ஓ
நாய் என்றொன்று தனியாகக் கிடையாது. ஓநாய்களைத்தான் நாம் பார்க்கமுடியும். ரொம்ப போரடிக்குது, காலாற ஒரு நடை போய்விட்டு வரலாம் என்று ஓர் ஓநாய் தனியாக வீட்டைவிட்டுக் கிளம்புவதே கிடையாது. பத்தடி நடக்க வேண்டுமென்றால்கூட தன்னுடைய கூட்டத்தை எழுப்பி அத்தனை பேரையும் அழைத்துக்கொண்டுதான் போகும்.
வேட்டையாட வேண்டுமா? தாகமா? விளையாட வேண்டுமா? ஊர் சுற்ற வேண்டுமா? மொத்த குழுவும் ஒன்றாகவே கிளம்பிப் போகும். ஓர் ஓநாய் குடும்பத்தில் சுமார் எட்டு முதல் 15 பேர்வரை இருப்பார்கள். எல்லோரும் எல்லோருக்கும் உதவுவார்கள்.
இதே குணம்தான் நாய்க்கும். ஒரு குட்டி நாய் தும்மும்போது சின்னதாக லொள் என்று குரைத்துவிட்டால் போதும். என்னைக் கூப்பிட்டாயா நண்பா என்று இன்னொரு நாய் துள்ளிக் குதித்து ஓடிவந்துவிடும். ஏய், நம்ம ஆளுக்கு என்னவோ பிரச்சினை, வா பார்ப்போம் என்று தொலைவிலுள்ள நண்பர்களும் பாய்ந்து ஒன்றுகூடிவிடுவார்கள்.
ஒன்றுமில்லை, லேசாக ஜலதோஷம், நீங்கள் போங்கள் என்று அந்தக் குட்டி நாய் சமாதானப்படுத்தும்வரை நகர மாட்டார்கள். நண்பனுக்குப் பிரச்சினை என்றால் படையே திரண்டுவந்துவிடும். நாய்களிடம் அவ்வளவு சுலபத்தில் யாரும் வாலாட்டிவிட முடியாது, ஆமாம்.
ஒரு மாடு உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டிருந்தால் அது தனியாக இருக்கிறது என்று அர்த்தம். யாராவது ஒரு நண்பரைப் பார்த்துவிட்டால் போதும், முகம் முழுக்க சந்தோஷம் மலர்ந்துவிடும். கதை பேசும். முகத்தோடு முகத்தை உரசி விளையாடும். தோழா, நேற்று எனக்கு என்ன ஆச்சு தெரியுமா என்று தோளில் சாய்ந்து ஆறுதல் தேடும். நான் பார்த்து பிறந்த குட்டி, நீ என்னைவிடப் பெரிய ஆளா என்று சண்டை பிடிக்கும். சண்டை முடிந்ததும், சரி சரி சும்மா சொன்னேன், உன்னை விட்டால் எனக்கு யார் இருக்கிறார்கள் என்று தாஜா செய்யும்.
ஒரு குதிரையிடம் சென்று உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டால், குதிரை என்றுதான் சொல்லும். அப்படியானால் குதிரைகள் எல்லாம் கைகோத்துக்கொண்டு எப்போதும் லாலாலா என்று பாட்டுப் பாடிக்கொண்டே இருக்கும் போலும் என்று நினைத்துவிட வேண்டாம். நம்மில் யார் தலைவராக இருக்க வேண்டும் என்பதில் குதிரைகளுக்குள் கடும் போட்டி ஏற்படுவதுண்டு. என் வாலைப் பார், நான்தான் தலைவன். இல்லை, இல்லை என் கால்கள் வலிமையானவை, நான்தான் தலைவன். வாலும் காலும் முக்கியமில்லை. நான்தான் கம்பீரமாகக் கனைப்பேன், நானே தலைவன். இப்படி நிறைய சண்டைகள், சச்சரவுகள், மோதல்கள் ஏற்படுவதுண்டு.
பிறகு நிதானமாக உட்கார்ந்து பேசி அவர்களுள் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பார்கள். அதற்குப் பிறகு சண்டை அடங்கிவிடும். தலைவர் குதிரைக்கு எல்லோரும் கட்டுப்படுவார்கள். தலைவர்தான் முதலில் உணவு சாப்பிடுவார். அவர்தான் கூட்டத்தை வழிநடத்துவார். குளத்துக்குப் போனால் முதலில் தண்ணீர் குடிக்கும் உரிமை அவருக்குதான். மொத்தத்தில், தல சொல்லிவிட்டால் மறுபேச்சு கிடையாது.
தனியாக வாழ்வதென்றால் என்னவென்று எலிகளுக்குத் தெரியாது. ஒரு பெரிய சமூகத்தையே அவை உருவாக்கி வைத்திருக்கின்றன. ஒவ்வோர் எலியும் ஏதாவதொரு குழுவில் இணைந்திருக்கும். அங்கும் இங்கும் ஓடினோமா, கிடைத்ததைத் தின்றோமா, வளையில் போய்ப் படுத்து குறட்டை விட்டுத் தூங்கினோமா என்று எலிகள் இருந்துவிடாது. எனக்கு என் சமூகம் முக்கியம் என்று ஒவ்வோர் எலியும் நம்பும். நான் ஓர் எலி, எனவே எலிகளோடு மட்டும்தான் நட்பாக இருப்பேன் என்று சொல்லாமல் மற்ற விலங்குகளோடும் நெருங்கிப் பழகும். போ, போ என்று விரட்டினாலும் மனிதர்களையும்கூட அது நட்போடுதான் பார்க்கும். என்னைவிட இரண்டு கால் குறைவு, அதனால் கவலைப்படாதே நீயும் எனக்கு நண்பனே என்று ஆறுதல் அளிக்கும்.
எலிக்கு உதவி செய்யப் பிடிக்கும். ஏதாவது ஓர் எலிக்கு முதுகில் அரிப்போ வலியோ தசை பிடிப்போ ஏற்பட்டால் அதை இன்னோர் எலி புரிந்துகொண்டுவிடும். இங்கே வா நான் பார்க்கிறேன் என்று கூப்பிட்டு மூக்கால் தடவிக் கொடுக்கும். உதவியை கேட்டுப் பெறவும் எலி தயங்காது. அண்ணா, இந்த வாலில் என்னவோ மாட்டிக்கொண்டிருக்கிறது, என்னவென்று பாருங்களேன் என்றோ, பாட்டி, இங்கே ஒரு மசால் வடை இருக்கிறது, அது என்னைப் பிடிக்கதான் வைத்திருக்கிறார்களா என்றோ கேட்க ஓர் எலி தயங்காது. எலிக்குக் கற்றுக்கொடுக்கும் குணம் உண்டு. ஓர் அட்டைப்பெட்டியை எப்படிப் பொடிப் பொடியாகக் கடித்துக் குதறுவது என்று நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் அருகிலுள்ள ஓர் எலியை அணுகலாம்.
நட்பில்லாமல் நானில்லை என்கிறது ஓநாய். நண்பருக்காக எதையும் செய்வேன் என்று இரண்டு கால்களைத் தூக்கி நின்று முழங்குகிறது நாய். தோழர்கள் இருப்பதால்தான் நான் இருக்கிறேன் என்று அசைபோடுகிறது மாடு. என்னுடைய சுறுசுறுப்புக்கும் வேகத்துக்கும் காரணம் என் கூட்டம்தான் என்று பாய்கிறது குதிரை. எலி மட்டும் என்னவாம்? நெஞ்சத்து அகநக நட்பது நட்பு என்று மட்டும்தான் அது சொல்லவில்லை.
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago