தேன் மிட்டாய் - 10: இந்த உலகம் எப்போது மாறும்?

By மருதன்

ஒரு நல்ல காபி அருந்தினால், ஒரு நல்ல புத்தகம் வாங்கினால், ஒரு நல்ல சட்டை அணிந்தால், பூங்காவில் சற்று நேரம் நிம்மதியாக நடந்தால், உட்கார்ந்து ஒரு நாலு வரி எழுதினால் மனம் உடனே சோர்ந்துவிடுகிறது. நான் என்ன தவறு செய்தேன்? எனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது? நான் என்ன செய்தால் நிலைமை மாறும்?

ஒன்றுமே புரியவில்லையே சாம்ஸ்கி! இவை எல்லாம் நல்ல விஷயங்கள்தானே? இவற்றை எல்லாம் செய்தால் மனம் மகிழ்ச்சிதானே அடைய வேண்டும்? உங்களுக்கு மட்டும் ஏன் சோர்வு ஏற்படுகிறது? சம்பந்தம் இல்லாமல் ஏன் என்னென்னவோ யோசிக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். எனக்கு என்னவோ எல்லாவற்றுக்கும் சம்பந்தம் இருப்பதாகவே தோன்றுகிறது.

அமெரிக்கா எனும் செழிப்பான நாட்டில் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். என் வீதி பளபளப்பானது. ஒரு நாளைக்கு நான்கு முறை துடைத்துத் தேய்த்துச் சுத்தப்படுத்துவார்கள். மைதானம்போல் கடைகள் விரிந்திருக்கும்.

அங்கே கிடைக்காததே இல்லை. என் வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளிக்கூடத்தைப் பார்த்தால் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்போல் இருக்கும். அவ்வளவு ஒழுங்கு! ஒரு வீட்டில் ஐந்து பேர் இருந்தால் குறைந்தது ஐந்து கார்களாவது அவர்களிடம் இருக்கும்.

குழாயைத் திருப்பினால் சுத்தமான தண்ணீர் பெருகும். நல்ல பழங்கள், நல்ல காய்கறிகள், நல்ல பால், நல்ல உணவு வகைகள் என்று விரும்பும் அனைத்தும் கிடைக்கும். எங்கள் பூங்காக்கள் அழகானவை. எங்கள் வீடுகள் நேர்த்தியானவை. எங்கள் தோட்டங்கள் அற்புதமானவை. எங்கள் குழந்தைகள் விரும்பும் அனைத்தையும் நாங்கள் வாங்கிக் கொட்டுகிறோம்.

அவர்களுக்குத் தேவைப்படும் எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறோம். எவ்வளவு விலை உயர்ந்த விளையாட்டுப் பொருள் கேட்டாலும் இதோ என்று வாங்கி வந்து கொடுத்துவிடுவோம். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எங்களுக்கு ஒரு விஷயம் பிடித்திருக்கிறது என்றால் தயங்காமல் வாங்கிவிடுவோம். அதன் விலை என்ன, இது எவ்வளவு என்றெல்லாம் யோசிக்கவே மாட்டோம்.

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் உல்லாசமாகவும் உற்சாகமாகவும் வாழ வேண்டும். எப்போதும் இன்பமாகவும் சுகமாகவும் இருக்க வேண்டும். இதுதான் இங்குள்ள ஒவ்வொருவரின் கனவு. அந்தக் கனவைத் தேடித்தான் இங்கே ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

அந்தக் கனவுதான் என்னைச் சோர்வில் தள்ளுகிறது. அந்தக் கனவுதான் என்னை உறங்கவிடாமல் செய்கிறது. நம் வானில் எவ்வளவு நட்சத்திரங்கள் இருக்கின்றவோ அதைக் காட்டிலும் அதிகமான மக்கள் இருளில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். கடுங்காபி அருந்தலாமா அல்லது பழச்சாறா என்று இங்கே நாம் அமர்ந்து விவாதித்துக்கொண்டிருக்கிறோம்.

கையில் இருப்பதை இப்போதே சாப்பிட்டுத் தீர்த்துவிட்டால் அடுத்த வேளைக்கு என்ன செய்வது என்று உலகம் முழுக்க ஒரு பெரும் கூட்டம் கவலையோடு இருக்கிறது. நான்கு பேர் உணவை ஒருவரே சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒரு தட்டின் முன்னால் ஒரு முழுக் குடும்பமும் உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

அழகிய பூ வேலைப்பாடுகள் கொண்ட ஒரு பெரிய பீங்கான் கோப்பை என் மேஜையில் எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. அதில் நிறைந்திருக்கும் காபியின் நறுமணம் அறை முழுக்கப் பரவி இருக்கிறது. நான் வாழும் இதே உலகில் குழந்தைகள் நாள் முழுக்கக் குப்பைக்கூளங்களைக் கிளறி, பை பையாக பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் சம்பாதிக்கும் காசைவிட நான் சில நிமிடங்களில் அருந்தி முடிக்கப்போகும் காபியின் விலை பல மடங்கு அதிகம். என் வீட்டு நூலகத்தில் இருக்கும் ஒரு புத்தகத்தின் விலையில் பத்துக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க முடியும்.

இந்த நொடி பல நாடுகளில் போர் நடந்துகொண்டிருக்கிறது. பல வீடுகள் சிதறி விழுந்துகொண்டிருக்கின்றன. நானோ அமைதியான ஒரு நாட்டில் அமர்ந்து எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறேன். போர் எப்படி அவர்களைப் பாதிக்கிறதோ அதேபோல் அமைதி என்னைப் பாதிக்கிறது. என் மேஜையில் உள்ள காபியும் பழங்களும் பாலும் இறைச்சியும் என்னை நோக்கி ஆயிரம் கேள்விகளை வீசுகின்றன.

காற்றோட்டமான என் வீட்டைக் கண்டு, அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் என் ஆடைகளைக் கண்டு, தூசு படாத என் புத்தகங்களைக் கண்டு, சுத்தமான என் பூங்காவைக் கண்டு, பளபளப்பான வீதிகளைக் கண்டு, விலை உயர்ந்த கார்களைக் கண்டு நான் தலைகுனிந்து நிற்கிறேன்.

உலகின் பெரும் பகுதி உடைந்துபோய் இருக்கும்போது எனக்கு அருகில் இருக்கும் சுத்தத்தை எப்படி என்னால் கொண்டாட முடியும்? என் காபியின் நறுமணத்தை எப்படி என்னால் ரசிக்க முடியும்? என் அமைதியான, அழகான, வசதியான வாழ்வை எப்படி என்னால் சகித்துக்கொள்ள முடியும்? என் உலகின் கால்களில் கனமான சங்கிலிகள் சிக்கி இருக்கும்போது நான் மட்டும் எப்படிச் சுதந்திரமாக நடைபோட முடியும்? என் உலகம் துன்பத்தில் இருந்து மீளும்வரை எனக்கு இன்பம் இல்லை. நிம்மதி இல்லை. நிறைவு இல்லை.

என்னிடம் இருக்கும் ஒரே வளம் சிந்தனை. அதை நான் என் உலகுக்கு வழங்குகிறேன். அது மட்டுமே முடியும் என்னால். எனவே, அதைச் செய்கிறேன். எனது உலகம் தன் கவலைகளைக் கைவிடும்போது நானும் என் கவலைகளில் இருந்து வெளியே வருவேன். அப்போது என் காபியை ரசித்துப் பருகுவேன்.

(இனிக்கும்)

- marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

22 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்