இடம் பொருள் மனிதர் விலங்கு: பராக்… பராக்…

By மருதன்

 

யா

ர் அங்கே என்று சும்மா ஒரு குரல் கொடுத்தால் போதும். அரண்மனையில் இருக்கும் பாதிப் பேர், போட்டதைப் போட்டபடி ஓடோடி வந்து கைகூப்பி நிற்பார்கள். ”கூப்பிட்டீர்களா மன்னா?” “ஆமாம், என் உறக்கம் கலைந்துவிட்டது. போர்வையை எடுத்து மேலே போர்த்திவிடு” என்பார் மன்னர். அந்தப் போர்வை என்னவோ அவருடைய தலைமாட்டில்தான் இருக்கும். ஆனால் அதை எப்படி அவரே கையில் எடுத்து அவரே போர்த்திக்கொள்வது? மன்னர் அல்லவா? இரண்டு பேர் பயபக்தியுடன் போர்வையை எடுத்துப் போர்த்திவிடுவார்கள். ”போதுமா மன்னா?” “ ம், போ” என்பார் மன்னர். ஓடோடி வந்துவிடுவார்கள்.

அரை மணி நேரம்கூட ஆகியிருக்காது. யாரங்கே! மீண்டும் பத்துப் பேர் திபுதிபுவென்று ஓடிவருவார்கள். ஓர் ஈ என் முகத்தில் வந்து உட்கார்ந்துவிட்டது. ஓட்டிவிடு என்பார் மன்னர். மன்னர் என்றும் பாராமல் அவர் மேலே வந்து அமர்ந்துகொண்ட அந்தப் பொல்லாத ஈயைக் கண்டுபிடித்து ஓட்டிவிடுவார்கள். ஓட்டிவிடும்போது மன்னர் கன்னத்தில் கை பட்டுவிட்டால்கூட தலையைச் சீவி எடுத்துவிடுவார். எனவே பயந்து பயந்துதான் ஈ ஒட்டவேண்டும். ஒரு வாழைப்பழம் தரவேண்டுமானால்கூடத் தோலைப் பிரித்து, சிறு துண்டுகளாக நறுக்கி (தொண்டையில் மாட்டிக்கொண்டால், இன்னொரு முறை யாரங்கே என்று கத்துவாரே!) தங்கத் தாம்பாளத்தில் வைத்துக்கொண்டுபோகவேண்டும்.

இத்தனை அதிகாரம் கொண்டிருந்த மன்னர்கள் எல்லோரும் வீர தீர அதி பயங்கர சாகசக்காரர்களாக இருப்பார்கள் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. ஒரு சிட்டுக்குருவியை வேட்டையாடக்கூட தனியாகப் போக முடியாது மன்னரால். போருக்குப் போவதுபோல் ஒரு படையே அவருடன் வரும். முன்னால் ஐம்பது குதிரைகள், பின்னால் ஐம்பது குதிரைகள். நடுவில் ஒரு யானையின்மீது மன்னர் அமர்ந்திருப்பார். அவர் காட்டுக்குப் போவதற்குச் சில மணி நேரத்துக்கு முன்பு இன்னொரு படை காட்டை அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்து அங்கே யாராவது எதிரிகள் ஒளிந்திருக்கிறார்களா என்று பார்க்கும். வழியில் உள்ள மரம், குளம், கோயில், மைதானம் எல்லாவற்றையும் கவனமாக ஆராய்வார்கள். ஆகாயத்திலிருந்து யாராவது குதித்துவிட்டால் என்ன செய்வது என்பதுபோல் மரக் கிளையின் உச்சியில்கூடத் தேடிப் பார்ப்பார்கள். மன்னரைக் காவல் காக்க வரும் படை வீரர்களையும்கூட சோதனை போடுவார்கள். மன்னர் கூடவே இருக்கும் யாராவது திடீரென்று எதிரியாக மாறிவிட்டால்? அல்லது எதிரிகளுக்கு உளவாளிகளாக இருந்துவிட்டால்?

அர்த்தசாஸ்திரம் என்றொரு பழமையான நூல் இருக்கிறது. அதில் மன்னர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதற்கு இப்படித்தான் பலவிதமான விதிமுறைகள் வகுத்து வைத்திருக்கிறார்கள். இவற்றை எல்லாம் மன்னர்களும் அரண்மனையில் உள்ள மற்றவர்களும் பின்பற்றியே ஆகவேண்டும். ராஜ வாழ்க்கை என்று பொறாமையோடு சொல்கிறோமே அந்த வாழ்க்கை உண்மையில் எப்படி இருந்தது என்று பார்த்தால் பல நேரம் சிரிப்புதான் வரும்.

