டிங்குவிடம் கேளுங்கள்? - மீன்கள் தூங்குமா?

By செய்திப்பிரிவு

மீன்கள் தூங்குமா, டிங்கு?

- எஸ். ஹரி, 3-ம் வகுப்பு, வாகீஸ்வரி மேல்நிலைப் பள்ளி, சமத்தூர், ஆனைமலை.

நாம் தூக்கத்தை ஓய்வு என்று எடுத்துக் கொண்டால், மீன்களும் ஓய்வெடுக்கின்றன. ஆனால், நம்மைப் போல் அவை உறங்குவதில்லை. தரை, பாறைகள் போன்ற பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று, இயக்கத்தைக் குறைத்துக்கொண்டு மிதக்கின்றன. அப்போதும் ஆபத்து ஏதாவது வருகிறதா என்கிற விழிப்புணர்வுடனே ஓய்வெடுக்கின்றன, ஹரி.

பறவைகள் பின்னோக்கிப் பறக்குமா, டிங்கு?

- பி.வி. பாரதி, 6-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.

ஓசனிச்சிட்டு (ஹம்மிங் பேர்ட்) பின்னோக்கிப் பறக்கும் ஆற்றல் கொண்டது. மிகச் சிறிய பறவையான ஓசனிச்சிட்டு, அந்தரத்தில் இருந்துகொண்டே பூக்களில் உள்ள பூந்தேனைச் சுவைக்கக்கூடியது. சட்டென்று முன்னோக்கி, பின்னோக்கி, செங்குத்தாகப் பறக்கக்கூடியது.

பெரும்பாலான பறவைகளுக்கு அவற்றின் இறக்கைகள் அமைப்பின் காரணமாகப் பின்னோக்கிப் பறக்க இயலாது. நாரை இனங்களில் சில பறவைகள் ஆபத்து என்றால் தற்காப்பு உத்தியாகச் சிறிது தூரம் பின்னோக்கிப் பறக்கின்றன. சில நீர்ப்பறவைகளால் தண்ணீரில் சிறிது தூரம் பின்னோக்கிச் செல்ல முடியும், பாரதி.

பெரியவர்களின் ஆசிர்வாதம் நம்மை நூறு ஆண்டுகள் வாழ வைக்குமா, டிங்கு?

- கே. கார்குழலி, 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.

பெரியவர்கள் ‘நூறு ஆண்டுகள் வாழ்வாய்’ என்று ஆசிர்வதிப்பதால், நாம் நூறு வயது வரை வாழ்வோம், நம் ஆயுள் அதிகரிக்கும் என்றெல்லாம் அர்த்தமில்லை. அவர்கள் உங்களை ஆசிர்வதிக்கும்போது மிக மகிழ்ச்சியாகத்தான் இந்த வார்த்தைகளைக் கூறுகிறார்கள். அவர்கள் சொல்லும்போது உங்கள் உள்ளமும் மகிழ்ச்சியடைகிறது. ஆசிர்வாதம் செய்பவர்களுக்கும் ஆசிர்வாதம் பெறுபவர்களுக்கும் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவிப்பதில் தவறு இல்லை. சின்ன சின்ன விஷயங்களில்தானே மகிழ்ச்சி இருக்கிறது, கார்குழலி.

‘பக்’ என்கிற நாயை வளர்க்கிறேன். ஒரு திரைப்படத்தைப் பார்த்துதான் இந்தப் பெயரை வைத்தேன். பெயருக்கான காரணம் தெரியுமா, டிங்கு?

- வி. நரேந்திரன், 8-ம் வகுப்பு, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி, தர்மபுரி.

ஆ... மிகக் கடினமான கேள்வியாக இருக்கிறதே... ‘பக்’, நாய், திரைப்படம் போன்ற குறிப்புகளை வைத்துப் பார்க்கும்போது, இது ‘தி கால் ஆஃப் தி வைல்ட்’ திரைப்படமாக இருக்கும் என்று நினைக்கிறேன், சரியா நரேந்திரன்? நான் திரைப்படத்தைப் பார்த்ததில்லை. ஆனால், நாவலைப் படித்திருக்கிறேன்.

நாவலைப் படித்தவர்களாலும் திரைப்படத்தைப் பார்த்தவர்களாலும் ‘பக்’ மீது அன்பு செலுத்தாமல் இருக்க இயலாது. அவ்வளவு அற்புதமாக அந்த நாவலை எழுதியிருக்கிறார் அமெரிக்க எழுத்தாளர் ஜாக் லண்டன். நாவல் வெளிவந்து 120 ஆண்டுகளுக்குப் பிறகும் ‘பக்’ நம் மனங்களைக் கொள்ளைகொண்டுவிடுவதை நினைத்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE