கதை: தேவதை காட்டிய சொர்க்கம்!

By கீர்த்தி

‘சொர்க்கத்தில் எப்போதும் நறுமணம் வீசிக்கொண்டிருக்கும். அங்கே வசிப்பவர்களுக்குப் பசியே இருக்காது. யாரும் சண்டையே போட மாட்டார்கள்’ என்றெல்லாம் பாட்டி ஒருநாள் சுவாரசியமாகக் கதை சொன்னார்.

அதைக் கேட்டதிலிருந்து முரளிக்கும் வனிதாவுக்கும் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டது.

“வனி, நாமதான் தேவதைகள் பற்றி நிறைய படித்திருக்கிறோமே... அப்படி ஏதாவது தேவதையை வரச்சொல்லி சொர்க்கத்திற்குப் போய்ப் பார்த்தால் என்ன?” என்று தங்கையிடம் கேட்டான் முரளி.

“நாம் அழைத்தால் தேவதை வருமா?” என்று கேட்டாள் வனிதா.

“ஊர் எல்லையில் இருக்கிற அரச மரத்தடிக்குப் போய் தேவதையைக் கூப்பிட்டுப் பார்ப்போமா?” என்று கேட்டான் முரளி.

வனிதாவும் சம்மதித்தாள். இரண்டு பேரும் அரச மரத்தடிக்கு வந்து நின்றார்கள்.

“தேவதையே வாருங்கள், தேவதையே வாருங்கள்” என்று இரண்டு பேரும் கண்களை மூடி, சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

“வந்துவிட்டேன் குழந்தைகளே, உங்களுக்கு என்ன வேண்டும்?” என்கிற குரல் கேட்டு முரளியும் வனிதாவும் கண்விழித்துப் பார்த்தார்கள்.

எதிரில் அழகிய தேவதை ஒருவர் நின்றிருந்தார்.

“நாங்கள் சொர்க்கத்தைப் பார்க்க விரும்புகிறோம். எங்களைச் சொர்க்கத்திற்கு அழைத்துப் போக முடியுமா?” என்று கேட்டான் முரளி.

“நிச்சயமாக அழைத்துப் போகிறேன். ஆனால், நான் சொன்னபடி நடந்தால்தான் உங்களை அழைத்துப் போவேன்” என்றார் தேவதை.

“என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டாள் வனிதா.

“உங்கள் கண்களை மூடிக்கொள்ள வேண்டும். நான் கண்களைத் திறக்கச் சொல்லும்போதுதான் திறக்க வேண்டும்” என்றார் தேவதை.

அதற்கு இரண்டு பேரும் சம்மதிக்க, தேவதை அவர்களைத் தன் தோள்களில் ஏற்றிக்கொண்டு பறந்தார். வெகுநேரம் எங்கெங்கோ பறந்து சென்ற தேவதை, “குழந்தைகளே, இறங்குங்கள். சொர்க்கம் வந்துவிட்டது” என்றார்.

முரளியும் வனிதாவும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். பூக்களின் நறுமணம் வீசியது. மல்லிகையும் செண்பகமும் ரோஜாக்களும் பூத்துக் குலுங்கின.

முரளியையும் வனிதாவையும் பூந்தோட்டத்திற்கு அப்பால் தேவதை அழைத்துச் சென்றார். அங்கே வயல்களில் நெற்கதிர்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்தன. சற்றுத் தொலைவில் மா, வாழை, பலா, தென்னை மரங்கள் நிறைந்த தோப்புகள் இருந்தன. சில இடங்களில் தென்பட்ட மனிதர்கள் பூமியில் வாழும் மனிதர்களைப் போலவே இருந்தார்கள். ஆனால், அவர்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள்.

மாம்பழங்களையும் வாழைப்பழங்களையும் சாப்பிடக் கொடுத்தார் தேவதை. அவ்வளவு ருசியாக இருந்தன. பொழுது போனதே தெரியவில்லை.

“தேவதையே, நாங்கள் ஊருக்குச் செல்ல வேண்டும்” என்றான் முரளி.

“நான் உங்களைச் சொர்க்கத்திற்கு அழைத்து வருவதாக மட்டும்தானே சொன்னேன்? திரும்பவும் ஊரில் கொண்டு விடுவதாகச் சொல்லவில்லையே. அதனால் நீங்களே இந்த வழியாக நடந்து ஊருக்குச் செல்லுங்கள்” என்று சொன்ன தேவதை, சட்டென்று மறைந்தார்.

முரளிக்கும் வனிதாவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

“தேவதை இப்படி ஏமாற்றிவிட்டாரே! நம்மால் அவ்வளவு தொலைவு நடக்க முடியுமா?” என்று கேட்டாள் வனிதா.

“தேவதை சொன்ன திசையிலேயே நடக்கலாம்” என்று சொன்ன முரளி, தங்கையுடன் நடக்க ஆரம்பித்தான்.

பதினைந்தே நிமிடங்களில் அவர்களின் ஊர் எல்லை வந்துவிட்டது!

“அண்ணா, சொர்க்கம் நம் ஊருக்கு அருகிலேயேதான் இருக்கிறதா?” என்று ஆச்சரிய மாகக் கேட்டாள் வனிதா.

“எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது” என்று முரளி சொல்லிக்கொண்டிருந்தபோது, அதே தேவதை மீண்டும் வந்து நின்றார்.

“தேவதையே, நாங்கள் எப்படிச் சொர்க்கத்திலிருந்து இவ்வளவு சீக்கிரம் எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தோம்?” என்றான் முரளி.

“குழந்தைகளே, நான் உங்களை அருகிலுள்ள ஊருக்குத்தான் அழைத்துச் சென்றேன். அங்குள்ள மக்கள் நல்ல உழைப்பாளிகள். அவர்கள் அழகிய பூந்தோட்டத்தை உருவாக்கி வைத்திருப்பதால் அங்கே எப்போதும் நறுமணம் வீசிக் கொண்டிருக்கிறது.

தங்கள் உழைப்பால் உணவு தானியங்களை அதிகமாக உற்பத்தி செய்வதால், அங்கே பசி என்பதே இல்லை. எப்போதும் தங்கள் வேலையைக் கவனித்துக் கொண்டிருப்பதால் வீண் சண்டைகள் எதுவும் வருவது இல்லை.

சொர்க்கம் இப்படி இருக்கும் என்றுதானே கேள்விப்பட்டீர்கள். நீங்கள் நினைத்தால் நீங்கள் இருக்கும் இடத்தையும் சொர்க்கமாக மாற்றலாம்” என்று சிரித்தபடியே சொன்ன தேவதை, மீண்டும் மறைந்துவிட்டார்!

“நாம் இருக்கும் இடத்தை நாமும் சொர்க்கமாக மாற்றுவோம்” என்று சொன்ன முரளியும் வனிதாவும் மகிழ்ச்சியாக வீட்டிற்குத் திரும்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்