ஹ
ரியானாவின் தலைநகர் சண்டிகரில் அமைந்திருக்கிறது நேக் சந்த் பாறைப் பூங்கா. 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் வீணாகத் தூக்கி எறியப்பட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை.
உடைந்த பீங்கான் கோப்பைகள், தட்டுகள், மின்சார உதிரி பாகங்கள், குழல் விளக்குகள், மிதி வண்டியின் பாகங்கள், பாட்டில்கள், பானைகள், குழாய்கள், கண்ணாடி வளையல்கள், மொசைக் கற்கள் என்று குப்பையில் எறியப்பட்ட பொருட்களைச் சேகரித்து, கலை நயத்துடன் உருவங்களை இங்கே படைத்திருக்கிறார்கள்.
கோட்டைகள், நீர்வீழ்ச்சிகள், ஆளுயர மனிதர்கள், அரசர்கள், அரசிகள், இசைக் கலைஞர்கள், போர் வீரர்கள், விலங்குகள், பறவைகள் என்று விதவிதமாக இருக்கும் சிற்பங்களை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
இந்த அழகிய பாறைப் பூங்கா நேக் சந்த் சைனி என்ற தனி மனிதரால் உருவாக்கப்பட்டது என்பதை அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது. 1950களில் சண்டிகர் நகரம் சுவிட்சர்லாந்து கட்டிடக்கலை நிபுணர் லீ கார்பூசியர் என்பவரின் தலைமையில் வடிவமைக்கப்பட்டது. நேக் சந்த் சண்டிகரின் பொதுப்பணித்துறையில் சாலை ஆய்வாளராக இருந்தார். புது நகர் நிர்மாணித்ததால் பழைய கட்டிடங்கள் உடைக்கப்பட்டன.
தினமும் வேலை முடிந்தவுடன் பயன்படாத, உடைந்த பொருட்களைத் தன்னுடைய மிதிவண்டியில் எடுத்துச் சென்று, காட்டுப் பகுதியில் சேகரித்தார். மக்களின் பார்வைக்கு எளிதில் தெரியாத பகுதி அது. விடுமுறை நாட்களில் தான் சேகரித்த பொருட்களைக் கொண்டு விதவிதமான உருவங்களைச் செய்ய ஆரம்பித்தார்.
சுமார் 13 ஆண்டுகள் தனி மனிதராக கோட்டைகள், நீர்வீழ்ச்சி, பஞ்சாப் கிராமத்தின் வளைந்து செல்லும் பாதைகள், அரண்மனை, மனிதர்கள், விலங்குகள் என்று உருவாக்கியிருந்தார். நேக் சந்தின் பாறைப் பூங்கா ஒருநாள் அரசு அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டது.
அது சட்டத்துக்குப் புறம்பான செயலாக இருந்தாலும் அவருடைய படைப்பாற்றலைக் கண்டு வியந்தனர்.
அவரை அந்தப் பாறைப் பூங்காவின் மேற்பார்வையாளராக நியமித்து, அவருக்குக் கீழ் 50 பணியாளர்களையும் அமர்த்தினர். அவர்களுக்கு நேக் சந்த் பயிற்சி கொடுத்து, தோட்டத்தை விரிவுபடுத்தினார். 18 ஏக்கரில் இருந்த இந்தப் பூங்கா, இன்று 40 ஏக்கர் அளவுக்குப் பரந்துவிரிந்துள்ளது. விரிவாக்கப் பணி இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
நேக் சந்தின் இந்தப் படைப்பாற்றலுக்குக் காரணம் என்ன தெரியுமா? அவரது அம்மா கூறிய ராஜா, ராணி கதைகள், தேவதைக் கதைகள், மந்திரவாதி கதைகள்தான். கதைகளைக் கேட்கும்போது அவற்றைக் காட்சிகளாகக் கற்பனை செய்துகொள்வார். இதனால் அவரது கற்பனைத் திறனும் படைப்பாற்றலும் பெருகின. இந்தப் பாறைப் பூங்காவை உருவாக்கவும் வைத்தன.
1976-ம் ஆண்டு இந்தப் பூங்கா பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவிடப்பட்டது. தினமும் 5 ஆயிரம் பேர் இந்தப் பூங்காவைப் பார்வையிட்டுச் செல்கிறார்கள்.
1983-ம் ஆண்டு பாறைப் பூங்காவைச் சிறப்பிக்கும் வகையில் தபால் தலை ஒன்று வெளியிடப்பட்டது. நேக்சந்தின் சேவையைப் பாராடி, பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. சர்வதேச அளவிலும் நேக் சந்த் புகழ் பரவியது. பாரிஸ், பெர்லின் போன்ற நகரங்களில் அவருடைய படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
1986-ம் ஆண்டு வாஷிங்டனில் உள்ள தேசியக் குழந்தைகள் பூங்காவை வடிவமைத்தார் நேக் சந்த். இன்று நேக் சந்த் இல்லாவிட்டாலும் அவரது படைப்புகள் உலகம் முழுவதும் அவரது புகழைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன.
தொடர்புக்கு: mangai.teach@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago