ஆ, ஊ என்று கத்தியபடி தன்னைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்தார் அந்த ஆய்வாளர். ஆப்பிரிக்க மக்களின் பழக்கவழக்கங்களை ஆராய்வதற்காக அவர் அந்தக் கிராமத்துக்கு வந்திருந்தார். அவருக்கு நிறைய வேலைகள் இருந்தன. இந்தக் குழந்தைகள் எப்போது என்னைவிட்டு விலகி, அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்துகொள்வார்கள்?
அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அவர்களுக்கு ஏன் ஏதாவது விளையாட்டுச் சொல்லிக் கொடுக்கக் கூடாது? அவர்களுக்கும் பொழுது போகும், நானும் என் வேலையைப் பார்க்கலாம் அல்லவா?
இங்கே வாருங்கள் என்று குழந்தைகளை அழைத்தார். பிறகு தன் பையைத் திறந்து ஒரு பெட்டியை எடுத்தார். உள்ளே விதவிதமான சாக்லேட்டுகள் இருந்தன.
”உங்களுக்கு சாக்லேட் பிடிக்குமா?”
”ஓ பிடிக்குமே!” என்று சத்தமாகக் குரல் வந்தது.
பெட்டியைக் கொண்டு சென்று தொலைவிலிருந்த ஒரு மரத்துக்கு அடியில் வைத்தார் அந்த ஆய்வாளர்.
”எல்லோரும் இங்கே வந்து வரிசையாக நில்லுங்கள்.”
குச்சியை வைத்து நிலத்தில் ஒரு கோடு போட்டார்.
”ஓடு என்று நான் சொன்னதும் எல்லோரும் ஓடவேண்டும். உங்களில் யார் அந்த மரத்தை முதலில் சென்றடைகிறாரோ அவர் அந்தப் பெட்டியில் உள்ள எல்லா சாக்லேட்களையும் எடுத்துக்கொள்ளலாம்.”
சிறுவர்களும் சிறுமிகளும் போட்டிப்போட்டுக்கொண்டு ஓடிவந்து வரிசையில் நின்றார்கள். பாவம் இந்தக் குழந்தைகள், கடைசியாக எப்போது இந்த மாதிரியான உயர் ரக சாக்லேட் சாப்பிட்டார்களோ தெரியாது. ஒருமுறைகூட சாக்லேட்டைச் சுவைக்காத குழந்தைகளும்கூட இங்கே இருக்கலாம், யார் கண்டது?
குழந்தைகள் எல்லோரும் அவர் முகத்தையே பார்த்தபடி அமைதியாக நின்றுகொண்டிருந்தனர். சில விநாடிகள் அவர்களைக் காக்கவைத்த பிறகு, ”ம்… எல்லோரும் ஓடுங்கள்” என்று கத்தினார். யார் முதலில் வருவார்கள்? சிவப்பு டீ ஷர்ட் அணிந்த சிறுவனா அல்லது நான்கு அழகிய ஜடை பின்னலோடு நின்றுகொண்டிருக்கும் அந்த உயரமான சிறுமியா? அல்லது துருதுருவென்று முயல் குட்டிபோல் குதித்துக்கொண்டிருக்கும் இந்தப் பையன் அந்த இருவரையும் மிஞ்சிவிடுவானா?
ஆர்வத்துடன் அவர் குழந்தைகளைக் கவனித்தார். அவரால் நம்ப முடியவில்லை. இதென்ன இந்தக் குழந்தைகளுக்கு நான் சொன்னது புரியவில்லையா? அல்லது இதற்கு முன் அவர்கள் இந்த விளையாட்டை விளையாடியதில்லையா? ஓடுவது என்பது குழந்தைகளுக்கு இயல்பான செயல்தானே? இவ்வளவு நேரமும் என் காலைச் சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தவர்கள்தானே? ஏன் இப்போது இப்படி நடந்துகொள்கிறார்கள்?
அவர் மீண்டும் கவனித்தார். அவர் கிழித்த கோட்டைவிட்டு இன்னும் அவர்கள் நகரவில்லை. அந்த நான்கு ஜடை சிறுமி தன் பக்கத்திலிருந்த சிறுவனிடம் தன் கையை நீட்டினான். அந்தக் கையைச் சிறுவன் பற்றிக்கொண்டான். பிறகு தன் கையைப் பக்கத்திலிருந்த இன்னொரு சிறுவனிடம் நீட்டினான். ஒரு சிறுமி அந்தக் கையைப் பிடித்துக்கொண்டு தன் இன்னொரு கையை நீட்டினார். இப்படியே எல்லாக் குழந்தைகளும் ஒருவர் கையை இன்னொருவர் பிடித்துக்கொண்டு வரிசையாக நின்றனர்.
அடுத்த விநாடி எல்லோரும் ஓட ஆரம்பித்தார்கள். அந்த ஆய்வாளர் வாயைப் பிளந்துகொண்டு பார்த்தார். இதென்ன அதிசயம்! இப்படி ஒரு போட்டியை இதற்குமுன் நான் பார்த்ததேயில்லையே? ஏன் அனைவரும் கையைப் பிடித்துக்கொண்டு ஓடுகிறார்கள்? ஏன் ஒருவரும் இன்னொருவரை முந்திச் செல்லவில்லை? நான், நீ என்று தள்ளிவிட்டுக்கொண்டு ஓடுவதுதானே குழந்தைகளின் இயல்பு?
அவருக்குப் பறவைகளின் நினைவுவந்தது. வானத்தில் இப்படித்தான் பறவைகள் ஒரே வரிசையில், ஒரே சீராக, ஒரே திசையில் பறந்துசெல்வது வழக்கம். பறந்துகொண்டிருப்பது ஒரு பெரிய பறவையா அல்லது பல சிறிய பறவைகளா என்று கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு எல்லாமே ஒரே மாதிரி இறக்கைகளை அசைத்து ஒரே மாதிரி பறக்கும். ஆனால் குழந்தைகள் அப்படிச் செய்து இதுவரை பார்த்ததில்லையே?
ஆய்வாளர் தன்னுடைய எல்லா வேலைகளையும் மறந்துவிட்டு அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தார். கையைப் பிடித்துக்கொண்டு எல்லாக் குழந்தைகளும் இன்னும் ஓடிக்கொண்டிருந்தனர். அந்தத் துருதுரு குட்டியும் நான்கு ஜடை சிறுமியும் மற்ற குழந்தைகளைப் பார்த்தபடி கவனமாகவும் நிதானமாகவும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
அந்த மரத்தை அவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்றுபோல் தொட்டார்கள். ஆ… நாம் வென்றுவிட்டோம் என்று ஒரே குரலில் உற்சாகமாகக் கத்தினார்கள். பிறகு அந்தப் பெட்டியைத் திறந்து அதிலிருந்த சாக்லேட்டுகளை ஆளுக்கொன்றாக எடுத்துக்கொண்டு, அதே மரத்தடியில் அமர்ந்து கதை பேசியபடி சாப்பிட ஆரம்பித்தார்கள்.
ஆய்வாளர் ஆச்சரியத்துடன் அவர்களை நோக்கி ஓடினார்.
”வேகமாக ஓடிச்சென்று முதல் பரிசை வெல்லவேண்டும் என்று உங்கள் யாருக்குமே தோன்றவில்லையா?”
ஒரே வார்த்தையில் அவர்களிடமிருந்து பதில் வந்தது.
உபுண்டு!
அப்படியென்றால் என்னவென்று கேட்டபோது ஒரு சிறுமி சொன்னார். ”நான் மட்டும் ஓடிச்சென்று அந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டால் மற்றவர்கள் வருத்தமடைவார்கள். அவர்கள் வருத்தமாக இருக்கும்போது நான் மட்டும் எப்படி மகிழ்ச்சியாக இருக்கமுடியும்? இப்போது எங்கள் எல்லோருக்கும் பரிசு கிடைத்துவிட்டது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இதுதான் உபுண்டு. உங்களுக்கு இது தெரியாதா?
மனித நேயமும் பிறருக்கு உதவுவதும் தென்னாப்பிரிக்கர்களின் உபுண்டு தத்துவம்.
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago