டிங்குவிடம் கேளுங்கள்: செய்தித்தாள்களின் கீழ் வண்ணப் புள்ளிகள் எதற்கு?

By செய்திப்பிரிவு

செய்தித்தாள்களின் அடியில் வண்ணப் புள்ளிகளை ஏன் வைக்கிறார்கள், டிங்கு?

- வி.பி. அத்வைதா, 11-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.

நல்ல கேள்வி. செய்தித்தாள்களில் வண்ணப் படங்களும் உண்டு, கறுப்பு எழுத்துகளும் உண்டு. எனவே அச்சடிக்கும்போது படங்களும் எழுத்துகளும் வரவேண்டும். அதற்காக நான்கு வண்ணங்களைக் (cyan, magenta, yellow, black -CMYK) கொண்ட தனித்தனி சிடிபி எனப்படும் அலுமினியம் பிளேட்களில் அச்சு எடுக்கப்பட்டு, அச்சு இயந்திரத்தில் ஓட்டப்படுகின்றன.

சயான், மெஜந்தா, யெல்லோ, பிளாக் வண்ணங்களைத் தாளில் புள்ளிகளாக வைத்து, சரியாக இருக்கிறதா என்று பார்த்து, நான்கு பிளேட்களையும் ஓட்டுவார்கள். தாளின் கீழ் நான்கு வண்ணங்களும் சரியாக இருந்தால், தாளிலும் அது சரியாக அச்சாகும்.

இதற்காகவே அந்த வண்ணப்புள்ளிகள் வைக்கப்படுகின்றன. இது, அச்சகப் பணிக்கானது. செய்தித்தாள்கள் மட்டுமல்ல, பத்திரிகைகள் உள்பட வண்ணத்தில் அச்சாகும் அனைத்துக்கும் கீழே இந்த வண்ணப்புள்ளிகள் இருக்கும். அவற்றில் எல்லாம் வண்ணப்புள்ளிகளை வெட்டிவிடுவதால், நம் கண்களுக்குத் தெரிவதில்லை.

CMYK என்பதில் கறுப்புக்கு B என்றுதானே வரவேண்டும், ஏன் K என்று உங்களுக்குத் தோன்றலாம். அடிப்படை ஏழு வண்ணங்களில் Blue வண்ணத்துக்கு B வந்துவிடுவதால், கறுப்புக்கு Key note என்று ஐரோப்பாவில் சொல்லப்பட்டதால்,
K என்று பயன்படுத்தப்படுகிறது, அத்வைதா.

குரங்கிலிருந்து மனிதன் வந்ததாகச் சொல்கிறார்கள். அப்படி என்றால் இன்றைய குரங்குகள் ஏன் மனிதனாக மாறவில்லை, டிங்கு?

- ஆர். இனியா, 5-ம் வகுப்பு, லட்சுமி பள்ளி, தஞ்சாவூர்.

பரிணாம வளர்ச்சி என்பது ஒன்றிரண்டு ஆண்டுகளிலோ நூறு, இருநூறு ஆண்டுகளிலோ நடந்துவிடக்கூடியது அல்ல. பரிணாம வளர்ச்சியில் ‘காலம்’ என்பது மிக முக்கியமானது. 2.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரே மூதாதையரிடமிருந்து மனிதனும் குரங்கும் இரண்டு வேறு உயிரினங்களாகப் பிரிந்தன. 2.5 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான இந்த இரண்டு இனங்களும் கொஞ்சம் கொஞ்சமாகப் பரிணாம வளர்ச்சியடைந்து, இன்றைய மனிதர்களாகவும் குரங்குகளாகவும் மாறியிருக்கின்றனர்.

மனிதர்களும் ரீசஸ் குரங்குகளும் டி.என்.ஏ.,வில் 93 சதவீத ஒற்றுமையைக் கொண்டுள்ளன. மீதி இருக்கும் வேற்றுமை காரணமாக 2.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தங்களின் பொதுவான மூதாதையரிடமிருந்து மனிதர்களும் ரீசஸ் குரங்குகளும் இரண்டு வேறு உயிரினங்களாகப் பிரிந்துவிட்டன. அதனால், இன்றைய குரங்குகள் மனிதனாக மாற இயலாது, இனியா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE