இடம் பொருள் மனிதர் விலங்கு: புத்தகத்தை என்ன செய்யலாம்?

By மருதன்

ரு புத்தகத்தை உங்களிடம் கொடுத்தால் என்ன செய்வீர்கள்? படிப்பேன் அல்லது பிறகு படிக்கலாம் என்று அலமாரியில் எடுத்து வைப்பேன், இதெல்லாம் ஒரு கேள்வியா என்று நீங்கள் கேட்கலாம். உலகில் மற்றவர்கள் புத்தகத்தை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று பாருங்கள்.

‘எனக்குச் சத்தம் போட்டு மட்டுமே படிக்கத் தெரியும்’ என்கிறார் ஒருவர். ‘நான் நூலகத்துக்குப் போனாலே என்னை விரட்டிவிடுவார்கள். நான் பாவம் இல்லையா?’ என்கிறார் ஒருவர். ’எந்தப் புத்தகத்தைக் கொடுத்தாலும் அதன் கடைசிப் பக்கத்தைதான் முதலில் படிப்பேன்’ என்கிறார் இன்னொருவர். ’பரபரப்பான துப்பறியும் கதையாக இருந்தாலும் சரி, எனக்கு முதலில் முடிவு தெரியவேண்டும். இறுதிவரை காத்திருக்கும் பொறுமை எனக்கு இல்லை’ என்கிறார் ஒருவர். திடீரென்று கடைசியில் பெரிய திருப்பம் வந்தால் இவர் அலறிவிடுவாராம்.

சிலர் எல்லா அரிதான புத்தகங்களையும் உலகம் முழுக்கத் தேடித் தேடிச் சேர்த்துக்கொண்டிருப்பார்கள். செல் அரித்துப் போன பழைய சுவடிகள் என்றால் இவர்களுக்கு உயிர். ஓர் ஆசிரியர் எழுதிய எல்லாப் படைப்புகளும் தன்னிடம் இருக்கவேண்டும் என்று இவர்கள் துடிப்பார்கள். அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருப்பார்கள். சரி, நீங்கள் விரும்பி வாசிக்கும் புத்தகம் என்ன என்று கேட்டால் இவர்கள் பதில் என்ன தெரியுமா? ‘மன்னிக்கவும் எனக்குப் படிக்கப் பிடிக்காது!’

இதோ இன்னொருவர். ‘புத்தகக் கடை, நூலகம், நண்பர்களின் வீடு என்று எங்கே போனாலும் ஒவ்வொரு புத்தகமாக எடுத்து, புரட்டி, என் மூக்கை அதில் வைத்து ஒரு இழு இழுத்துவிட்டுதான் வைப்பேன். புத்தக வாசனையோடு ஏதாவது நறுமண சோப்பு வந்தால் நான் முதல் ஆளாக வாங்கிக்கொள்வேன். இந்த அருமை தெரியாமல் சிலர் புத்தகம் என்பது வாசிக்கும் பொருள் என்று நினைத்துவிடுவார்கள், ஐயோ பாவம்’ என்கிறார்.

இன்னொருவர். ‘நான் எல்லாப் புத்தகத்திலும் முதல் அத்தியாயத்தைப் படித்துவிடுவேன். அல்லது முதல் இரண்டு, மூன்று பக்கங்கள் படித்துவிடுவேன். பிறகு பரணில் போட்டுவிடுவேன். ஒரு புத்தகத்தை எடுத்தால் முழுக்க வாசிக்கவேண்டும் என்று எங்காவது சட்டம் இருக்கிறதா என்ன?’

‘என் பிரச்சினையைக் கேளுங்கள். நான் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன். புத்தகங்களோடுதான் என் வாழ்க்கை. ஆனால் இந்த வயதிலும் ஒரு புத்தகத்தை எடுத்தால் விரலை வைத்து ஒவ்வொரு வார்த்தையாக நகர்த்தி நகர்த்திதான் படிக்கிறேன். விரலை எடுத்துவிட்டால் சற்றுமுன் எந்த வரியை வாசித்துக்கொண்டிருந்தேன் என்பது மறந்துவிடுகிறது. விரல் உதவியில்லாமல் படிப்பவர்களைப் பார்க்க நிஜமாகவே ஆச்சரியமாக இருக்கிறது.’

ஒரு புத்தகப் புழுவின் பிரச்சினையைப் பாருங்கள். ‘ஒரு புத்தகத்தை எடுத்தோமா படித்தோமா என்று என்னால் இருக்க முடியாது. குறைந்தது 15 புத்தகங்களை அள்ளியெடுத்துவந்து, எல்லாவற்றையும் திறந்து வைத்துக்கொண்டு, இங்கே ஒரு வரி, அங்கே ஒரு பத்தி, அந்தப் புத்தகத்தை ஒரு புரட்டு, இந்தப் புத்தகத்தை ஒரு புரட்டு, பிறகு தாவி இன்னொன்றில் பொம்மை பார்த்துவிட்டு, பிறகு முதல் புத்தகத்துக்கு வந்துசேர்ந்து, பிறகு எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு பரணில் ஏறி மேலும் ஐந்து புத்தகங்களையும் எடுத்துவந்து, அவற்றையும் பிரித்து, அவை போதாதென்று... நிஜமாகவே மூச்சு வாங்குகிறது. நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று சொல்லமுடியுமா?’

24chsuj_Idam.jpg

இவர் கதையைக் கேளுங்கள். ‘என்னிடம் எதைக் கொடுத்தாலும் அதை நான் மனப்பாடம் செய்ய ஆரம்பித்துவிடுவேன். கதை, கவிதை, கட்டுரை, வரலாறு என்று என்ன கொடுத்தாலும் சரி. கடகடவென்று கரைத்துக் குடிக்க ஆரம்பித்துவிடுவேன். இப்படித்தான் பாடமெல்லாம் படித்தேன். இப்போது வந்து தப்பு என்று சொன்னால் என்ன செய்வதாம்?’

‘நான் யாரைப் பார்த்தாலும் புன்னகை செய்வேன். நீங்கள் மனிதரா, விலங்கா என்றுகூடப் பார்க்கமாட்டேன். என்ன சொன்னாலும் தலையாட்டுவேன். திட்டினால்கூடத் தெரியாது. என்னிடம் உள்ள பையை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். என்னால் எதையும் உணர முடியாது. எனக்குப் பிடித்த புத்தகத்தை மனதுக்குள் ஓடவிட்டு படித்துக்கொண்டிருப்பேன். நேற்று என் நாய்குட்டிக்கு அடிபட்டுவிட்டது என்று நீங்கள் சொன்னால், நான் வேறு ஏதோ நினைத்து சிரிப்பேன். என்னைப் புரிந்துகொள்வீர்கள் தானே?’

சிலர் கதை படித்தால்கூட அதெல்லாமே நிஜம் என்று நினைத்துக்கொள்வார்கள். சிலருக்குத் தினமும் 10 மணி நேரமாவது படித்தால்தான் திருப்திவரும். ஐயோ, இன்னும் சில பக்கங்களில் இந்தப் புத்தகம் முடிந்துவிடுமே என்று நினைத்து அழுபவர்கள் இருக்கிறார்கள். ஒரு பைக்குள் பை போட்டு அதற்குள் ஒரு பை போட்டு அதை இன்னொரு பையில் போட்டு அதற்குள் புத்தகத்தை வைத்து எடுத்துச் செல்பவர்களும் இருக்கிறார்கள். பாவம், புத்தகம் அழுக்காகிவிடுமாம்!

இப்படி உலகம் முழுக்க ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகப் புத்தகத்தை நேசிக்கிறார்கள். நீங்கள் எந்த வகை? தைரியமாகச் சொல்லுங்கள். புத்தகம் கோபித்துக்கொள்ளாது.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்