கோபியும் ராகேஷும் - சிறார் கதை

By ரா.நதியா

கோபியும் ராகேஷும் ஒரே வகுப்பில் படித்து வருகின்றனர். கோபியின் அப்பா விவசாயி. ராகேஷின் அப்பா ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அன்று வகுப்பறையில் விடைத் தாள்களுக்கு மதிப்பெண் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார் ஆசிரியர். அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்று, முதல் மாணவனாக வந்தான் கோபி. குறைந்த மதிப்பெண்களைப் பெற்று, தேர்வில் வெற்றி பெற்றிருந்தான் ராகேஷ்.

“எல்லாரும் கோபியைப் பார்த்து, உங்களை இன்னும் முன்னேற்றிக்கணும்” என்றார் ஆசிரியர்.

ராகேஷுக்கு கோபியோடு ஒப்பிட்டுச் சொன்னதில் கோபம் வந்தது. ஆனால், அந்த ஆசிரியர் ஒவ்வொரு முறை விடைத் தாள்களைக் கொடுக்கும்போதும் ஒப்பிடுவதை நிறுத்தவே இல்லை.

அன்று பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பல போட்டிகளில் கலந்துகொண்டு, பரிசுகளை அள்ளிக்கொண்டிருந்தான் ராகேஷ். கோபி சில போட்டிகளில் கலந்துகொண்டாலும் பரிசு எதுவும் அவனால் வாங்க முடியவில்லை.

மறுநாள் ஆசிரியர் விடைத்தாள்களைக் கொடுத்துவிட்டு, வழக்கம்போல் கோபியைப் பார்த்து எல்லாரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். அப்போது தலைமையாசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார்.

“எல்லாருக்கும் வணக்கம். கோபி நல்லா படிக்கிறான், ஆனா விளையாட்டுல அவனால ஜொலிக்க முடியல. ராகேஷ் விளையாட்டில் பரிசுகளை அள்ளறான், ஆனா படிப்பில் முதல் மதிப்பெண் எடுக்க முடியல. கோபியின் அப்பா விவசாயி. அவர் சிறப்பாகத் தன் வேலையைச் செய்யறார். ராகேஷ் அப்பா சிறந்த தொழில் முனைவோர். அவர் நல்லபடியா தன் நிறுவனத்தைப் பார்த்துக்கறார். அதனால எல்லாரும் எல்லாத்துலயும் ஜொலிக்க முடியாது. அவரவருக்கு விருப்பமான துறையில் ஜொலிக்க முடியும். அதை ஒருவரோடு இன்னொருவரை ஒப்பிட்டுப் பேசக் கூடாது” என்றார் தலைமை ஆசிரியர்.

”சார், உங்க கருத்துதான் என் கருத்தும். மாணவர்களை ஊக்குவிப்பதற்காகவே அப்படிச் சொன்னேன். இனி யாரையும் ஒப்பிட மாட்டேன்” என்றார் ஆசிரியர்.

சிரித்துக்கொண்டே சென்றார் தலைமை ஆசிரியர்.

ராகேஷும் கோபியும் கைகுலுக்கிக் கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE