செ
ண்பகக் காட்டில் காகம் குடும்பம் வசித்த மரத்துக்கு அருகே ஒரு குரங்கு தன் மனைவியுடன் வசித்துவந்தது. காகமும் குரங்கும் நண்பர்களாகப் பழகிவந்தன. காகம் குரங்கிடம் உண்மையான அன்போடு நடந்துகொண்டது. ஆனால் குரங்கின் மனதில் உண்மையான அன்பு இல்லை.
ஒருநாள் காகம் உணவு தேடி காட்டில் பறந்து திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு மரத்தில் நிறைய கொட்டைகள் இருப்பதையும், அவற்றைக் கிளிகள் பறித்துச் செல்வதையும் பார்த்தது.
‘ஆஹா! இந்தக் கொட்டைகளுக்குள் சுவையான பருப்பு இருக்கும்’ என்று நினைத்த காகம், மரத்திலிருந்து கொட்டைகளைப் பறித்தது. அவற்றை ஒவ்வொன்றாகத் தன் இருப்பிடத்துக்கு எடுத்துவந்தது.
ஆனால் கிளியைப்போல் காகத்துக்கு வளைந்த உறுதியான அலகு இல்லை. அதனால் அந்தக் கொட்டைகளைக் காகத்தால் உடைக்க முடியவில்லை.
கொட்டைகளை எப்படி உடைக்கலாம் என்று காகம் யோசித்தபோது, தன் நண்பன் குரங்கின் ஞாபகம் வந்தது. உடனே காகம் தான் பறித்துவந்த கொட்டைகளை எல்லாம் குரங்கிடம் எடுத்துச் சென்றது.
"நண்பா! இதோ கொட்டையினுள் சுவையான பருப்பு இருக்கும் என்று தெரிகிறது. இதை என்னால் உடைக்க முடியவில்லை. நீ உடைத்துத் தர முடியுமா?" என்று கேட்டது காகம்.
"அதனால் என்ன... என்னிடம் கொடு" என்று செரன்ன குரங்கு, காகத்திடமிருந்து கொட்டைகளை வாங்கிக்கொண்டது.
ஒரு கொட்டையைத் தரையில் வைத்த குரங்கு, அருகில் கிடந்த ஒரு பெரிய கல்லை எடுத்து அந்தக் கொட்டையின் மீது போட்டது. கொட்டை உடைந்து உள்ளிருந்த பருப்பு வெளியே விழுந்தது.
உடனே அந்தப் பருப்பை எடுத்து, தின்று பார்த்தது குரங்கு. பருப்பு மிகவும் சுவையாக இருந்தது. அப்போது குரங்கின் மனதில் ஒரு தீய எண்ணம் தோன்றியது. காகம் கொண்டுவந்த கொட்டைகள் அனைத்தையும் தானே உண்ண நினைத்தது. எனவே அது தன் வாயிலிருந்த பருப்பை வெளியே துப்பியது.
கூடவே முகத்தைச் சுளித்துக்கொண்டு, "நண்பனே! இந்தப் பருப்பு மிகக் கசப்பாக இருக்கிறது. வாயில் வைக்கவே முடியவில்லை. ஏதோ விஷக் கொட்டையாக இருக்கும் என்று நினைக்கிறேன். வேண்டாம் இதைச் சாப்பிடாதே!" என்று காகத்திடம் சொன்னது.
குரங்கு சொன்னதை காகமும் உண்மை என்றே நம்பிவிட்டது.
"நல்லவேளை கிளிகளைப் பார்த்து நானும் இந்தக் கொட்டைகளை உண்ண நினைத்தேன். சரி விடு" என்றது காகம்.
காகம் போனதும் கொட்டைகள் அனைத்தையும் குரங்கு தன் குகைக்குள் கொண்டுபோய் வைத்துக்கொண்டது.
சிறிது நேரம் கழித்து காகம் ஒரு காரியமாகக் குரங்கைத் தேடி வந்தது. குகையில் குரங்கைக் காணவில்லை. ஆனால் குகையின் பின்னால் டப் டப் என்று சத்தம் கேட்டது. காகம் அங்கே என்ன சத்தம் கேட்கிறது என்று எட்டிப் பார்த்தது.
குரங்கு சற்று முன்பு தான் கொண்டு வந்த கொட்டைகளைக் கல்லால் உடைத்து உள்ளிருந்த பருப்பை எடுத்து தன் மனைவிக்குக் கொடுத்து, தானும் தின்றுகொண்டிருந்தது.
"ஆஹா! இந்தப் பருப்பு சுவையாக இருக்குதே. இது எப்படிக் கிடைத்தது?" என்று குரங்கின் மனைவி கேட்டது.
"என் முட்டாள் நண்பன் காகம்தான் கொண்டு வந்தான். இந்தக் கொட்டைகளை உடைத்து தரும்படி சொன்னான். நான் ஒரு கொட்டையை உடைத்து, தின்று பார்த்தேன். சுவையாக இருந்தது. ஆனால் காகத்திடம் இந்தக் கொட்டை கசப்பாக இருப்பதாகப் பொய் சொன்னேன். அவனும் நம்பிவிட்டான்" என்று சிரித்துக்கொண்டே சொன்னது குரங்கு.
காகத்துக்கு குரங்கின் சுயநலம் புரிந்தது. ‘இனி குரங்கின் நட்பு நமக்குத் தேவையேயில்லை’ என்று எண்ணியபடி கூட்டுக்குத் திரும்பி, தன் மனைவியிடம் நடந்ததைச் சொன்னது.
அதைக்கேட்ட பெண் காகம், "சரி போகட்டும். இனி கொட்டைகளை உடைப்பதற்கு வேறு யோசனை சொல்கிறேன். குரங்கு கல்லைத் தூக்கிப் போட்டுத்தானே கொட்டைகளை உடைத்தது! நம் காட்டுக்கு அருகில் ஒரு சாலை இருக்கிறது. அங்கே அடிக்கடி வண்டிகள் போகின்றன. நாம் கொட்டைகளைப் பறித்து சாலைகளில் போட்டு வைக்கலாம். வண்டிகளின் சக்கரம் ஏறி, கொட்டைகள் உடையும். பருப்பு எளிதாக வெளிவரும்" என்று சொன்னது.
பெண் காகத்தின் யோசனை ஆண் காகத்துக்குச் சரியாகத் தோன்றியது.
அன்றிலிருந்து காகங்கள் வாதுமை போன்ற கொட்டைகளைப் பறித்து சாலையில் போட்டு வைக்கின்றன. சாலைகளின் வழியே செல்லும் வண்டிகளின் சக்கரங்களில் கொட்டைகள் உடைந்தன. சாலையின் இரு பக்கங்களிலும் காத்திருக்கும் காகங்கள் வண்டிகள் நகர்ந்ததும் பருப்பைச் சாப்பிடுகின்றன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago