காடே நடுங்கிக்கொண்டிருந்தது. பறவைகள் கூடுகளைவிட்டு நகர்வதாக இல்லை. கிர், கிர்ரென்று பறந்துகொண்டிருந்த பூச்சிகள் அடங்கிவிட்டன. பாம்புகள் குளிரில் நடுங்கி நடுங்கி முன்பைவிட அதிகம் வளைந்துவிட்டன. எப்போதும் மீசையை முறுக்கிவிட்டுக்கொண்டு வலம்வரும் சிங்கம் எலியைப்போல் சுருண்டு படுத்துவிட்டது. உர்ரென்று உறுமும் புலியாரை எங்கு தேடினாலும் காணவில்லை. சரி, இந்த யானை எங்கே போனது, யாருக்காவது தெரியுமா?
உங்களுக்கெல்லாம் பரவாயில்லை ஏதாவது ஒரு குகைக்குள் சென்று படுத்துக்கொள்ளலாம். நான் என்ன செய்வது? என்னுடைய பெரிய கழுத்தை எப்படிக் குளிரிலிருந்து காப்பாற்றுவது என்றது ஒட்டகச்சிவிங்கி. குகை மட்டும் கதகதப்பாகவா இருக்கிறது? உள்ளே போய்ப் பார் தெரியும் என்று சலித்துக்கொண்டது நரி. பார், இத்தனை தடித் தோலை வைத்துக்கொண்டு நானே நாட்டியம் ஆடிக்கொண்டிருக்கிறேன் என்று இளித்தது கரடி.
அப்பப்பா, அம்மம்மா என்று இரு கைகளையும் பரபரவென்று தேய்த்து கன்னத்தில் வைத்துக்கொண்டது காண்டாமிருகம். ஐயோ, காண்டாவுக்கே இந்த நிலைமையா என்று ஓநாய் ஊளையிட்டது. இந்தக் குளிர் நம் எல்லோரையும் அழித்து விடுமா என்று நடுங்கியபடியே கேட்டது மான்.
அதுவரை அமைதியாக இருந்த வயதான முள்ளம்பன்றி தொண்டையைக் கனைத்துக்கொண்டது. “நண்பர்களே, இப்படியொரு குளிரை நாம் இதுவரை பார்த்தது கிடையாது என்பது உண்மைதான். ஆனால் பயப்பட வேண்டாம். இந்தக் காட்டில் நாம் எவ்வளவோ பிரச்சினைகளைச் சந்தித்திருக்கிறோம். கடும் வெப்பம், விடாமல் பெய்த மழை, பெரிய மரங்களைப் பிடுங்கிப் போடும் புயல், திடீரென்று பற்றி எரியும் காடு என்று பலவற்றைப் பார்த்திருக்கிறோம். இந்த முறை கடும் குளிர். இதையும் நாம் சமாளிக்கத்தான் வேண்டும்.”
“அதான் எப்படி?” என்றது கரடி.
“குளிரைப் போக்க என்ன தேவை? சூரியன். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஏன் ஒரு சூரியனை உருவாக்கக் கூடாது?”
“ஹாஹா, இந்த நடுக்கத்தில்கூட உன்னால் எப்படி வேடிக்கையாகப் பேச முடிகிறது?” என்றது காண்டாமிருகம்.
“நான் சொல்வது உண்மை காண்டா. நம் எல்லோரிடமும் கொஞ்சம் வெப்பம் இருக்கிறது. நாம் அனைவரும் கரம் கோத்து, நெருக்கமாக ஒருவரோடு ஒருவர் இணைந்தால் நம்மால் ஒரு சூரியனை உருவாக்க முடியும். பிறகு நடுக்கமும் குறைந்துவிடும்.”
“அதெப்படி நாம் ஒன்று சேரமுடியும்?” என்றது பாம்பு. “எனக்கும் கீரிக்கும் நீண்ட காலப் பகை. நாங்கள் எப்படி ஒன்றுசேர்வது?”
மானும் அலறியது. “ஐயோ என்னைப் போய் சிங்கத்தோடு ஒன்று சேரச் சொல்கிறாயா? என்னைப் பார்க்க உனக்குப் பாவமாக இல்லையா முள்ளா தாத்தா?”
“என்னோடு சேர்வதற்கு தவளை, பறவை ஏதாவது தயாரா?” என்று விஷமத்துடன் வாலை ஆட்டியபடி சிரித்தது முதலை.
முள்ளம்பன்றி புன்னகை செய்தது. “நண்பர்களே, நாம் சில தியாகங்களைச் செய்தால்தான் நம்மால் சூரியனாக மாறமுடியும். பழைய பகையை மறந்து எல்லோரும் நெருக்கமாக ஒரே இடத்தில் திரண்டு வரவேண்டும். ஆம், மானும் சிங்கமும் புலியும் கை சேர்த்துக்கொள்ள வேண்டும். எலியும் பூனையும் தோள்மீது கை போட்டுக்கொள்ள வேண்டும். பாம்பும் கீரியும் அணைத்துக்கொள்ள வேண்டும். கொக்கின் பெரிய வாய்க்குள் சென்று மீன் ஒளிந்துகொள்ள வேண்டும். ஒருவரும் இன்னொருவரை எதிரியாகப் பார்க்கக் கூடாது. நம் எல்லோருக்கும் பொது எதிரி, குளிர். என்ன சொல்கிறீர்கள்?”
சற்று நேரம் காத்திருந்து பார்த்தது. ஒருவரிடமும் பதிலில்லை என்றதால், முள்ளம்பன்றி அங்கிருந்து அமைதியாக நகர்ந்து சென்றது. தன்னுடைய வீட்டுக்குப் போய் எல்லோரையும் அழைத்து, தனது யோசனையைச் சொன்னது. சரி, தாத்தா சொல்வதைக் கேட்டுதான் பார்ப்போமே என்று எல்லா முள்ளம்பன்றிகளும் நெருக்கமாக அமர்ந்து கைகோத்துக்கொண்டன.
ஆனால் அது அத்தனை சுலபமாக இல்லை. தாத்தா இவன் என்னை வேண்டுமென்றே குத்துகிறான் என்றது ஒரு குட்டி. இல்லை, இவன்தான் முதலில் என் கையில் குத்தினான் என்றது இன்னொரு குட்டி. பெரியவர்களும்கூட முணுமுணுத்தார்கள். “நான் சேர்த்து வைத்திருந்த பூச்சியை அவன் போன வாரம் திருடிச் சாப்பிட்டுவிட்டான். அவனோடு நான் சேரமாட்டேன் போ!” தாத்தா விடவில்லை.
“நண்பர்களே, நமக்காக இல்லாவிட்டாலும் காட்டுக்காக நாம் சேர்ந்தே தீரவேண்டும். சண்டை, சச்சரவுகளை விடுங்கள். எல்லோரும் கவனமாக அவரவர் முட்களைச் சுருட்டி வைத்துக்கொள்ளுங்கள். யாரையும் காயப்படுத்தாதீர்கள்.”
அலுத்துக்கொண்டேதான் நெருங்கினார்கள். ஆனால் நெருங்க நெருங்க, அவர்களுக்கு இடையில் வெப்பம் உருவாவதை உணரமுடிந்தது. சில நிமிடங்களில், எல்லா முள்ளம்பன்றிகளும் தோளில் கைபோட்டு ஒன்று சேர்ந்துவிட்டன.
அப்புறமென்ன? குளிர் போனதும் விசில், பாட்டு என்று இடமே கலகலப்பாகிவிட்டது.
அங்கே என்ன சத்தம் என்று எட்டிப் பார்த்த மற்ற விலங்குகளுக்கு ஆச்சரியம். ஒரேயொரு முள்ளம்பன்றிகூட நடுங்கவில்லை. அப்படியானால் தாத்தா சொன்னது சரிதானா? உடம்பெல்லாம் நூற்றுக்கணக்கான முள்களை வைத்துக்கொண்டிருக்கும் முள்ளம்பன்றிகளே ஒன்றோடு ஒன்று நெருக்கமாகச் சேரும்போது நாம் ஏன் சேரக் கூடாது? ஒருமுறை முயன்று பார்த்தால்தான் என்ன?
அதற்குப் பிறகு நடந்ததை நீங்கள் பார்க்க வேண்டும். கீரியும் பாம்பும் கட்டிப்பிடித்துக்கொண்டன. சிங்கத்தின் பிடரியில் குட்டி எலிகள் கதகதப்பாக மறைந்துகொண்டன. மானின் தோள்மீது கரடி கை போட்டுக்கொண்டது. ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தைப் பறவைகள் மூடிக்கொண்டன. முள்ளம்பன்றிகளும் காண்டாமிருகங்களும் யானைகளும் பசைபோல் ஒட்டிக்கொண்டன. ஆம், சில சலசலப்புகளும் இருந்தன. “தாத்தா, அந்தக் குட்டி முள்ளம்பன்றி என்னை வேண்டுமென்றே குத்துகிறது” என்றது ஒரு குட்டி மான். “இல்லை தாத்தா அந்த மான்தான் வாலால் என்னைச் சீண்டிது” என்றது குட்டி முள்ளம்பன்றி. மற்றபடி, நடுக்கமாவது, குளிராவது, குளிர் போயே போச்சு!
கட்டுரையாளர், எழுத்தாளர் - தொடர்புக்கு: marudhan@gmail.com
ஓவியங்கள்: லலிதா
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago