டிங்குவிடம் கேளுங்கள்: நன்னீர் மீன்களால் கடலில் வாழ முடியுமா?

By செய்திப்பிரிவு

நன்னீர் மீன்கள் கடல்நீரிலும் கடல் மீன்கள் நன்னீரிலும் வாழ முடியாது என்கிறார்களே ஏன், டிங்கு?

- அ. அஜய், 7-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, ஏகாட்டூர், திருவள்ளூர்.

ஆறு, குளம் போன்ற நல்ல நீர்நிலைகளில் வாழும் எல்லா மீன்களாலும் கடலில் வசிக்க முடியாது. அதேபோல் கடலில் வாழும் எல்லா மீன்களாலும் ஆறு, குளங்களில் வசிக்க முடியாது. நல்ல நீர்நிலைகளில் வாழும் மீன்கள் உப்பை எவ்வாறு கிரகித்துக்கொள்ள முடியும் என்பதைப் பொருத்தே அவற்றால் கடலில் வாழ முடியும். ஒரு சில மீன்கள் நல்ல நீரிலும் உப்பு நீரிலும் வாழும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. இவற்றை Anadromous fish, Catadromous fish என்று இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறார்கள்.

நன்னீர் நிலையில் பிறந்து, வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கடல் நீரில் கழித்து, முட்டைகளை இடுவதற்கு மீண்டும் நன்னீருக்கு வரும் சால்மன் போன்ற மீன்கள் அனட்ரோமோஸ் என்று அழைக்கப்படுகின்றன. கடல்நீரில் பிறந்து, வாழ்க்கையின் பெரும்பகுதியை நன்னீரில் கழித்து, முட்டைகளை இட மீண்டும் கடலுக்கு வரும் ஈல்கள் கேடட்ரோமோஸ் என்று அழைக்கப்படுகின்றன.

சாதாரண குளத்து மீனால் கடல் நீரில் தாக்குப்பிடிக்க முடியாது. கடலில் வாழும் மீன்களிலேயேகூட மேல்பரப்பில் வாழும் மீன்களால் கடலின் ஆழத்தில் வசிக்க இயலாது. ஆழத்தில் வசிக்கும் மீன்களால் கடலின் மேற்பரப்பில் வசிக்க முடியாது. காரணம், கடல் நீரின் அழுத்தம்தான், அஜய்.

பூமி, செவ்வாய் ஆகிய கோள்களுக்கு மட்டும் ஈர்ப்பு விசை இருக்கிறதே ஏன், டிங்கு?

- ஆர்.எம். நித்திலன், 5-ம் வகுப்பு, நசரேத் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கன்னடபாளையம், ஆவடி.

பிரபஞ்சத்தில் இருக்கும் நட்சத்திரங்கள், கோள்கள், நிலவுகள், குறுங்கோள்கள் என அனைத்து வான் பொருள்களுக்கும் ஈர்ப்புவிசை இருக்கிறது, நித்திலன். ஒவ்வொரு வான் பொருளின் நிறைக்கு ஏற்றபடி ஈர்ப்புவிசையின் அளவு வேறுபடும்.

பூமியின் நிறை அதிகம் என்பதால் ஈர்ப்புவிசை அதிகமாக இருக்கிறது. நிலவின் நிறை குறைவு என்பதால், பூமியின் ஈர்ப்புவிசையில் ஆறில் ஒரு பங்கு ஈர்ப்புவிசையே அங்கு இருக்கிறது.

வெள்ளிக் கோளும் பூமியும் கிட்டத்தட்ட ஒரே நிறை என்பதால், ஈர்ப்புவிசையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். செவ்வாய் கோளின் நிறை பூமியின் நிறையைவிடக் குறைவாக இருப்பதால், அங்கு ஈர்ப்புவிசையும் குறைவாக இருக்கும்.வியாழன் கோள் மிகப் பெரியது, அதன் நிறை அதிகம் என்பதால், பூமியைவிட ஈர்ப்புவிசை அதிகமாக இருக்கும். அதாவது 2.4 மடங்கு ஈர்ப்புவிசை அதிகமாக இருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE