டிங்குவிடம் கேளுங்கள்: பூமியில் தண்ணீர் வந்தது எப்படி?

By செய்திப்பிரிவு

பல ஆண்டுகளாக மழை பெய்துதான் கடல் உருவானது என்கிறார்கள். ஆனால், பூமியில் உள்ள நீர் ஆவியாகி, மேகமாக மாறி மழை பொழிவதாகப் படிக்கிறோம். அப்படி என்றால் கடல் உருவாகும் முன்பே தண்ணீர் எப்படி வந்தது? - வி. தீக்‌ஷன், 5-ம் வகுப்பு, தி நசரேத் அகாடமி, ஆவடி.

நல்ல கேள்வி. பூமிக்கு நீர் எப்படி வந்திருக்கலாம் என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளின் வாயிலாகச் சில விஷயங்களைச் சொல்கிறார்கள். பூமிக்கு அருகே இருந்த சிறிய கோள்கள் பூமியில் மோதியபோது நீர் உருவாகியிருக்கலாம்.

பனிக்கட்டியால் ஆன வால்விண்மீன்கள் பூமியில் மோதியபோது நீர் உருவாகியிருக்கலாம். இவை இரண்டைத் தவிர, பூமிக்குள் இருக்கும் நீர் அதிக அழுத்தத்தின் காரணமாக, எரிமலைகள் வெடிப்பின்போது பூமியின் மேற்பரப்பை அடைந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள், தீக்‌ஷன்.

பிளாஸ்டிக் பந்தைவிட ரப்பர் பந்து அதிகமாகத் துள்ளுவது ஏன், டிங்கு? - ஆர். நிதீன், 1-ம் வகுப்பு, ஆர்கா கிரீன் பள்ளி, அண்டூர், கன்னியாகுமரி.

பிளாஸ்டிக் பந்தைவிட, ரப்பர் பந்தில் நெகிழ்ந்து கொடுக்கக்கூடிய (மீள்தன்மை) தன்மை அதிகம். பந்தை அடித்த வேகத்தில் லேசாகச் சுருங்கினாலும் நசுங்கினாலும் உடனே இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவதால், பிளாஸ்டிக் பந்தைவிட ரப்பர் பந்து அதிகம் துள்ளுகிறது நிதீன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE