உயிர் என்றால் என்ன? அது எப்படித் தோன்றுகிறது? எப்படி வளர்கிறது? மூளையைக் கசக்கிக்கொண்டு நான் ஆண்டுக்கணக்காக ஆராய்ந்து கொண்டிருந்தபோது, ஒருநாள் சத்தமின்றிப் பூப்போல நீ தோன்றினாய். வண்டு போன்ற கண்களை அங்கும் இங்கும் சுழலவிட்டுத் திருதிருவென்று விழித்தாய்.
இது என்ன இடம்? நான் எப்படி இங்கே வந்தேன்? பூதத்தைப் பார்ப்பதுபோல் என்னைக் கண்டு மிரண்டு நிற்கும் இந்த மனிதன் யார்? நான்தான் புதிதாகப் பிறந்தேன், அழுகிறேன். இந்த உருவமும் ஏன் என்னைப் பார்த்து அழுதுகொண்டு நிற்கிறது? சின்னஞ்சிறிய என்னைக் கண்டு ஏன் அஞ்சுகிறது?
போ, டார்வின். உன் மகள்தான் என்று என்னைப் பிடித்துத் தள்ளிய பிறகே உன்னை நெருங்கினேன். உன் இளஞ்சிவப்பு உடலையும் இளம் விரல்களையும் பஞ்சு தலைமுடியையும் பொம்மை மூக்கையும் கத்துவதா, அழுவதா என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த சின்ன உதடுகளையும் தத்தக்கா பித்தக்கா என்று துடித்துக்கொண்டிருந்த கால்களையும் கண்ட அந்தக் கணம் என்னை மறந்தேன்.
என் முழு உலகாக, பிரபஞ்சமாக நீ மாறிப்போனாய், ஆன். மீன்களையும் விலங்குகளையும் பறவை களையும் தேடித் தேடி ஆராய்ந்து கொண்டிருந்த நான், எல்லாவற்றையும் தள்ளி வைத்துவிட்டு ஒரே ஒரு சிறிய உயிரின் முன்னால் குவிந்தேன். ‘நானா, சிறிய உயிர்? என்ன துணிச்சல் உனக்கு?’ என்று என் முதுகின்மீது ஏறி நின்று மிரட்டினாய்.
‘உன் பரிணாமக் கோட்பாட்டைப் பரணில் ஏற்றிவிட்டு, நான் சொல்லும் பாடலைப் பாடு! தீவுகளையும் தாவரங்களையும் தவளைகளையும் மறந்துவிட்டு என் தாடையைப் பிடித்துக் கொஞ்சு! உலகுக்குதான் நீ உயிரியலாளன், ஆய்வாளன், எழுத்தாளன். எனக்கு நீ அப்பா மட்டும்தான்!
எனது ஆய்வேடுகளை ஆன் நிரப்பத் தொடங்கினாள். என் மகள் எவ்வளவு மணி நேரம் உறங்குகிறாள்? எவ்வளவு முறை புரண்டுப் படுக்கிறாள்? எவ்வளவு முறை அழுகிறாள்? எப்படிக் கனவு காண்கிறாள்? எப்போது அதிகம் கொட்டாவி விடுகிறாள், உறங்கும்போதா, விழித்திருக்கும்போதா? ஒரு நிமிடத்தில் எத்தனை முறை கண் சிமிட்டுகிறாள்? ‘அச்சூசூசூ’ என்று எத்தனை முறை தும்முகிறாள்? எத்தனை முறை என் பேனாவை என் கையிலிருந்து எடுத்து வீசுகிறாள்?
எனக்குப் பூவைக் காட்டு, நிலாவைக் காட்டு, பேயைக் காட்டு என்று எத்தனை முறை நச்சரிக்கிறாள்? காரணமே இல்லாமல் அப்பா என்று கத்திக்கொண்டே ஓடிவந்து எத்தனை முறை என்னை அணைத்துக்கொள்கிறாள்? நான் அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் போது, என் காலைப் பிடித்து ஏறி வந்து என் மடிமீது எத்தனை முறை பூனைபோல் சுருண்டு படுத்துக்கொள்கிறாள்?