உதாரணத்துக்கு, ஒரே இடத்தில் ரொம்ப நேரம் மன்னர் தூங்கக் கூடாதாம். எதிரிகள் கண்டுபிடித்து வந்து குத்திவிடுவார்களாம். எனவே அடிக்கடி எழுந்து வேறு அறைக்குச் சென்று அங்கு சில மணி நேரம் தூங்கவேண்டும். பிறகு அங்கிருந்தும் எழுந்து இன்னோர் அறைக்குப் போகவேண்டுமாம். பாதி தூக்கதில் இருக்கும்போது, ’மன்னா, மன்னா’ என்று காதுக்கு அருகில் அழைத்து எழுப்பி அழைத்துக்கொண்டு போய்விடுவார்கள். மன்னர் எங்கே இருக்கிறார் என்று அரண்மணையிலேயே எல்லோருக்கும் தெரிந்திருக்காதாம்.

சரி, நிம்மதியாகக் குளிக்கவாவது விடுவார்களா என்றால் அதுவும் இல்லை. மன்னர் குளியலறைக்குப் போனால்கூட வாசலில் பத்து இருபது பேர் கத்தி, கடப்பாறை எல்லாம் வைத்துக்கொண்டு காவல் காப்பார்கள். எதிரிகள் திடீர்த் தாக்குதல் நடத்தி குளியலறையில் இருக்கும் மன்னரைக் கடத்திக் கொண்டுபோய்விட்டால்? குளியலறையிலும்கூட தண்ணீர் இருக்குமோ இல்லையோ நான்கைந்து கூரான வாள்கள் இருக்குமாம். வாசலில் உள்ளவர்களை வீழ்த்திவிட்டு எதிரிகள் உள்ளே வந்துவிட்டால் மன்னர் தன்னை எப்படித் தற்காத்துக்கொள்வாராம்?

அரண்மனைத் தோட்டத்தில்கூட காலாற நடக்க முடியாது. பூத்துக்குலுங்கும் செடிகளுக்கு நடுவே பாம்போ தேளோ பூச்சியோ பொட்டோ இருந்தால் என்ன செய்வது? இதற்காகவே மயில், கொக்கு, நாரை என்று தொடங்கி பலவிதமான பறவைகளை வளர்த்து அரண்மனை முழுக்க உலாவவிடுவார்கள். பூச்சிகளையும் பாம்புகளையும் கொத்தித் தின்ன சிறப்புப் பறவைப் படை! மன்னரின் உணவு, தண்ணீர், ஆடை, பல் துலக்கும் குச்சி, நறுமணத் தைலம், கிரீடம், முத்து மணி மாலை, செருப்பு என்று எல்லாவற்றையும் படை வீரர்களும் பணியாளர்களும் அவ்வப்போது சோதனை போட்டுக்கொண்டே இருப்பார்கள். அம்மா, மனைவி, குழந்தைகள், அப்பா, மாமா, தாத்தா ஒருவரையும் மன்னர் நம்ப மாட்டார். யாரைப் பார்த்தாலும் பயம், சந்தேகம், குழப்பம், கவலை. இப்படித்தான் அநேகமாக எல்லா மன்னர்களும் வாழ்ந்துவந்தனர்.

ஏன் இப்படி என்பதற்கான காரணம் எளிமையானது. தங்கமும் வைரமும் இழைத்து அரண்மனையை உருவாக்கி, பொன்னும் பொருளும் குவித்து வைத்துக்கொண்டு, ஊரில் உள்ள இடங்களை எல்லாம் போரிட்டு வளைத்துப் பிடித்து, நான் யார் தெரியுமா என்று மீசையை முறுக்கிவிட்டுக்கொண்டு, வந்து ஈ ஓட்டு என்று சுற்றிலும் இருப்பவர்களை எல்லாம் அதிகாரம் செய்தால் எதிரிகள் உருவாகாமலா இருப்பார்கள்? அளவுக்கு மிஞ்சிய செல்வம், அளவுக்கு அதிகமான எதிரிகளைத்தானே உருவாக்கும்? ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட... என்றெல்லாம் வெளியில் புலிபோல் வளைய வந்தாலும் பல மன்னர்கள் அரண்மனைக்குள் எலிபோலதான் சுருண்டு கிடந்தார்கள். அவர்களுடைய மீசைகூட எலியைத்தான் சட்டென்று நினைவுபடுத்தும்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்