நாட்டில் வசிக்கும் காகம் ஒன்று காட்டுக்கு வந்தது.
“என்ன, இந்தப் பக்கம்? உனக்கு மனிதர்களோடு வசிக்கத்தானே பிடிக்கும்? சோறு, வடை என்றெல்லாம் சாப்பிடத்தானே பிடிக்கும்?” என்று கேட்டது காட்டில் வசிக்கும் காகம்.
“இனி நான் நாட்டில் வசிக்க மாட்டேன். காடுதான் இனி நிரந்தர இருப்பிடம்” என்று வருத்தத்துடன் சொன்னது நாட்டிலிருந்து வந்த காகம்.
அந்த வழியே வந்த நரி காகத்தைப் பார்த்து, “அடடே, என்ன இந்தப் பக்கம்?” என்று விசாரித்தது.
» ‘நான் தூங்கிவிட்டேன்’ - ட்ரம்ப் உடனான விவாதம் குறித்து பைடன் விளக்கம்
» உ.பி. நெரிசல் சம்பவ பலி 134 ஆக அதிகரிப்பு: போலே பாபா தலைமறைவு
“இனிமேல் இங்கேதான் இருக்கப் போறானாம்” என்றது காட்டுக் காகம்.
“என்ன ஆச்சு?” என்று கேட்டது நரி.
“நீயும் நானும் எவ்வளவு அன்பா இருப்போம்! உன்னையும் என்னையும் வைத்து ஒரு கதையை உருவாக்கி, அதில் நீ ஏமாற்றுக்காரானாகவும் என்னைத் திருடனாகவும் மாற்றிவிட்டார்கள்.”
“அப்படியா?”
“ஆமாம், என்னால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நரி என்று சொன்னாலே அது தந்திரமானது என்று மனிதர்கள் நினைக்கிறார்கள். ஏதாவது விசேஷம் என்றால் என்னைக் கூப்பிட்டுச் சாப்பாடு வைக்கிறார்கள். சாதாரண நாள்களில் உணவுப் பொருள்கள் பக்கம் சென்றால் கம்பால் விரட்டுகிறார்கள். அவர்களுக்கு வேண்டும் என்றால் நம்மை அழைக்கிறார்கள், வேண்டாம் என்றால் தடியால் விரட்டுகிறார்கள்.”
“வேட்டையாடும் விலங்குகள் தந்திரமாகத்தான் வேட்டையாட முடியும். இல்லை என்றால் இரை தப்பிவிடும். சொல்லிவிட்டா வேட்டையாட முடியும்?” என்று கேட்டது நரி.
நரியும் காகமும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்த முயல், புதரிலிருந்து வெளியே வந்தது.
“ஆமை அண்ணாவுக்கும் எனக்கும் ஓட்டப்பந்தயம் வைத்து, அண்ணா என்னை ஜெயிக்கிற மாதிரி ஒரு கதை இருக்கிறதாகக் கேள்விப்பட்டேன். என்ன அநியாயம்? இந்தக் கதையைக் கேட்ட ஆமை அண்ணா, லாஜிக்கே இல்லாமல் யோசிப்பதில் மனிதர்களுக்கு நிகர் யாருமில்லை என்று சொன்னார்” என்றது முயல்.
உணவு தேடிக் கொண்டுவந்த ஆமை, “எனக்கு ஏற்ற மாதிரி மெதுவா நடக்கறவங்களோட போட்டி வைக்கலாம். இல்லை, வேகமா ஓடறவங்களோடு முயலைப் போட்டி போடச் சொல்லலாம். இரண்டும் இல்லாமல் எனக்கும் முயலுக்கும் போட்டி வைத்து, அதில் நான் ஜெயிப்பது எல்லாம் நடக்கிற காரியமா? சமமானவர்களுடன்தான் போட்டி வைக்க வேண்டும் என்பதைக்கூட அறியாதவர்களா, மனிதர்கள்?”
“இதாவது பரவாயில்லை, நானும் காகமும் கறுப்பாக இருப்பதை நினைத்து வருந்துவதாகவும் கதை எழுதியிருக்கிறார்கள்” என்று சொல்லிக் கொண்டே மரக்கிளையில் அமர்ந்தது குயில்.
“இந்த மனிதர்களை என்ன செய்யலாம்?” என்று கேட்டது காகம்.
“நாம் அவர்களைப் போன்று கதைகளை உருவாக்கினால், மனிதர்களை எப்படி எல்லாம் சித்தரிக்கலாம்?”
“காடுகளை அழிப்பவர், விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடுபவர், சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவர் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.”
“ஆமாம், சரியாகச் சொன்னே.”
எல்லாவற்றையும் மரத்தின் மேலிருந்து கேட்டுக்கொண்டிருந்த குரங்கு கீழே இறங்கிவந்தது.
“நீங்கள் பேசுவது எனக்கு நகைச்சுவையாக இருக்கிறது” என்று குரங்கு சொன்னவுடன், ஆமையும் காகமும் அதிர்ச்சியுடன் பார்த்தன.
“நீ மனிதர்களுக்கு நெருக்கமானவன். அதான் இப்படிப் பேசறே” என்றது முயல்.
“அதெல்லாம் ஒன்றும் இல்லை. மனிதர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு மனிதர்களையே பயன்படுத்தினால் சலிப்பாக இருக்கும் என்று நினைத்து இப்படி நம்மைப் போன்றவர்களை வைத்துக் கதை எழுதுகிறார்கள். அதாவது நம் குணத்தை வெளிப்படுத்துவது அவர்களின் நோக்கம் அல்ல. அவர்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டிய நல்லதையும் கெட்டதையும் நம் மீது சுமத்தி, இதை இப்படிச் செய்யாதே, அதை அப்படிச் செய் என்று கூறுகிறார்கள்.”
“இதை எல்லாம் நம்மைக் கேட்டா செய்கிறார்கள்? கேட்காமல் செய்வது தவறுதானே?”
“நாம் நம் இயல்புகளை மறந்து, மனிதர்களைப் போன்று சிந்திக்க ஆரம்பித்துவிட்டோம். அதனால்தான் அவர்கள் நம்மை இப்படிச் சொல்கிறார்கள், அப்படிச் சொல்கிறார்கள் என்று வருத்தப்படுகிறோம்.”
“நம்மைப் பற்றி மனிதக் குழந்தைகள் தவறாக நினைத்தால் உனக்குப் பிரச்சினை இல்லையா?” என்று கோபத்துடன் கேட்டது நரி.
“மனிதர்கள் எப்படி நினைத்தால் என்ன? அவர்கள் என்னைத் தவறாக நினைத்தாலும் எனக்குப் பிரச்சினை இல்லை. உங்கள் கவலை எல்லாம், உங்களை மனிதக் குழந்தைகள் தவறாக நினைக்கக் கூடாது என்பதுதானே?”
“ஆமாம்.”
“மனிதக் குழந்தைகள் புத்திசாலிகள். அவர்கள் நம் இயல்புகளைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். கதையில் சொல்லும் இயல்புகள் எல்லாம் கற்பனை என்பது அவர்களுக்குத் தெரியும். என்னைப் பற்றியோ முயல், ஆமை, காகம் பற்றியோ ஒரு கட்டுரை எழுதச் சொன்னால் தந்திரக்காரன், ஏமாற்றுக்காரன் என்றெல்லாம் எழுத மாட்டார்கள். ஆமையைவிட முயலால் வேகமாக ஓட முடியும், காகம் தன் உறவினர்களை அழைத்துச் சாப்பிடும் என்று உண்மையைத்தான் எழுதுவார்கள்.”
“ஓ, அப்படி என்றால் மனிதர்கள் நம்மை எப்படிச் சித்தரிக்கிறார்கள் என்று கவலைப்பட வேண்டியதில்லையா?” என்றது நரி.
“ஆமாம். கதைகளால் நம் இயல்பு மாறிவிடாது, கதைகளால் மனிதர்களும் நம்மைப் பற்றி மோசமாக நினைக்க மாட்டார்கள்.”
“எங்களுக்குப் புரிய வைத்ததற்கு நன்றி” என்று குரங்கைப் பார்த்து அனைத்தும் மகிழ்ச்சியாக கத்தின.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago