இடம் பொருள் மனிதர் விலங்கு: மியாவ்... மியாவ்...

By மருதன்

பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் வீட்டில் அறைக்கு இரண்டு என்று டஜன் கணக்கில் பூனைகள் உருண்டு, புரண்டு விளையாடிக்கொண்டிருக்கும். அவர் தூங்கும்போது கிட்டத்தட்ட அனைத்தும் அமைதியாக இருக்கும். சாப்பிடும்போது தான் உண்டு, தன் வேலையுண்டு என்று சுருண்டு படுத்திருக்கும். தப்பித் தவறி அவர் எழுத உட்கார்ந்தால் போதும். ஒன்றோ இரண்டோ ஓடிவந்து மடியில் உட்கார்ந்துவிடும்.

சும்மா உட்கார்ந்துகொண்டாலும் பரவாயில்லை. அப்படி என்ன எழுதுகிறாய் என்று நொடிக்கு நொடி எட்டி எட்டிப் பார்க்கும். படிக்குமா, படித்தாலும் புரியுமா என்று தெரியவில்லை! ஆனால் கையையும் காலையும் வாலையும் வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், பாய்ந்து, ஓடி, சோம்பல் முறித்து, வாலைச் சுழற்றி, கொட்டாவி விட்டுவிட்டு அவர் பாதி எழுதி முடித்த காகிதத்தின் மீதே படுத்துத் தூங்கிவிடும். “ஏய், எழுந்து போய் உன் இடத்தில் தூங்கு, எனக்கு நிறைய வேலை இருக்கிறது” என்று நைட்டிங்கேல் ஓர் அதட்டு அதட்டினால் ஈ என்று பல்லைக் காட்டிச் சிரிக்கும். ஆனால் நகராது. நைட்டிங்கேல் எழுதி வைத்திருந்ததை இப்போது ஆராயும்போது, இடையிடையே மியாவ்களின் அட்டகாசங்கள் பளிச்சென்று தெரிகின்றன.

ஆனால் நைட்டிங்கேலுக்குத் துளிகூட கோபம் வந்ததுபோல் தெரியவில்லை. ‘அடச் செல்லமே, உனக்குப் பசிக்க ஆரம்பிச்சிடுச்சா’ என்று எழுதுவதை நிறுத்திவிட்டு, எடுத்து தோளில் போட்டுக்கொண்டு தடவிக் கொடுப்பார். காகிதத்தைப் பிறாண்டி கிழிக்கும் பூனைகளுக்குக்கூட விதவிதமாக உணவு அளிக்க அவருக்குப் பிடிக்கும். பிறகு மேஜையில் வந்து குதிக்காமல் என்ன செய்யும்?

அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைனிடம் மனிதர்களா பூனைகளா எது சிறந்தது என்று கேட்டால் முறைப்பார். அது எப்படி பூனைகளைப் போயும் போயும் மனிதர்களோடு ஒப்பிடலாம் என்று சண்டையும் பிடிப்பார். ஒருமுறை அவருடைய பூனை தொலைந்துவிட்டது. எல்லா வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு, கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்துவிட்டார். உலகமே வெறுத்துப் போய்விட்டது அவருக்கு. இப்போது என் பூனைக்குப் பசிக்குமே? அதுக்குத் தாகம் எடுத்தால் என்ன செய்வது? காய்ச்சல் வந்தால் யார் கவனித்துக்கொள்வார்கள்? யாராவது கடிந்துகொண்டால் அதுக்கு மனம் கஷ்டப்படுமே? இப்போது அதுவும் என்னைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்குமா?

சில நாட்கள் பொறுத்திருந்தும் திரும்பி வராததால் செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்தார் ட்வைன். என் பூனையைக் கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்குச் சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவித்து, தன் வீட்டு முகவரியையும் கொடுத்திருந்தார். இது போதாதா? அவருடைய ரசிகர்கள் வீட்டு வாசலில் ஆளுக்கொரு பூனையோடு வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டார்கள்.

”மிஸ்டர் மார்க் ட்வைன், நன்றாகப் பாருங்கள் இதுதானே உங்கள் பூனை?” “மன்னிக்கவும், இது என்னுடையது அல்ல” என்று திருப்பி அனுப்பிடுவார் ட்வைன். அது ட்வைனின் பூனை இல்லை என்று அவர்களுக்கும் தெரியும். இருந்தாலும் உலகப் புகழ் பெற்ற ஓர் எழுத்தாளரை அருகில் சென்று பார்க்கும் வாய்ப்பு இன்னொரு முறை கிடைக்குமா?அடுத்த சில நாட்களில் நிஜமாகவே அவர் பூனை திரும்பிவந்துவிட்டது. இருந்தாலும் ரசிகர்களின் வரிசை குறையவேயில்லை. ”திரும்பிவந்தது உங்கள் பூனைதான் என்று உறுதியாகத் தெரியுமா? எதற்கும் நான் கொண்டுவந்திருக்கும் பூனையையும் ஒருமுறை பார்த்துவிடுங்களேன்!”

போரடிக்கிறது, ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியில் போவார் ஆபிரகாம் லிங்கன். திரும்பிவரும்போது கையில் ஒரு பூனை இருக்கும். என்னது என்று கேட்டால், பாவம் தெரு ஓரத்தில் சுற்றிக்கொண்டிருந்தது. கவனித்துக்கொள்ள யாருமில்லை. அதான் தூக்கி வந்துவிட்டேன் என்று காரணம் சொல்வார். அல்லது, என்னைப் பாவமாகப் பார்த்து கத்தியது. மனசே கேட்கவில்லை என்பார். அல்லது, எனக்குத் தெரியாது. என் பின்னாலயே வந்துவிட்டது. இப்போதுதான் நானே கவனித்தேன் என்று சமாளிப்பார்.

ரஷ்யாவின் கேத்தரின் மகாராணிக்குப் பூனை பிடிக்காது, பூனைகள்தான் பிடிக்கும். ஐந்தோ, பத்தோ அல்ல, அறை முழுக்கப் பூனைகள் மியாவ் மியாவ் என்று கத்தியபடி குதித்துக்கொண்டிருக்கவேண்டும். வெறும் செல்லப் பிராணிகளாக அல்ல, அந்தப் பூனைகளைப் பணியாளர்களாக அவர் நியமித்திருந்தார்.

தன் வேலையைச் சரியாகச் செய்யும் பூனையைக் கையில் எடுத்து தட்டிக் கொடுத்து, பாராட்டிப் பரிசுகள் கொடுப்பது அவர் வழக்கம். கீழ் தளத்தில் உள்ள பூனைகள் திருப்திகரமாகப் பணியாற்றினால் அவை மேல் மாடிக்கு உயர்த்தப்படும். ஒவ்வொரு பூனைக்கும் தனியே சம்பளம் உண்டு. சரி, பூனைக்கு என்ன வேலை? வேறென்ன, எலியைப் பிடித்துச் சாப்பிடுவதுதான்.

என்னென்னவோ கண்டுபிடித்த ஐன்ஸ்டைனுக்குக் கடைசிவரை ஒரு விஷயம் புரியவேயில்லை. டைகர் என்னும் பெயரில் ஒரு பூனையை அவர் கொஞ்சி கொஞ்சி வளர்த்துவந்தார். உற்சாகமாக ‘கிய்யா முய்யா’ என்று கத்தியபடி வீடு முழுக்க டைகர் ஓடிக்கொண்டிருக்கும். எதை வேண்டுமானாலும் கடிக்கும், எதை வேண்டுமானாலும் பிடித்து இழுக்கும், எது பிடிக்காதோ அதைப் போட்டு உடைக்கும். ஆனால் வெளியில் மழை பெய்யும் சத்தம் கேட்டால் போதும். துடித்துக்கொண்டிருந்த மீசை அடங்கிவிடும்.

அட்டகாசம் செய்துகொண்டிருந்த வால் கப்சிப்பென்று சுருண்டுவிடும். உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு ஒரு மூலையில் படுத்துவிடும். மழைக்கும் டைகருக்கும் என்ன தொடர்பு? ஏன் மழையைப் பார்த்தால் டைகர் சோகமாகிவிடுகிறது? ஐன்ஸ்டைனுக்குப் புரியவில்லை. மெல்ல எடுத்து மடியில் போட்டு தடவிக்கொண்டே வருந்துவார். ‘‘உன் பிரச்சினை எனக்குப் புரிகிறது டைகர். ஆனால் என்ன செய்வது? மழையை எப்படித் தடுத்து நிறுத்துவது என்று எனக்குத் தெரியவில்லையே!”

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்