ஒ
ரு கழுதை முதுகில் பெரிய மூட்டையைச் சுமந்தபடி நடந்துகொண்டிருந்தது. வழியில் ஓர் ஓடை குறுக்கிட்டது. அதைக் கடந்து செல்லும்போது தடுக்கி விழுந்துவிட்டது. அந்த மூட்டையில் இருந்த உப்பு, தண்ணீரில் கரைந்துவிட்டது. அதனால் எடையும் குறைந்துவிட்டது.
மறுநாள் கழுதை அதே ஓடையில் வேண்டுமென்றே தடுக்கிவிழுந்தது. ஆனால் இந்தக் கழுதையைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்த வியாபாரி இப்போது உப்புக்குப் பதிலாக பஞ்சுமூட்டையை ஏற்றியிருந்தார். தண்ணீரை உறிஞ்சிகொண்டதால் பஞ்சுமூட்டையின் கனம் பலமடங்கு அதிகரித்துவிட்டது. தப்பு செய்த கழுதை இப்படியாகத் தண்டிக்கப்பட்டது.
இன்னொரு கதையில் நாயும் கழுதையும் ஒரு வீட்டில் தங்கியிருக்கும். யாரோ நடந்துவரும் ஓசை கேட்டதும் நாய் எழுந்து பார்த்துவிட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்துவிடும். “நீ ஏன் குறைக்கவில்லை, அதுதானே உன் வேலை” என்றது கழுதை. “உனக்னென்ன, நீ உன் வேலையை மட்டும் பார்” என்று சொல்லும் நாய். கழுதைக்கு மனம் பொறுக்காது. ஒருவேளை திருடன் வந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்து அது கத்த ஆரம்பித்துவிடும். தூக்கம் கலைந்து எழுந்துவரும் வீட்டுக்காரர் கோபத்துடன் கழுதையை நான்கு அடி போடுவார்.
மற்றொரு கதையின் தலைப்பு என்ன தெரியுமா? முட்டாள் கழுதை. இப்படி ஏராளமான கதைகளை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால் நிஜத்தில் கழுதை பல சிறப்பான குணங்களைக் கொண்டிருக்கும் அபூர்வமான உயிரினம். சக கழுதைகளை மட்டுமல்ல மனிதர்களையும் கழுதைக்குப் பிடிக்கும். இங்குள்ள எல்லாப் புற்களையும் நீ மட்டும் மேய்ந்துகொள் என்று சொன்னால் அது தயங்கித் தயங்கி நின்றுகொண்டிருக்கும். நான்கைந்து கழுதைகளாவது உடனிருந்தால்தான் சாப்பிடும். தனியாக இரண்டு மணி நேரம் விட்டுவிட்டால் கிட்டத்தட்ட அழ ஆரம்பித்துவிடும்.
‘பத்தாண்டுகளுக்கு முன்பு உன்னைப் பக்கத்து ஊரில் உள்ள மைதானத்தின் கிழக்கே உள்ள மாமரத்துக்கு அடியில் பார்த்திருக்கிறேன். இப்போது எப்படி இருக்கிறாய்?’ இப்படித்தான் இரண்டு கழுதைகள் பேசிக்கொள்ளும். அந்த அளவுக்கு அபாரமான நினைவாற்றல். இடங்களைக்கூட அது மறக்காது.
அந்தப் பஞ்சுமூட்டை கதையைக் கேட்டால் கழுதை சிரிக்கும். ”மற்ற விலங்குகளைப்போல் என் உடலில் கம்பளித் தோல் கிடையாது. அதனால் மழையில் அதிக நேரம் நனையக்கூட எனக்குப் பிடிக்காது. நான் போய் வேண்டுமென்றே ஓடையில் தடுக்கி விழுவேனா? ”
சண்டை போடாமல் எல்லாக் கழுதைகளும் உட்கார்ந்து பேசி ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கும். அந்தத் தலைவர் மற்றவர்களைவிடப் பலசாலியாக இருப்பார். திடீரென்று இரவில் ஓநாய்க் கூட்டம் வந்துவிட்டால் தலைவர்தான் முன்னால் போய் நின்று சண்டைபோடுவார். அதற்குள் மற்ற கழுதைகள் பாதுகாப்பான இடத்துக்கு ஒதுங்கிச் சென்றுவிடும். வெற்றிகரமாக எதிரிகளை விரட்டியத்துவிட்டுதான் தலைவர் திரும்புவார். கழுதைகள் நோஞ்சான்களாக இருக்கும் என்று நினைத்துவிட்டீர்களா என்ன?
கழுதைக்கும் முதுகு வலி வரும். முட்டி வலி வரும். வலி வந்துவிட்டால் நடக்கவே முடியாது என்பதால் சிலைபோல் அப்படியே நின்றுவிடும். வலி மறையும்வரை யார் என்ன செய்தாலும், திரும்பிக்கூடப் பார்க்காது. அதேபோல், எப்போது எதைச் செய்தால் பாதுகாப்பானது என்று கழுதைக்கு நன்றாகத் தெரியும். திருடன் வந்துவிட்டான் என்று தெரிந்தால் கத்தாது. அமைதியாக இருப்பதே நல்லது என்று வாயை மூடிக்கொள்ளும். எனவே இரண்டாவது கதையும் தப்பு.
மலை, மேடு, பாலைவனம் என்று எந்த இடத்தில் விட்டாலும் கழுதை பழகிக்கொண்டுவிடும். கழுதைக்கு ஒத்துக்கொள்ளாத இடம் என்று எதுவும் இல்லை. ஒட்டகத்தைப்போலவே கழுதையும் தண்ணீர் இல்லாமல் நீண்ட நேரம் இருக்கும். குதிரையைவிடத் திறமையாகத் துள்ளிக்குதித்து ஓடும்.
நாய், டால்பின்போல் கழுதையையும் மிக நன்றாகப் பழக்கப்படுத்தமுடியும். அது கற்றுக்கொள்ளாத விஷயம் என்று எதுவுமில்லை.
கழுதையின் காது பெரியது. பல மைல் தூரத்தில் ஏற்படும் ஒலியைக்கூட உன்னிப்பாக, கவனமாகக் கேட்கும். பாலைவனப் பகுதியில், பக்கத்து ஊருக்குப் போன அண்ணன் திரும்பி வருகிறான் என்று அறுபது மைல் தொலைவில் உள்ள குரலைக் கேட்டே கண்டுபிடித்துச் சொல்லிவிடும்!
கழுதை புத்திசாலி விலங்கு என்று ஆச்சரியப்படுகிறார்கள் ஆய்வாளர்கள். கழுதைகளால் சுயமாகச் சிந்திக்கமுடியுமாம், சுயமாக முடிவெடுக்கமுடியுமாம். சரி, அவை எதைப் பற்றிச் சிந்திக்கும்? வேறு என்ன, நம்மைப் பற்றிதான்.
ஏன் இந்த மனிதர்கள் நம்மைக் காட்டிலிருந்து பிடித்துவந்து வீட்டில் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்? ஏன் வலிக்க வலிக்க நம் முதுகில் சுமைகளை ஏற்றுகிறார்கள்? ஏன் மலைகளிலும் பாலைவனங்களிலும் நம்மைச் சுமையுடன் அலைய வைக்கிறார்கள்? இவ்வளவு கஷ்டப்பட்டு உதவினாலும் ஏன் நம்மைப் பற்றி என்னென்னவோ கதைகளைக் கட்டி விடுகிறார்கள்? ஏன் நம் பெயரைப் பயன்படுத்தி ஒருவரையொருவர் திட்டிக்கொள்கிறார்கள்? ஏன் நம்மைப் பார்த்து கிண்டல் செய்கிறார்கள்?
கண்டுபிடிக்க முடியவில்லை. அதே நேரம் மனிதர்கள்மீது கழுதைகளுக்குக் கோபமும் இல்லை. பாவம் போகட்டும், நம்மிடம் இருப்பதைவிட இரண்டு கால்கள் கம்மி. அதான் நம்மீது எடையை ஏற்றிவிடுகிறார்கள் போலிருக்கிறது. ஏதோ நம்மை வைத்து மகிழ்கிறார்கள். போகட்டும். மனிதர்களையும் சேர்த்தேதான் நாம் நேசிக்கவேண்டும். நாம் கழுதைகள் அல்லவா?
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago