இடம் பொருள் மனிதர் விலங்கு: நட்சத்திரங்களுக்குப் பசித்தால் என்ன செய்யும்?

By மருதன்

ருட்டத் தொடங்கிவிட்டது. இனி வயலில் எதுவும் செய்ய முடியாது. அப்பா, அம்மா, மகள் மூவரும் பக்கத்தில் இருந்த புல்தரையில் அமர்ந்தார்கள். ”அம்மா, அம்மா அங்கே பார்” என்று கையை உயர்த்தி வானத்தைக் காட்டினாள் சிறுமி. ”இன்று அந்த நட்சத்திரத்துக்குப் பிறந்தநாளா? புது ஆடை அணிந்துகொண்டு மின்னிக்கொண்டிருக்கிறது பாரேன்.”

அம்மா சிரித்தார். ஆமாம், அந்த நட்சத்திரத்தை வாழ்த்த எல்லா நண்பர்களும் திரண்டு வந்திருக்கிறார்கள். மினுமினுக்கும் பரிசுப் பொருள்களை அவர்கள் கொண்டுவந்திருக்கிறார்கள். அதான் வானமே ஜொலித்துக்கொண்டிருக்கிறது.

”சரி, நட்சத்திரங்கள் என்ன சாப்பிடும்?” அடுத்த கேள்வியை வீசினாள் சிறுமி. ”உனக்குத் தெரியாதா? நட்சத்திரங்களுக்கு நிலா என்றால் உயிர். பசி வரும்போதெல்லாம் ஓடிச்சென்று நிலாவைச் சுவைத்து சாப்பிடும். அதனால்தான் நிலா ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சம் குறைந்துபோய் பிறகு முழுவதும் காணாமல் போய்விடுகிறது. உடனே குட்டி நட்சத்திரங்கள் அழ ஆரம்பித்துவிடும். நீ அடம்பிடிக்கும்போது அழுவாய் அல்லவா, அப்படி. உடனே நிலா பாவப்பட்டு கடகடவென்று வளர்ந்துவிடும். இதோ நட்சத்திரங்கள் எத்தனை மகிழ்ச்சியாக மின்னுகிறது பார்.”

சிறுமியோடு சேர்ந்து அப்பாவும் புன்னகை செய்தார். நேற்று நான் ஒரு பறவையைப் பார்த்தேன் என்றார் அப்பா. பெரிய சிறகுகளை விரித்து அது நின்றுகொண்டிருந்தது. பறக்கவும் இல்லை, சிறகுகளை மடித்துக்கொள்ளவும் இல்லை. அப்படியே ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்தது. முழுக்க நட்சத்திரங்களால் ஆன பறவை. அடடா, எத்தனை அழகு!

”உங்களுக்கு நினைவிருக்கிறதா? வில்லுடன் நிற்கும் ஒரு போர் வீரனைச் சில நாள்களுக்குமுன்பு பார்த்தோமே” என்றார் அம்மா. அப்பா தலையசைத்தார். “நான்கூட ஒரு நாள் யானை பார்த்தேன் அம்மா என்றாள் சிறுமி. பிறகு மான் வந்தது. அசையாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தது. ஏன் யானையும் மானும் அசைவதில்லை? வானத்தில் அவ்வளவு இடம் இருக்கிறது.

“ஓடிப்பிடித்து விளையாடலாமே? ஒருவேளை அந்தப் போர் வீரனின் அம்பைப் பார்த்து பயந்து அப்படியே சிலைபோல் இரண்டும் மாறிவிட்டதா?

அப்பா மறுத்தார். மேலே நாம் பார்க்கும் நட்சத்திரங்கள் எல்லாமே கடவுள்கள் என்றார் அவர். ”கடவுளின் வேலை நம்மைக் கண்காணிப்பதுதான். காலையில் சூரியக் கடவுள் வருவார். இருட்டும் வரை அவர் நம்மைப் பார்த்துக்கொள்வார். நீ வேளைக்கு ஒழுங்காக எழுந்திருக்கிறாயா என்று பார்ப்பார். ரொம்ப நேரம் தூங்கினால் வீட்டுக்குள் கதிர்களை அனுப்பி சூடு உண்டாக்கி உன்னை எழுப்புவார்.

நானும் அம்மாவும் வயல் வேலைக்குப் போகிறோமா என்று பார்ப்பார். அவர்தான் பயிர்களை நன்றாக வளர்க்கிறார். நம் ஆடுகளை, மாடுகளை கவனித்துக்கொள்கிறார். பிறகு களைப்படைந்து மாலை தொடங்கி மறுநாள் காலைவரை ஓய்வெடுப்பார். நாள் முழுக்க இத்தனை பெரிய உலகைக் கவனித்துக்கொள்வது சாதாரண வேலையா?”

சூரியக் கடவுள் எப்போது போவார், நாம் எப்போது போய் விளையாடலாம் என்று குட்டி நட்சத்திரங்கள் காத்துக்கொண்டிருக்கும். சூரியன் தலை மறைந்தவுடன் கூச்சலிட்டுக்கொண்டே குழந்தைகள் வானம் முழுக்க நிறைந்துவிடும் என்று தொடர்ந்தார் அம்மா. நட்சத்திரம் கத்துவது ஏன் நமக்குக் கேட்கவில்லை அம்மா எனும் கேள்விக்கு உடனே பதிலளித்தார் அம்மா. ”ரொம்ப தொலைவில் இருப்பதால் நமக்குக் கேட்காது. ஆனால் நீ, நான், அப்பா பேசுவதையெல்லாம் நட்சத்திரங்கள் கவனித்துக்கொண்டிருக்கும். நாம் தப்பு செய்தால் பெரிய மழை அல்லது இடியை அனுப்பி நம்மை எச்சரிக்கும். அல்லது மழையை வரவிடாமல் தடுத்து நிறுத்திவிடும். பிறகு பயிரெல்லாம் வாடிவிடும்.”

28chsuj_Idam1.jpgright

அப்பா தொடர்ந்தார். பறவை, யானை, சமையல் பாத்திரம், மாடு, மனிதன் என்று பல வடிவங்களில் நட்சத்திரங்கள் கைப்பிடித்து ஒன்றுசேர்ந்து விளையாடுவது வழக்கம். நீ உன் தோழிகளோடு சண்டை போடுவதுபோல் நட்சத்திரங்களும் சண்டை போடும். ஒன்றையொன்று பிடித்து கீழே தள்ளும்.

சில நேரம் வானத்திலிருந்து நட்சத்திரம் அப்படியே கீழே கடலில் வந்து விழுந்துவிடும். அப்படி விழும்போது கண்ணை மூடிக்கொள்ளவேண்டும். நட்சத்திரம் கீழே விழுவதைப் பார்த்தால் நாமும் விழுந்துவிடுவோம். ”

”நட்சத்திரம் கீழே இறங்கி வராதா அப்பா? அல்லது நாம் மேலே போய் அதை அருகில் பார்க்க முடியாதா?” இரண்டுமே ஏன் முடியாது என்பதை அப்பா முழுக்கச் சொல்லி முடிப்பதற்குள் சிறுமி உறங்கிவிட்டாள். அப்பா அவளை அப்படியே தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு அம்மாவோடு சேர்ந்து வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் மனிதர்கள் பேசிக்கொண்டார்கள். குழந்தையைத் தூங்க வைப்பதற்காக அம்மாவும் அப்பாவும் சேர்ந்து பின்னியக் கதைகள் என்று இவற்றை நினைத்துவிட வேண்டாம். பெரியவர்கள்கூட இவற்றையெல்லாம் நிஜமாகவே நம்பினார்கள். ஒரு விஷயம் புரியவில்லையா? உடனே அதைப் பற்றி ஒரு கதை முளைத்துவிடும். அந்த ஒரு கதை ஒன்பதாக, நூறாக, ஆயிரமாக வளர்ந்துவிடும். இந்தக் கதைகளை நிஜம் என்றே அவர்கள் நம்பினார்கள். இந்தக் கதைகளிலிருந்துதான் அறிவியல் பிறந்தது.

அந்தச் சிறுமி கண்விழித்ததும், உனக்குத் தெரியுமா, ஒருநாள் மனிதன் பூமியிலிருந்து பறந்து சென்று நிலாவில் இறங்கினான் என்று சொல்லிப் பாருங்கள். ‘ஓ, நிலாவை அவர் சாப்பிட்டுப் பார்த்தாரா? வரும்போது குட்டி நட்சத்திரம் ஒன்றை அழைத்து வந்தாரா?’ என்று அடுத்தடுத்து கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிடுவாள். அறிவியலும் ஒரு வகையில் கதைதான்.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்