இளம் வீராங்கனை: இந்தியாவின் பெருமிதம் தினிதி!

By ஸ்நேகா

பெங்களூருவைச் சேர்ந்த 14 வயது தினிதி தேசிங்கு, நடந்து கொண்டிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாகக் கலந்து கொண்ட மிக இளம் விளையாட்டு வீராங்கனை. பெண்களுக்கான 200 மீ. ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் ஸ்ரீஹரி நட்ராஜுடன் இணைந்து பங்கேற்றார். ஆனால், தினிதியும் ஸ்ரீஹரியும் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை. என்றாலும் இளம் வயதில் ஒலிம்பிக் வரை சென்றதே தினிதியின் மிகச் சிறந்த சாதனைதான்!

தினிதியால் மூன்று வயது வரை சரியாகப் பேச முடியவில்லை. அதற்குப் பிறகும் பிறருடன் பேசுவதை அவர் தவிர்த்து வந்தார். இந்தப் பிரச்சினையைச் சரிசெய்வதற்காக, தினிதியின் பெற்றோர் அவருக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க முடிவு செய்தார்கள். ஆனால், தண்ணீரைக் கண்டு தினிதி பயந்தார்.

சிறிது சிறிதாக அவரது பயம் நீங்கிய பிறகு நீச்சலைக் கற்றுக்கொண்டார். ஆனாலும் போட்டிகள் என்றால் அவருக்குக் காய்ச்சலும் வாந்தியும் வயிற்றுப் போக்கும் வந்துவிடும். மங்களூருவில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிக்குச் சென்றபோது தினிதி வாந்தி எடுத்தார். ஆனாலும் குளத்தை மட்டுமாவது பார்த்துவிட்டுத் திரும்பலாம் என்று தினினியின் அம்மா, அவரை அழைத்துச் சென்றார். ஆனால், அந்தப் போட்டியில் தினிதி தங்கப் பதக்கத்தை வென்றார்!

நீச்சல் பற்றிய பயம் விலகியது. ஆர்வம் அதிகமானது. கடினமாக உழைக்க ஆரம்பித்த தினிதி, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஏழு தங்கப் பதக்கங்களை வென்ற இளம் வீராங்கனை என்கிற சாதனையைப் படைத்தார்!

உலக அளவிலான விளையாட்டு வீரர்களைச் சந்திப்பதிலும் தன் அனுபவங்களைப் புத்தகமாக எழுதுவதிலும் ஆர்வம் கொண்ட தினிதி, 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் இந்தியாவுக்குப் பதக்கத்தைப் பெற்றுத் தருவார்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE