யா
ராவது கேள்வி கேட்டு அதற்கு உங்களுக்கு விடை தெரியவில்லையா? பலமுறை படித்திருந்தும் தேர்வு எழுத உட்காரும்போது எல்லாம் மறந்துவிட்டதா? மனப்பாடம் செய்துவிட்டேன், ஆனால் பொருள் தெரியவில்லை என்று தோன்றுகிறதா? ஏன் எனக்கு எதுவுமே தெரியவில்லை, ஏன் என்னால் எதையும் புரிந்துகொள்ளமுடியவில்லை என்று ஒரே கவலையாக இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கு ஒரு ரகசியம். எனக்கு எதுவும் தெரியாது என்று யாரெல்லாம் நினைக்கிறார்களோ அவர்களுக்குதான் எல்லாமே தெரியும்!
விளையாட்டல்ல, நிஜம்தான். தத்துவத்துறையின் தந்தை என்று பலராலும் கொண்டாடப்படும் சாக்ரடீஸின் புகழ்பெற்ற வாக்கியம் என்ன தெரியுமா? ‘எனக்கு எதுவும் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் இது ஒன்றுதான்.’ இந்த முகவரி எங்கே இருக்கிறது என்று அவரிடம் கேட்டுப் பாருங்கள். எனக்குத் தெரியாது என்பார். தனியாக ரொம்ப நேரமாக உட்கார்ந்திருக்கிறீர்களே, யாருக்காவது காத்திருக்கிறீர்களா? தெரியாது. உங்களுக்குக் குளிராக இல்லையா? தெரியாது. உங்களுக்குப் பிடித்த நிறம் என்ன? தெரியாது. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? தெரியாது. என்ன யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள்? தெரியாது.
எனக்கு ஒன்றுமே தெரியாது என்கிறார் சாக்ரடீஸ். ஆனால் உலகமே அவரை, ‘கிரேக்க மேதை’ என்று புகழ்கிறது. குழப்பமாக இருக்கிறது அல்லவா? அவரே எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிவிட்ட பிறகு, அவரிடமிருந்து நாம் என்ன கற்கமுடியும்? ஒன்றுமே தெரியாது என்பவரை எப்படி மேதை என்று அழைக்கமுடியும்?
இப்படி யோசித்துப் பாருங்கள். கிரேக்க வரலாறு தெரியுமா என்று ஒருவரிடம் நீங்கள் கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ‘ஓ, தெரியுமே’ என்று அவர் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்? மேற்கொண்டு எதுவும் பேசாமல் வந்த வழியே திரும்பிச் சென்றுவிடுவீர்கள். இதே தெரியாது என்று அவர் சொல்லியிருந்தால் என்னாகும்? ‘நல்லது, நான் இன்று சில விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். உன்னிடம் பகிர்ந்துகொள்கிறேன், வா’ என்று இழுத்து உட்கார வைத்து உரையாடுவீர்கள். அப்போது அவரும் உங்களிடம் பேச ஆரம்பிப்பார். உங்களிடம் இருந்து அவரும் அவரிடமிருந்து நீங்களும் கற்கமுடியும்.
‘தெரியும்’ என்று நான் சொன்னால் என் வீட்டிலுள்ள எல்லாக் கதவுகளையும் ஜன்னல்களையும் நான் மூடிக்கொள்கிறேன் என்று அர்த்தம். ‘தெரியாது’ என்று சொன்னால் எல்லாவற்றையும் திறந்துவைக்கிறேன். ஓரளவுக்குத் தெரியும் என்றால் கதவுகளை மூடிவிட்டு, ஜன்னல்களை மட்டும் திறந்து வைக்கிறேன். காற்றும் வெளிச்சமும் எங்கே அதிகம் நுழையும், எங்கே குறைவாக நுழையும், எங்கே நுழையவே நுழையாது என்று நினைக்கிறீர்கள்? அறிவும் அப்படித்தான்!
31chsuj_idam1.jpgrightஎனக்கு எல்லாமே தெரியும் என்று நினைப்பவர்கள் எதையும் கற்பதில்லை என்கிறார் சாக்ரடீஸ். யாருக்கும் எதையும் கற்றுக்கொடுப்பதும் இல்லை. நான் கஷ்டப்பட்டுத் தெரிந்துகொண்டதை உனக்கு எதற்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று இவர்கள் நினைப்பார்கள். எல்லா அறிவையும் உள்ளுக்குள் வைத்து பெரிய பூட்டு போட்டு பூட்டிக்கொள்வார்கள். ‘எனக்கு இந்தக் கணக்கு புரியவில்லை, கற்றுக் கொடுக்கிறாயா?’ என்றுகூட அவர்களிடம் கேட்க முடியாது.
கேட்டாலும் பதில் சொல்ல மாட்டார்கள். அறிவைப் பூட்டி வைத்தால் அது வளராது. வாய்விட்டுப் பேசவேண்டும், மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று காது கொடுத்துக் கேட்கவேண்டும். ‘அது எப்படி நீ அப்படிச் சொல்லலாம்?’ என்று வாதம் செய்யவேண்டும். கணக்கு ஒன்றும் பூதம் கிடையாது, வா சொல்லிக் கொடுக்கிறேன் என்று உதவவேண்டும். இப்படியெல்லாம் செய்தால்தான் அறிவு வளரும் என்கிறார் சாக்ரடீஸ்.
எனக்குத் தெரியாது என்று சொல்பவர்கள்தான் கேள்வி கேட்பார்கள். கேள்வி கேட்டால்தான் விளக்கம் கிடைக்கும். அந்த விளக்கத்தைப் புரிந்துகொள்ளும்போது அறிவு வளர ஆரம்பிக்கும். உடனே, எனக்கு இது தெரிந்துவிட்டது என்று நினைத்துவிடக் கூடாது. மேலும் ஆழமான கேள்விகளைக் கேட்கவேண்டும். மேலும் ஆழமாகக் கற்கவேண்டும். மேலும் விரிவாகக் கற்கவேண்டும். நீங்கள் நிறைய கற்க, கற்க நிறைய கேள்விகள் தோன்றிக்கொண்டே இருக்கும்.
இவ்வளவு சந்தேகங்கள் தினம் தினம் வருகின்றன என்றால் இன்னும் நான் எவ்வளவு கற்கவேண்டும் என்னும் உண்மையைப் புரிந்துகொள்வீர்கள். கிரேக்க வரலாறு உங்களுக்குத் தெரியுமா என்று யாராவது கேட்டால், ‘ஓ எனக்கு அதில் ஆர்வம் நிறைய இருக்கிறது, சொல்லுங்களேன் தெரிந்துகொள்கிறேன்’ என்று பதில் சொல்வீர்கள்.
இதிலிருந்து நமக்குத் தெரிவது என்ன? எல்லாம் தெரியும் என்று சொல்பவர்களுக்கு எதுவும் தெரியாது. எதுவும் தெரியாது என்பவர்களால் எல்லாவற்றையும் கற்கமுடியும். எனவே, எல்லாக் கதவுகளையும் ஜன்னல்களையும் நன்றாகத் திறந்து வையுங்கள். ‘எனக்கு இது தெரியாது’ என்று தைரியமாகச் சொல்லுங்கள். தெரியாததைக் கேட்டு, படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். தெரிந்ததை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். பிறகு, மீண்டும் கற்க ஆரம்பியுங்கள். மீண்டும் பகிர்ந்துகொள்ள ஆரம்பியுங்கள். மீண்டும் தெரிந்துகொள்ள ஆரம்பியுங்கள்.
சாக்ரடீஸ் கடைசிவரை இதைத்தான் செய்துகொண்டிருந்தார். ‘எனக்கு எதுவும் தெரியாது’ என்றே கடைசிவரை சொல்லிவந்தார். அதனால்தான் அவரால் பலவற்றைக் கற்கமுடிந்தது. அதனால்தான் அவரிடமிருந்து நாம் இன்றும் கற்றுவருகிறோம்.
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago