இடம் பொருள் மனிதர் விலங்கு: என்னது, மனிதர்கள் குரங்கில் இருந்து வந்தவர்களா?

By மருதன்

 

கா

ச்மூச்சென்று கத்திக்கொண்டு அங்கும் இங்கும் குதித்துக்கொண்டிருந்தன குரங்குகள். படிப்பா, எழுத்தா, வேலையா? நாள் முழுக்க கத்தலாம், குதிக்கலாம், சேட்டை செய்யலாம். இப்போ என்ன நடந்துவிட்டது என்று இந்த ஆட்டம் போடுகிறாய் என்று யாராவது வந்து கேட்கப்போகிறார்களா? உஷ் அமைதியாக இரு என்று அதட்டப் போகிறார்களா? அல்லது, விளையாடியது போதும், ஒழுங்காக ஓரிடத்தில் உட்கார்ந்து படி என்று காதைப் பிடித்துத் திருகப் போகிறார்களா? இது அல்லவா வாழ்க்கை? வாழ்ந்தால் குரங்குபோல் வாழவேண்டும்.

அதென்ன ‘வாழ்ந்தால்’, ஒரு காலத்தில் நாமும் குரங்குகள் போலதான் வாழ்ந்திருக்கிறோம். நாம் எல்லோருமே குரங்கிலிருந்து வந்தவர்கள்தாம் என்று சார்லஸ் டார்வின் அறிவித்தபோது சிலர் வாய்விட்டுச் சிரித்தார்கள். சிலருக்கோ கடும் கோபம் வந்துவிட்டது. ‘என்ன தைரியம் இருந்தால் என்னைக் குரங்கு என்று சொல்வாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்!’ என்றார்கள்.

இந்த இருவருமே ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தார்கள். மனிதன் வேறு, குரங்கு வேறு. நாம் முன்னேறியவர்கள். உலகிலேயே, இல்லை இல்லை இந்தப் பிரபஞ்சத்திலேயே நாகரிகமானவர்கள், புத்திசாலிகள் நாம்தான். நான் நினைத்தால் நாளையே ஒரு கிளையிலிருந்து இன்னொன்றுக்குத் தாவிச் செல்லமுடியும்! என்னைப் போல் குரங்கால் பேச முடியுமா?

பலரும் இதை ஒப்புக்கொண்டனர். மனிதன் கண்டுபிடித்த விஷயங்களிலேயே மிகவும் நவீனமானது, மொழி. குரங்கு மட்டுமல்ல எந்த விலங்குக்கும் ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளும் திறன் இருக்காது. கிளிகள்கூட கற்றுக்கொடுத்த சில வார்த்தைகளைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லும். ஒரு கிளியாவது அதுவாகவே ஒரு வாக்கியத்தைப் பேசியிருக்கிறதா? வாக்கியம் கூட வேண்டாம், ஒரே ஒரு வார்த்தை? ஓர் எழுத்து?

ஆய்வாளர்களுக்கும் இது ஒரு சவாலான விஷயமாகவே இருந்தது. கிடைத்த விலங்குகளையெல்லாம் கொண்டுவந்து கூண்டில் அடைத்துப்போட்டு, நோட்டும் பேனாவும் வைத்துக்கொண்டு அதன் ஒவ்வோர் அசைவையும் ஆய்வு செய்ய ஆரம்பித்தார்கள். இப்படித்தான் கிரீன் மங்கி என்னும் பெயரால் அழைக்கப்படும் குரங்குகளைச் சிலர் ஆய்வு செய்துகொண்டிருந்தார்கள். பெயரில் மட்டும்தான் பச்சை இருக்கிறது, மற்றபடி பழுப்பு நிறக் குரங்குதான் அது.

என்ன சொல்லிக் கொடுத்தாலும் கப்பென்று பிடித்துக்கொண்டது. இரு கைகளையும் இணைத்து தட்டினால்தான் உணவு என்று கற்றுக்கொடுத்த மறுநாளே கற்றுக்கொண்டுவிட்டது. கேரம் போர்டு கற்றுக்கொடுத்தபோது ஆர்வத்துடன் கற்றுக்கொண்டது. எது சதுரம், எது முக்கோணம் என்று வேறுபடுத்தக் கற்றுக்கொண்டது. சரி, அப்படியே மொழியையும் கற்றுக் கொடுத்துவிடலாம் என்று முயன்றார்கள். ‘பழம், எங்கே சொல்லு பழம்’ என்று வாரக்கணக்கில், மாதக்கணக்கில் மன்றாடிப் பார்த்தார்கள். வாங்கி நன்றாக ரசித்துச் சாப்பிட்டதே ஒழிய பழம் என்று சொல்ல வரவில்லை.

ஒரு நாள் இதேபோல் ஆராய்ச்சிக்காகக் கூண்டில் சிங்கத்தை அடைத்து எடுத்துவந்து குரங்கு இருக்கும் கூண்டுக்கு அருகில் வைத்தார்கள். அவ்வளவுதான், குரங்கு கத்த ஆரம்பித்துவிட்டது. ஓடோடிவந்து சிங்கத்தை எடுத்து வேறு அறையில் வைக்கும்வரை அது கத்துவதை நிறுத்தவில்லை. அதை ஒருவர் கவனித்துவிட்டார். மற்றொரு நாள் இதேபோல் வேறொரு விலங்கை எடுத்து வந்து குரங்குக்கு அருகில் வைத்தார். இந்த முறையும் அதேபோல் கத்தியது. போன முறை கத்தியதற்கும் இந்த முறை கத்தியதற்கும் கொஞ்சம் வித்தியாசம் இருப்பதுபோல் தெரிந்தது எனக்கு மட்டும்தானா?

குரங்கு கத்தும் ஒவ்வொரு முறையும் கவனமாகப் பதிவு செய்து ஆராய ஆரம்பித்தார் அந்த ஆய்வாளர். இரண்டு விதமான ஒலிகள் குரங்கிடமிருந்து வருகின்றன. உதாரணத்துக்கு, கீக்கீ கூக்கூ என்று இரண்டு ஒலிகள். இந்த இரண்டையும் சேர்த்து கீக்கீகூக்கூ கீக்கிகூக்கு என்று விடாமல் கத்துகிறது. அப்படியானால் இந்த இரண்டும் இரண்டு சொற்களாக ஏன் இருக்கக்கூடாது?

காட்டுக்குச் சென்று குரங்குகள் எழுப்பும் விதவிதமான ஒலிகளைப் பதிவு செய்து கொண்டுவந்தார். இந்த ஒலிகள் எப்போது வேறுபடுகின்றன, எப்போது ஒன்றுபோல் இருக்கின்றன என்று கவனித்தார். சிங்கம் ஒன்று அருகில் வரும்போது கீக்கீ கூக்கூ என்று குரங்கு கத்துகிறது. உடனே மற்ற குரங்குகள் சுற்றிலும் பார்த்தபடி அதே ஒலிகளை எழுப்புகின்றன. பிறகு பதுங்கிக்கொள்கின்றன. மேலே பருந்து ஒன்று பறந்துபோனால் கீக்கீ போக்கோ என்று அதே குரங்கு கத்துகிறது. உடனே மற்ற குரங்குகள் தலைக்கு மேலே நிமிர்ந்து பார்த்தபடி அதே ஒலிகளை எழுப்பியபடி ஓடுகின்றன.

ஆக, கீக்கீ என்பது பொதுவான வார்த்தை. அபாயம் என்பது போல. கூக்கூ என்றால் சிங்கம், போக்கோ என்றால் பருந்து. அப்படியானால் குரங்குகள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன என்றுதானே அர்த்தம்? அப்படியானால் அவர்களுக்குள் ஒரு மொழி இருக்கிறது என்றுதானே பொருள்? அப்படியானால் குரங்குகள் இத்தனை காலமும் வெறுமனே கத்திக்கொண்டிருக்கவில்லையா? குரங்கும் நம்மைப் போலவே கதை பேசிக்கொண்டு, அரட்டை அடித்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறதா? அப்படியானால் குரங்கும் நம்மைப் போலவே புத்திசாலியா? ஆஹா, எத்தனைப் பெரிய உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறேன்!

அந்த ஆய்வாளர் மகிழ்ச்சியில் கத்துவதைக் கூண்டிலிருந்தபடியே கவனித்த ஒரு குரங்கு தன்னுடைய நண்பரிடம் சொன்னது. ‘நம்முடைய மொழியிலிருந்து மூன்று வார்த்தைகளைக் கண்டுபிடிக்க இவர்களுக்கு இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது, பாரேன். உலகிலேயே நாங்கள்தான் புத்திசாலிகள் என்று வேறு இவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். நிஜமாகவே மனிதர்கள் ஐயோ பாவம்தான்!’

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்