இடம் பொருள் மனிதர் விலங்கு: அரிஸ்டாட்டில் என்ன சொன்னார்?

By மருதன்

 

தென்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை, தினமும் தூங்கி எழுந்ததும் கலீலியோவுக்கு ஒரு புதிய சந்தேகம் வந்துவிடும். எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது என்று அவருக்கும் தெரியாது மற்றவர்களுக்கும் தெரியாது. எதையோ பார்ப்பார், ஏதோ யோசிப்பார், சந்தேகம் வந்துவிடும். உடனே குடுகுடுவென்று வீட்டைவிட்டு வெளியில் ஓடிவந்து கழுத்தை உயர்த்தி வானத்தைப் பார்ப்பார். அல்லது வீட்டுக்குள் நுழைந்து ஒரு வாளி தண்ணீரை மாடிக்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து கீழே கொட்டுவார்.

ஓ, இதுதானா விஷயம் என்று மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதிப்பார். அவருக்கு என்ன விடை கிடைத்தது? எப்படிக் கிடைத்தது? எதுவும் தெரியாது. இப்படித்தான் ஒரு நாள் தேவாலயத்துக்குப் போனார். போனோமா, பிரார்த்தனை செய்தோமா, வந்தோமா என்று இருக்கலாம் அல்லவா? கூரையில் தொங்கிக்கொண்டிருக்கும் பெரிய அலங்கார விளக்கைப் பார்த்துக்கொண்டே இருந்தார். வீசும் காற்றில் அந்த விளக்கு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் அசைந்துகொண்டிருந்தது. சில விநாடிகள் உற்றுப் பார்த்தார்.

ஐந்து முறையும் அந்த விளக்கு இடமிருந்து வலமாக அசைவதற்கு ஒரே நேரத்தையே எடுத்துக்கொண்டது. இது எப்படி? விளக்குக்குப் பதிலாக ஒரு நூலைக் கட்டி அதன் முனையில் ஒரு கல்லைத் தொங்கவிட்டால், அதுவும் விளக்கு போலவேதான் இடமிருந்து வலமாக அசையுமா? அப்படி அசைவதற்கு விளக்கு எடுத்துக்கொண்ட அதே நேரத்தைதான் எடுத்துக்கொள்ளுமா? சிறிய கல்லுக்குப் பதில் பாறாங்கல்லைக் கட்டினால்? அதுவும் அசையுமா? இதற்கு விடை தெரியாவிட்டால் மண்டை வெடித்துவிடுமே!

கலீலியோவுக்குப் பல நண்பர்கள் இருந்தனர். அவர்களில் பலர் ஆராய்ச்சியாளர்கள். ஆரம்பத்தில் அவர்களிடம்தான் சந்தேகங்களைக் கேட்டுவந்தார். ஆனால் விரைவில் அவருக்கு அலுத்துவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெரிய ஆய்வாளரை வழியில் நிறுத்திக் கேட்டார். ஐயா, ஒளி என்றால் என்ன? அரிஸ்டாட்டில் படி. ஐயா, ஒரு பொருள் ஏன் அசைகிறது? அரிஸ்டாட்டிலின் புத்தகம் உன்னிடம் இல்லையா? அதில்தான் எல்லா விளக்கங்களையும் அவர் கொடுத்துவிட்டாரே. ஏன் என்னை வந்து கேட்கிறாய்? ஐயா, சிலந்திக்கு எத்தனை கால்? அரிஸ்டாட்டில் கண்டுபிடித்து எழுதியிருக்கிறார், போய்ப் பார்.

வானம், நட்சத்திரம், காற்று, தத்துவம், மதம், இடம், பொருள், மனிதர், விலங்கு என்று எல்லாவற்றையும் பற்றி எல்லாமே தெரிந்து வைத்திருக்கும் ஒரே நபர் அரிஸ்டாட்டில்தான் என்றார்கள் கலீலியோவுக்குத் தெரிந்த ஆராய்ச்சியாளர்கள். கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் மூன்றையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அரிஸ்டாட்டில் கரைத்துக் குடித்துவிட்டார் என்று அவர்கள் சத்தியம் செய்தார்கள்.

அப்படி ஒருவராலும் எதையும் கரைக்கவும் முடியாது, குடிக்கவும் முடியாது என்பது கலீலியோவின் நம்பிக்கை. இப்படியே ஆராய்ச்சியாளர்கள் எதையும் செய்யாமல் அரிஸ்டாட்டில், அரிஸ்டாட்டில் என்று மந்திரம்போல் சொல்லிக்கொண்டிருந்தால் யார்தான் நிஜமான ஆராய்ச்சிகளை மேற்கொள்வது?

கலீலியோ ஒரு முடிவுக்கு வந்தார். ஊரில் உள்ள எல்லா பெரிய மனிதர்களையும் ஒன்று கூட்டினார். மதிப்புக்குரிய ஆராய்ச்சியாளர்களே, எனக்கு ஒரு முக்கியமான சந்தேகம். எல்லா விலங்குகளிலும் ஆண்களைவிடப் பெண்களுக்குப் பற்கள் குறைவாக இருக்கும் என்று அரிஸ்டாட்டில் சொல்லியிருக்கிறார், அது உண்மையா? மனிதர்களுக்கும் இது பொருந்தும் என்று அவர் சொல்லியிருக்கிறாரே? உடனே எல்லோரும் ஒரே குரலில் பதிலளித்தார்கள். அரிஸ்டாட்டில் சொன்னால் அது உண்மையாகத்தான் இருக்கவேண்டும்!

கலீலியோ சிரித்தார். இங்கே ஆண்களும் இருக்கிறார்கள், பெண்களும் இருக்கிறார்கள். இருவருடைய பற்களையும் நம்மால் எண்ணிப் பார்த்து உண்மையைக் கண்டுபிடித்துவிடமுடியும். இதற்குக்கூடவா அரிஸ்டாட்டிலைப் பிடித்து இழுக்கவேண்டும்? யார் சொன்னாலும் நம்ப மாட்டேன், நானே பரிசோதித்து உண்மையைக் கண்டுபிடிப்பேன் என்று சொல்வதுதானே ஐயா அறிவியல்?

அப்படியானால் அரிஸ்டாட்டிலைவிட நீ பெரிய ஆளா? என்று அவர்கள் பதிலுக்குச் சீறினார்கள். கலீலியோ அழுத்தமான குரலில் பேசினார். இல்லை, உங்களையும் என்னையும் அரிஸ்டாட்டிலையும்விட அறிவியல் பெரியது என்றுதான் சொல்கிறேன். அரிஸ்டாட்டிலை நான் உங்கள் எல்லோரையும்விட அதிகம் மதிக்கிறேன். ஆனால் அதற்கான காரணம் வேறு.

சற்று இடைவெளி கொடுத்துவிட்டுத் தொடர்ந்தார். அரிஸ்டாட்டில் தனக்கு ஏற்பட்ட எல்லாச் சந்தேகங்களுக்கும் தானே பதில்களைத் தேடிக்கொண்டார். சரியோ தப்போ, அவரே ஆராய்ச்சிகள் செய்தார். நாமும் அதைத்தான் செய்யவேண்டும். அரிஸ்டாட்டில் சொன்னது எல்லாமே சரி என்று நீங்கள் சொன்னால் நீங்கள் அரிஸ்டாட்டிலைப் புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம். தன்னைப்போல் சுயமாகச் சிந்திப்பவர்களைத்தான் அவர் விரும்புவார்.

இப்போது சொல்லுங்கள். ஒரு பாறாங்கல்லையும் மயில் இறகையும் மேலிருந்து போட்டால் எது முதலில் கீழே வந்து விழும் என்றார் கலீலியோ. ஓ, இந்தக் கேள்விக்கு ஏற்கெனவே... என்று தொடங்கிய ஓர் ஆராய்ச்சியாளர் சட்டென்று மாற்றிக்கொண்டார். நாம் ஏன் ஆராய்ச்சி செய்து பார்க்கக்கூடாது கலீலியோ?

அப்பாடா என்று நிம்மதியாக வீட்டுக்குப் புறப்பட்டார் கலீலியோ. ஒரு நிமிடம் இருங்கள் என்றார் அவரைப் பின்தொடர்ந்துவந்த ஒருவர். பெண்களுக்குக் குறைவான பற்கள் இருப்பது உண்மையா? கலீலியோ புன்னகை செய்தார். அதை இன்று நீங்கள்தான் கண்டுபிடித்துச் சொல்லவேண்டும்!

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்