ஒரு நொடிகூட என்னைக் கீழே வைக்காமல் எங்கு சென்றாலும் சுமந்து சென்ற நீ, இப்போது என்னை ஏறிட்டுக்கூடப் பார்ப்பதில்லை. உன் மகள் என் இடத்தைப் பிடித்துக்கொண்டுவிட்டாள் என்று சண்டை போடுகிறது நான் வாசிக்க மறந்த என் புத்தகம். இந்த டார்வின் ஏன் வெளியிலேயே வருவதில்லை, அப்படி வீட்டில் உட்கார்ந்துகொண்டு என்ன ரகசிய ஆய்வு செய்துகொண்டிருக்கிறான் என்பதைக் கண்டறிவதற்காக வீட்டுக்கு வந்த நண்பர்கள் நானும் நீயும் கரடி பொம்மையோடு சேர்ந்து நடனமாடிக் கொண்டிருந்ததைக் கண்டு திகைத்து நின்றுவிட்டார்கள்.
சார்லஸ் டார்வின் என்று ஒருவர் இங்கே இருந்தாரே, அவரைத் தெரியுமா என்று அவர்கள் குனிந்து உன்னிடம் கேட்டபோது, நீ அவர்களிடம் திருப்பிக் கேட்டாய். ‘தெரியாது, உனக்கு ஆன் அப்பாவைத் தெரியுமா?’ என்று.
உன் சிறிய கையை விரித்து வைத்து அதில் தலை வைத்து உறங்குகிறேன். கூரான சிறு பல்லால் என் கன்னத்தை நீ கடிக்கும் ஒவ்வொருமுறையும் மற்றொரு கன்னத்தை உன் பக்கம் திருப்புகிறேன். உன் முகத்தில் வந்து, வந்து விழும் முடியை அதட்டி ஒதுக்கி விடுகிறேன்.
உலகம் முழுக்க நிரம்பி இருக்கிறார்கள் தந்தைகளும் குழந்தைகளும், செடிகளையும் மலர்களையும்போல். ஆனால் என்னைத் தேர்ந்தெடுத்து, எனக்காகப் பிறந்து வந்தவள் நீ. எல்லாப் பூக்களும் அழகுதான் என்றாலும் என் தோட்டத்தில் எனக்கே எனக்கென்று மலர்ந்த சிறுமலர் நீ. என் இதயத்தின் வண்ணம். என் வாழ்வின் வாசம். இயற்கையின் தேர்வு.
ஓர் உயிர் தோன்றுவதையும் படிப்படியாக வளர்வதையும் ஒரு கட்டத்தில் முற்றிலும் வேறொன்றாக மாறுவதையும் கண்டிருக்கிறேன். இன்னொரு வகை வளர்ச்சியும் உண்டு என்பதை உன்னைப் பார்த்தும் உன்னோடு பழகியும்தான் உணர்ந்துகொண்டேன்.
என் பெரிய கையைப் பற்றிக்கொண்ட கணம் தொடங்கி என் கண்முன்னால் நீ சிறிது சிறிதாக ஒரு சிறுமியாக வளரத் தொடங்கியிருக்கிறாய். உன் சிறிய கையைப் பற்றிக்கொண்ட கணம் தொடங்கி நான் படிப்படியாக ஒரு குழந்தையாக வளர ஆரம்பித்திருக்கிறேன்.
நான் உன்னை வளர்த்தெடுப்பதுபோல் நீ என்னை வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறாய். நான் ஓர் உலகுக்காக உன்னைத் தயார் செய்துகொண்டிருக்கிறேன். அதுவல்ல உலகம், இதுதான் என்று உன் சிறிய ஆள்காட்டி விரலால் இன்னோர் அதிசய உலகை நீ எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறாய்.
நானா, அங்கா, எப்படி என்னால் நுழைய முடியும் என்று அஞ்சி நின்ற என் விரல்களைப் பற்றிக்கொண்டு, வா என்னோடு என்று அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறாய். நீ என்னைப் பின்தொடரவில்லை, நான் உன் சிறிய பாதங்களைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறேன். தொடக்கத்தில் இருந்து எல்லாவற்றையும் எனக்கு மீண்டும் கற்றுக்கொடு, ஆன். உன் உலகில் நீ ஆசிரியர். நான் ஓர் எளிய மாணவன்.
(இனிக்கும்)
அனைத்து உயிரினங்களின் மீதும் அன்பு செலுத்துவதே மனிதனின் உன்னதமான பண்பு. - சார்லஸ் டார்வின், புகழ்பெற்ற விஞ்ஞானி.
- marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago