பழைய பாட்டியும் புது வடையும்

By மு.முருகேஷ்

பூவரசம்பட்டி அழகிய சிறிய கிராமம். அந்தக் கிராமத்தில் உள்ள டீக்கடைக்குப் பக்கத்தில் ஒரு அரச மரம் இருந்தது.அந்த மரத்திற்குக் கீழே ஒரு பாட்டி பலகாரக் கடை வைத்திருந்தாள். காலையில் இட்லி சுட்டு விற்பாள்.மாலையில் வடை, போண்டா, பஜ்ஜி சுட்டு விற்பாள். அந்தப் பாட்டியின் பெயர் பொன்னம்மா. எப்போதும் புன்சிரிப்போடுதான் இருப்பாள். பாட்டிக்கு இரக்கக்குணம் கொஞ்சம் அதிகம். காசு இல்லையென்றாலும் சின்னக் குழந்தைகளுக்குப் பலகாரம் கொடுப்பாள்.

ஒருநாள் வழக்கபோல பொன்னம்மா பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தாள்.அப்போது காக்கா ஒன்று பறந்து வந்தது. பக்கத்தில் இருந்த கல் ஒன்றின் மீது உட்கார்ந்தது. பாட்டி வடையைச் சுட்டு, அதைக் கூடை போட்டு மூடி வைத்தாள். காக்கா ஏக்கமாகப் பார்த்தபடி இருந்தது.

உடனே பாட்டி,“என்ன...வடை எடுத்துட்டுப் போக வந்தீயா..?” என்று காக்காவைப் பார்த்துக் கேட்டாள்.

“இல்லே...இல்லே… திருடக் கூடாது, அது தப்புன்னு எங்க அம்மா சொல்லியிருக்காங்கன்னு” சொன்னது காக்கா.

பாட்டி சிரித்துக்கொண்டே,

“ ஒனக்குப் பசிக்கிதா?”என்றாள்.

“ஆமா பாட்டி” என்று காக்கா தலையாட்டியது. உடனே, பாட்டி கூடையைத் திறந்து, வடை ஒன்றை எடுத்தாள். “இந்தா சாப்பிடு...” என்று நீட்டினாள்.

காக்கா வடையை வாங்கவில்லை.

“வேண்டாம். ‘உழைக்காம யார்க் கிட்டேயும் எதையும் இலவசமா வாங்கக் கூடாது’ன்னு எங்கப்பா சொல்லியிருக்காரு” என்றது காக்கா.

வடையைத் திருடும் காக்கா பற்றி பாட்டி சிறு வயதில் கதை படித்திருக்கிறாள். ஆனால், இந்தக் காக்கா இப்படிச் சொன்னது பாட்டிக்கு ஆச்சரியமாக இருந்தது.

“எனக்கு ஏதாவது வேலை இருந்தாக் கொடு பாட்டி. நான் செய்யிறேன். அதுக்குக் கூலியா வடை கொடு” என்று சொன்னது காக்கா.

பாட்டிக்கு சந்தோசமாகிவிட்டது.யோசித்து விட்டுச் சொன்னாள், “அடுப்பெரிக்க எனக்கு சுள்ளி பொறுக்கிக் குடு. வடை தர்றேன்.”

காக்காவும் ‘சரி’ என்று தலையாட்டிப் பறந்தது.

தோப்புப் பக்கமாய்ச் சுற்றி அலைந்தது காக்கா. என்ன சோதனை..! ஒரு விறகுகூடக் கிடைக்கவில்லை. மிகவும் வருத்தத்துடன் மரக்கிளையின் மீது உட்கார்ந்தது காக்கா.

அந்த மரத்தில் விளையாடிக் கொண்டிருந்த குரங்கு, காக்காவின் அருகே வந்தது. “ஏன் கவலையா இருக்கே” என்றது குரங்கு. காக்கா நடந்ததைக் கூறியது.

“சுள்ளிதானே...கவலைப்படாதே. நான் உனக்கு உடைச்சுத் தர்றேன். நீ எனக்கு என்ன தருவே?’ என்று குரங்கு கேட்டது.

“பாட்டி தர்ற வடைய ரெண்டு பேரும் சரிசமமா பிரிச்சுக்கலாம்” என்று காக்கா கூறியது.

குரங்கும் சம்மதித்தது. தாவித் தாவி மரத்திற்கு மரம் குதித்தது. கிளைகளைப் பிடித்து வேகமாக உலுக்கியது. பட்டுப் போயிருந்த சிறு கிளைகள் ‘பட்’ ‘பட்’டென ஒடிந்து கீழே விழுந்தன.

காக்காவுக்கு ஒரே சந்தோஷம்.

ஒவ்வொரு சுள்ளியாய் பொறுக்கிக் கொண்டுபோய், பாட்டியின் கடையருகே போட்டது காக்கா.

பாட்டியின் மனம் குளிர்ந்து போனது.

“உழைச்சுப் பொழைக்கணும்னு நினைக்கிற உனக்கு ஒரு கொறையும் வராது. நீ நல்லாயிருப்பே...” என வாயார வாழ்த்தி, காக்காவுக்கு இரண்டு வடைகளைச் சாப்பிடக் கொடுத்தாள்.

காக்கா வடையோடு பறந்து வந்தது. குரங்கிடம் ஒரு வடையைக் கொடுத்தது. குரங்கும் வாங்கி, ருசித்துச் சாப்பிட்டது.

காக்கா தன் பங்கு வடையைத் தின்னப் போனது. அப்போது அந்தப் பக்கமாய் நரி ஒன்று வந்தது. காக்கா இப்போது சுதாரித்துக் கொண்டது.

“எனக்குப் பாட்டெல்லாம் பாடத் தெரியாது. இருக்கிறதே ஒரு வடைதான். ஒனக்கும் வேணும்னா ஆளுக்குப் பாதியா சாப்பிடலாம்”என்று காக்கா சொன்னது.

“யாரோட உணவையும் தட்டிப் பறிச்சு சாப்பிடக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லியிருக்காங்க. எனக்கு ஏதாவது வேலையிருந்தா வாங்கிக் கொடு” என்று கேட்டது நரி.

“வேலையா...? அந்தப் பக்கமாப் போனா, ஒரு அரச மரத்தடி வரும். அந்த மரத்தடிக்குக் கீழே ஒரு பாட்டி வடை சுட்டுக்கிட்டு இருப்பாங்க. அவங்ககிட்டே போயி கேளு. வேலை தருவாங்க” என்று காக்கா சொன்னது. காக்காவுக்கு ‘நன்றி’ கூறிவிட்டு, அரச மரத்தடிக்கு நரி வந்தது.

வடை சுட்டுக்கொண்டிருந்த பாட்டியைப் பார்த்தது.

நரி பாட்டியிடம் வந்து, “ஏதாவது வேலை இருந்தா கொடு பாட்டி. செய்யிறேன்” என்றது.

“சாப்பிடுறவங்களுக்கு கை கழுவத் தண்ணி வேணும். காலியா இருக்கிற இந்தத் தொட்டியில, கிணத்திலேர்ந்து தண்ணி கொண்டு வந்து ரொப்பு”என்று நரிக்கு பாட்டி வேலை கொடுத்தாள்.

வாளி ஒன்றைக் கவ்விக்கொண்டு கிணற்றடிக்குப் போனது நரி.

நீர் இறைக்க கயிறு இல்லை. எங்கே போவது..? நரி யோசித்தது. அருகேயிருந்த வீட்டின் முன் நின்று,

“அக்கா...அக்கா...”என்று கூப்பிட்டது நரி.

உள்ளேயிருந்து ஒரு குட்டிப் பெண் வந்தாள்.

“அக்கா, கிணத்திலெ தண்ணி இறைக்க கயிறு வேணும். இருந்தா கொடுங்க. என்னோட வருமானத்தில பாதிய தர்றேன்” என்று நரி சொன்னது.

அதற்கு அந்தப் பெண், “அடுத்தவங்களை ஏமாத்தி வாழாம, சுயமா வேலை செய்ய நினைக்கிற உன்னோட குணத்தைப் பாராட்டுறேன். இந்தா...கயிறு. எனக்கு எதுவும் நீ தர வேண்டாம்” என்று சொன்னாள்.

நரியும் கயிற்றில் வாளியைக் கட்டி, தண்ணீரை இறைத்தது. ஒவ்வொரு வாளியாகக் கொண்டு போய், தண்ணீர்த் தொட்டியில் ஊற்றியது. தண்ணீர்த் தொட்டியும் நிரம்பியது.

பாட்டி நரியைப் பாராட்டி, மூன்று வடைகள் கொடுத்தாள்.

நரி ஒரு வடையைத் தின்றது.மீதமுள்ள இரு வடைகளையும் தன் தம்பி, தங்கைக்குக் கொடுக்க எடுத்துக் கொண்டுப் போனது.

“ அம்மா... எப்படியிருக்கு...என்னோட பாட்டி வடை சுட்ட கதை...?”என்று கேட்டான் மதன்.

அம்மாவும் பெருமிதத்தோடு, “நல்லா இருக்குடா...என் தங்கமே...” என்றாள்.

உடனே, மதன் சொன்னான்; “நீயும்தான் எனக்கு முன்னாடி பாட்டி வடை சுட்ட கதை சொல்வியே, காக்கா வடையைத் திருடும், நரி ஏமாத்தி அதைப் பிடுங்கிக்கும்ன்னு...”

“தெரியாம சொல்லிட்டேன்டா. அம்மா உன்னை மாதிரி பள்ளிக் கூடம் போயி படிக்கல. ஏதோ எனக்குச் சொன்னதை நானும் சொன்னேன்...!”என்று அம்மா சமாளித்தாள்.

“செய்யாத தப்பை செஞ்சதாச் சொல்லி காக்கா, நரி மேல பொய்யா திருட்டுப் பட்டம் கட்டிட்டோம். அதுங்க பாவந்தானே...” சொல்லும்போதே மதனின் குரல் கம்மியது.

“நீ சொன்ன வடைதான் சரி, எஞ்செல்லமே...!” மதனை அப்படியே கட்டியணைத்துக் கொஞ்சினாள் அம்மா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்