ஒரு குட்டிப் புலியின் குரல்

By ஆதி

சுட்டிக் குழந்தைகளே! நான்தான் குட்டிப் புலி கோபு! இப்போதான் முதன்முதலா உங்களைப் பாக்குறேன். அதனால, நானே அறிமுகப்படுத்திக்கிறேன்.

நான் ஒரு வேங்கைப் புலிக் குட்டி (Bengal Tiger). வேங்கைப் புலின்னா, ஏதோ வித்தியாசமான புலின்னு நினைச்சுக்காதீங்க. இந்தியாவோட தேசிய விலங்குன்னு படிச்சிருப்பீங்கள்ல. அந்தப் புலியோட குட்டிதான் நான். மூங்கில் புதர்கள் நிறைஞ்ச ஒரு காட்டுலதான் நான் பொறந்தேன். இப்போதான் இந்த உலகத்தை எட்டிப் பாக்குறேன்.

ஏன்னா, நான் ரொம்ப ரொம்ப குட்டி. எனக்கு பார்வை தெரிஞ்சு கொஞ்ச நாள்தான் ஆச்சு. பொறந்து ரெண்டு, மூணு வாரத்துக்குப் பின்னாடிதான் புலிக் குட்டிகளுக்கு கண்ணு தெறக்கும். நாங்க எல்லாமே ‘மியாவ் மியாவ்’னு கத்தும் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. சந்தேகமா இருந்தா, என்னையும் உங்க வீட்ல இருக்கிற பூனையோட உடலையும் பக்கத்துல பக்கத்துல வைச்சு யோசிச்சுப் பாருங்க. எங்களை பெரிய பூனைகள்னு சொல்வாங்க.

என்னோட கூடப் பொறந்தவங்க ஒரு அண்ணனும் அக்காவும். நாங்க எங்க அம்மாவோட இருக்கோம். எங்க அப்பா இந்தக் காட்டுலதான் இருக்காரு, ஆனா எங்ககூட இல்லை. புலிக் குடும்பங்கள்ல இதுதான் வழக்கம். அம்மாதான் எங்களை வளர்ப்பாங்க. எப்படி வேட்டையாடுறதுன்னும் அவங்கதான் சொல்லிக் கொடுப்பாங்க. இப்போதைக்கு நான் வேட்டைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. எங்க அம்மா வேட்டையாடி கொண்டுவர்றதை சாப்பிட்டுட்டு, அண்ணே, அக்காவோட விளையாடுவேன்.

அப்பப்ப நாங்க செல்லச் சண்டை போட்டுக்குவோம், தெரியுமா? ரொம்ப ஜாலியா இருக்கும். நாங்க மாறிமாறி கடிச்சுக்குவோம். ஆனா, வலிக்காது. எல்லாமே பொய்க்கடி. அந்த பொய்க்கடியை எப்படி நிஜக்கடியா மாத்துறதுன்னு, பின்னாடி எங்க அம்மா சொல்லிக் கொடுப்பாங்க. அப்போ, நாங்களும் அம்மாவோட வேட்டைக்குப் போவோம். நானே தனியா வேட்டையாட ஒண்ணு, ரெண்டு வருஷம் ஆகும்.

ஆனா அதுவரைக்கும், எங்ககூட இருக்க முடியுமான்னு தெரியலை, சந்தேகமா இருக்குன்னு அம்மா கவலைப்படுறாங்க. தனியா இருக்கும்போது அவங்க சோகமா இருக்கிறது, அதனாலதான்னு நான் நினைக்கிறேன்.

சரி, அவங்க ஏன் இப்படி கவலைப்படணும்? எங்க அம்மாவுக்கு இப்பவெல்லாம் சாப்பாடு ஈஸியா கிடைக்கிறதில்லை. அதுக்கு மேல, காட்டுல அப்பப்ப துப்பாக்கி சத்தம் கேட்கிறதுனாலதான் அவங்க கவலைப்படுறாங்க. என்னைக்கு வேணா, அவங்க மேல துப்பாக்கி குண்டு பாயலாம்னு நினைக்கிறாங்க.

உலகத்துல இப்போ மொத்தமே 3,500 புலிங்கதான் இருக்குதாம். அதுல பாதி இந்தியாவுல இருக்கோம். இதிலேர்ந்து தெரியலையா, எங்க இனத்தோட நெலமை எவ்வளவு மோசமா இருக்குன்னு? சரி, புலி அழிஞ்சு போறதைப் பத்தி நீங்க ஏன் கவலைப்படணும்னு கேக்குறீங்களா?

மான்தான் எங்களோட முக்கியமான இரை. அதை நாங்க அடிச்சு சாப்பிடுறதால காட்டுல மரம், செடி-கொடியெல்லாம் ஒட்டுமொத்தமா அழியாம இருக்கும். இல்லைன்னா, மான்களெல்லாம் மொத்த காட்டையும் அழிச்சிடலாம். நாங்க மொத்தமா அழிஞ்சு போனா, மான்கள் பெருகும். அப்போ காடும் அழிஞ்சுதானே போகும். காடு அழிஞ்சா, மழை பெய்யாதுன்னு படிச்சிருப்பீங்க. காடு அழிஞ்சா மனுஷங்களுக்குத்தான் பெரிய பிரச்சினைன்னு அம்மா சொல்வாங்க.

இதுக்கு மேல நான் என்ன சொல்லணும்?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்