்டிருக்கிறேன், என்னைத் தொந்தரவு செய்யாதே” என்பான். காற்றாடியா? மழையிலும் இடியிலும் யாராவது காற்றாடி விடுவார்களா, உள்ளே வா பெஞ்சமின் என்று நாங்கள் கத்துவோம். அவன் காதில் விழும் என்றா நினைக்கிறீர்கள்?

”அம்மா, அப்பா நான் மின்னலை ஆராயப் போகிறேன். மின்னும்போது ஏன் வெளிச்சம் தோன்றுகிறது? வெறும் வெளிச்ச மட்டும்தான் தோன்றுமா என்று பார்க்க வேண்டும். என்னைக் கொஞ்ச நேரம் ஆராய்ச்சி செய்ய விடுங்கள். இடியும் மின்னலும் மறைவதற்குள் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கிறது!”

16chsuj_Idam1.jpg

சரி வீட்டில் இருப்பதால்தானே இப்படியெல்லாம் செய்கிறான், பள்ளிக்கூடத்தில் கொண்டு போய்ச் சேர்ப்போம் என்று சேர்த்துவிட்டோம். வகுப்புக்குப் போனோமா, நான்கு விஷயங்கள் கற்றுக்கொண்டோமா, இந்தக் காற்றாடி எல்லாவற்றையும் விட்டு ஒழித்தோமா என்று இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆனால் பள்ளிக்கூடம் போன பிறகும் பெஞ்சமின் திருந்தவில்லை. பாடப் புத்தகங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மீண்டும் மழை, இடி, வெயில் என்று சுற்ற ஆரம்பிதான்.

ஒரு நாள் நீச்சல் குளத்துக்குச் சென்று ஆராய்ச்சி செய்யப் போகிறேன் என்றான். இன்னொரு நாள் உடைந்த பழைய மூக்குக் கண்ணாடிகளை எடுத்து வைத்துக்கொண்டு என்னவோ செய்துகொண்டிருந்தான். மற்றொரு நாள், கவிதை எழுதப் போகிறேன் என்றான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வந்துவிட்டோம். இவனுடைய எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறதோ? இந்தப் பெஞ்சமின் ஏன் மற்றவர்களைப்போல் இல்லை?

அதற்கான விடை ரொம்பக் காலம் கழித்துதான் தெரிந்தது. தெரிந்த பிறகு ஆச்சரியமடைந்தார்கள். பெஞ்சமினால் மற்றவர்களைப்போல் இருக்க முடியாது. ஏனென்றால் பெஞ்சமின் மற்றவர்களைப் போன்றவன் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக இதை உணர்ந்துகொண்ட பெற்றோரும் உறவினர்களும் இப்போது பெஞ்சமினைப் பற்றி வேறு விதமாகப் பேசத் தொடங்கிவிட்டார்கள். எப்படித் தெரியுமா?

எங்கள் பெஞ்சமினை யாரென்று நினைத்தீர்கள்? பள்ளிக்கூடத்தில் ஒழுங்காகப் படிக்கவில்லையே தவிர, அமெரிக்காவின் சிறந்த அறிவாளி யார் என்று கேட்டால் என் பிள்ளையின் பெயரைத்தான் எல்லாரும் இன்று சொல்கிறார்கள். அவனுக்குத் தெரியாத அறிவியலே கிடையாது. இந்த மின்னல் இருக்கிறதே, அதை முதல்முறையாக அறிவியல் ரீதியில் ஆராய்ந்தவன் எங்கள் பெஞ்சமின்தான்.

இப்போது பலரும் பயன்படுத்தும் புது விதமான மூக்குக் கண்ணாடி யார் கண்டுபிடித்தது என்று நினைக்கிறீர்கள்? பெஞ்சமின்! கட்டிடங்களை இடி தாக்காமல் இருப்பதற்காக இடிதாங்கியைக் கண்டுபிடித்தது இவன்தான். முதல்முறையாக அமெரிக்காவில் நூலகத்தை உருவாக்கியவர்களில் பெஞ்சமினும் ஒருவன். என் மகன் எழுதிய புத்தகம்கூட அங்கே இருக்கிறது.

அமெரிக்காவின் முதல் பொது மருத்துவமனை அவன் உருவாக்கியதுதான். அமெரிக்க அஞ்சல் துறை உருவாவதற்கும் அவன்தான் காரணம். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம், உங்களுக்குதான் நேரம் இருக்காது. எங்களுக்கு அப்போதே தெரியும். அவன் வயது பிள்ளைகள் எல்லாம் ‘ஐயோ மழை’ என்று வீட்டுக்குள் ஓடிவரும்போது, அவன் மட்டும் வெளியில் ஓடி மின்னலை ஆராய்ந்தபோதே தெரியும். எங்கள் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் உலகையே ஒரு கலக்கு கலக்குவான் என்று!

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்