ஐ
ந்து யானைகள் வரிசையாக நடந்துவருகின்றன. விசில் சத்தம் கேட்டதும் முதல் யானை முன்னால் நடந்துவந்து குட்டிக் கரணம் அடித்து உருள்கிறது. பிறகு மறைந்துவிடுகிறது. அடுத்து இரண்டாவது யானை. இப்படி வரிசையாக நான்கு யானைகளும் உருண்டு மறைகின்றன. கடைசியாக ஒரே ஒரு குட்டி யானை மட்டும் மேடையில் தனியாக நின்று வேறு எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. உடனே யானைப் பாகன் மெல்ல நடந்துவந்து அந்த யானையின் முதுகில் தட்டிக் கொடுக்கிறார். ஓ, நான் மேடையில் இருக்கிறேனா என்று திடீரென்று கண் விழித்து சுற்றும் முற்றும் பார்க்கிறது அந்த யானை. பிறகு அழகாக எம்பி குதித்து சட்டென்று மறைந்துவிடுகிறது. எல்லோரும் கை தட்டி மகிழ்கிறார்கள். திரை விழுகிறது.
அடுத்து இசை நிகழ்ச்சி. சிவப்பு நிறத் தலைப்பாகை அணிந்த ஒருவர் தலையை ஆட்டி ஆட்டிப் பாடுகிறார். இன்னொருவர் மேளம் இசைக்கிறார். மூன்றாவது நபர் வயலின். குரல், மேளம், வயலின் மூன்றும் அழகாக இணைகின்றன. அழகிய நாட்டுப்புற இசை அந்த அரங்கை மூழ்கடிக்கிறது. உற்சாகமான கரவொலிகள். திரை. மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில் ஆடை அணிந்த ஒரு பெண் திடீரென்று வானத்திலிருந்து உதித்து எல்லோருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு மீண்டும் வானத்துக்கே பறந்துவிடுகிறார். திரை விளக்கு போடுகிறார்கள்.
இப்போது நீங்கள் பார்த்தது பொம்மலாட்டம். யானைகள், இசைக் கலைஞர்கள் என்று மேடையில் தோன்றிய அனைவரும் பொம்மைகள். அதனால்தான் வானத்தில் இருந்து திடீரென்று அவர்களால் மேடைக்கு இறங்கமுடிகிறது, கண்மூடி திறப்பதற்குள் மீண்டும் மேலே மறையமுடிகிறது. அந்தக் குட்டி யானையை அருகில் சென்று ஆராய்ந்தால் அதன் தலையிலும் தும்பிக்கையிலும் நீளமான, மெல்லிய கயிறுகள் கட்டப்பட்டிருப்பதைக் காணலாம். நான்கு கால்களிலும் நான்கு கயிறுகள். குட்டி வாலுக்கும் ஒரு கயிறு. பெரிய யானை, மேளம் வாசித்தவர், பாட்டுப் பாடியவர், வயலின் வாசித்தவர், யானைப் பாகன், வணக்கம் போட்ட பெண் என்று எல்லா பொம்மைகளும் கயிற்றில்தான் தொங்கிக்கொண்டிருந்தன.
நாம் பார்க்கும் மேடைக்கு மேலே இன்னொரு மேடை இருக்கும். அதில் கலைஞர்கள் மறைந்திருப்பார்கள். ஒரு கயிற்றை இழுத்தால் யானையின் முன் பக்க கால்கள் மேலே எழும்பும். இன்னொரு கயிற்றை அசைத்தால் தும்பிக்கை அசையும். குட்டிக் கரணம் அடிக்கவேண்டுமா? இரண்டு கால்களில் நிற்கவேண்டுமா? வாலை மட்டும் தனியே அசைக்க வேண்டுமா? எல்லாமே இந்தக் கலைஞர்களின் கையில்தான் இருக்கிறது. மேலே உள்ளவர் முரண்டு பிடித்தால் குட்டி யானையும் முரண்டு பிடிக்கும். மேலே உள்ளவர் தூங்கிவிட்டால் யானையும் தூங்கிவிடும். பாடுவதற்கும் வாத்தியங்களை இசைப்பதற்கும் வேறு கலைஞர்கள் இருப்பார்கள்.
மனிதர்களும் பொம்மைகளும் கைகுலுக்கிக்கொண்டு ஒன்று சேர்ந்து பணியாற்றினால்தான் இந்த அதிசயம் சாத்தியம். நமக்கு இது பொம்மலாட்டம். இந்தியாவின் பல பகுதிகளில் பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்தியா மட்டுமல்ல சீனா, ரஷ்யா, ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ் என்று உலகம் முழுக்க பல நாடுகளில் விதவிதமான பொம்மைகளும் விதவிதமான கலைஞர்களும் இணைந்து பல நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு மேடையில் டால்பின் வளையத்துக்குள் குதித்துக்கொண்டிருக்கும். இன்னொரு மேடையில் அதே டால்பின் மூக்குக் கண்ணாடி போட்டுக்கொண்டு சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கும். சீனாவுக்குப் போனால் டிராகனும் பாம்பும் கதை பேசிக்கொண்டே சாயா குடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
ஐயோ எனக்கு ரஷ்ய மொழியில் பேசத் தெரியாதே என்று பொம்மை பயப்படாது. அது உதடுகளை மட்டுமே அசைக்கப் போகிறது என்பதால் ரஷ்யாவிலும் பேசலாம், உருதுவிலும் பேசலாம், தமிழிலும் பேசலாம். எனக்குப் பேய் என்றால் பயம், நான் வர மாட்டேன் என்று குழந்தைகள் சொல்ல மாட்டார்கள். பேயின் தோள்மீது கை போட்டுக்கொண்டே பூங்காவில் சுற்றிவருவார்கள். இவ்வளவு உயரத்துக்கு என்னால் பறக்கமுடியாது என்று ஒரு தாத்தா வருத்தப்பட வேண்டியதில்லை. மேலே உள்ள கயிற்றை இழுத்தால் சூப்பர்மேனைவிட வேகமாக அவரால் பறக்கமுடியும்.
என்ன கதையில் வேண்டுமானாலும் நடிக்கலாம். என்ன பாட்டு வேண்டுமானாலும் பாடலாம். நடனம் ஆடலாம். மேஜிக் பண்ணலாம். சண்டை போடலாம். புலியின் வாலைப் பிடித்து இழுத்து வந்து, கன்னத்தில் தட்டலாம். ஒரு யானை எலியின்மீது ஏறி நிற்கலாம். ஒரு சிறுவன் விமானத்தின் இறக்கையைப் பிடித்தபடி பறக்கலாம். அந்த விமானத்தை ஓர் ஒட்டகச்சிவிங்கி ஓட்டிக்கொண்டு போகலாம். பொம்மைகள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம்.
ஆனாலும் பொம்மைகளுக்கு ஒரு குறை. அது என்ன என்பதை குட்டி யானை எழுந்து நின்று சொல்கிறது. ‘நான் இரவெல்லாம் கண்விழித்து ஆடுவதற்கும் பாடுவதற்கும் நிறைய பயிற்சிகள் எடுத்துக்கொள்கிறேன். இருந்தாலும் நீங்கள் ஏன் என்னைப் பார்க்க வருவதில்லை? என்னை விட்டுவிட்டு ஏன் எல்லோரும் டிவி பார்க்கிறீர்கள்? என்னைப்போல் உங்கள் டிவியால் ஒரு குதி குதிக்க முடியுமா? இதோ இப்படித் தலையை மட்டும் அசைக்க முடியுமா? இரண்டு கால்களால் நிற்க முடியுமா? அவ்வளவு வேண்டாம், வாலை மட்டுமாவது ஆட்ட முடியுமா? இப்படி எதையுமே செய்யாத டிவி என்னைவிடப் பெரிய ஆளா?’ இந்த யானைக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago