இங்கிலீஷ் சபதம்!

By ஆ.குமரவேல்

கல்லூரி மாணவப் பருவம் ஆச்சரியமானது. அறிவுரையும், அறிவுரை சொல்வோரையும் பிடிக்காது. ஆனால், ஒரு ஆங்கிலப் பழமொழி சொல்கிறது, அறிவுரை சொல்வதும் சொல்லப்பட்டதைப் பின்பற்றாததும் முட்டாள்தனமானது. அதுபோன்றதொரு நினைவலையைத்தான் உங்களோடு நான் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.

அன்று கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கின. பிளஸ் டூவரை தமிழ் மொழி வழிப் பயின்று, கூடியிருந்த மாணவர்கள் மத்தியில் பேசினேன். “மாணவர்களே! இனி ஆங்கில வழியிலேயே ஆசிரியர்கள் கற்பிப்பார்கள். நீங்களும் ஆங்கிலத்திலேயே படிக்க வேண்டும். தேர்வுகளை ஆங்கிலத்திலேயே எழுத வேண்டும் என்பது பயப்படக் கூடிய விஷயம் அல்ல, உங்களைப் பலப்படுத்த வேண்டிய விதி. நோட்டுப் புத்தகங்களில் புதிய ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தத்தை எழுதிக்கொள்ளுங்கள். அதன் பிறகு அதை மனப்பாடம் செய்யுங்கள். அந்த வார்த்தைகளை நன்பர்களோடு விவாதியுங்கள். மற்றவர்களோடு ஆங்கிலத்தில் பேசினால்தான், ஆங்கிலப் புலமை வளாரும்” என்று அறிவுரைகளை நீட்டி முழக்கினேன்.

கலாய்ப்பு தந்த கோபம்

நான் சொன்னதை எல்லா மாணவர்களும் பின்பற்றினார்களா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், பிரசாத் என்ற ஒரு மாணவர் மட்டும் நான் சொன்னதை அப்படியே பின்பற்றினார். அந்த மாணவர் ஒரு நாள் என்னிடம் சோகமாக வந்து நின்றார். என்ன, ஏது என்று கேட்பதற்குள், “கிளாஸுக்குப் போயிட்டிருந்தேன் சார்! ஒரு சீனியர் எங்களைக் கூப்பிட்டாரு. நாலஞ்சு பேர் போனோம். ஒரு பொண்ணு மட்டும் வர்ல. அந்த சீனியர், ‘என்ன மேடம், நான் கூப்பிட்டா வந்து பேச மாட்டியா, ஆர் யு க்வீன் ஆஃப் சேஸ்டிட்டி (chastity) என்று திட்டினார். அந்தப் பெண்ணுக்குத் தமிழ் தெரியாது. வட இந்தியாவிலிருந்து வந்திருந்த அந்த மாணவி, ‘அப்கோர்ஸ், எவரி இந்தியன் வுமன் இஸ் ஏ க்வின் ஆஃப் சேஸ்டிட்டி” என்று சொன்னார்.

அந்தப் பெண் சொல்வதைக் கேட்டு அந்த சீனியர் வாயடைத்துப் போனார். “சேஸ்டிட்டின்னா என்ன” என்று என்னைக் கேட்டார். எனக்குத் தெரியவில்லை. திருதிருவென முழித்தேன். அதற்கு அந்த சீனியர் “அந்தப் பொண்ணு எவ்வளவு அழகா இங்கிலீஷ் பேசுனா, நீயும் இருக்கியேன்னு” திட்டிவிட்டார். எனக்கு அவமானமாகப் போயிடுச்சு சார். அந்தப் பொண்ணு வேற, சீனியர் என்ன சொன்னார் என்பதை மற்றவர்கள் மூலம் தெரிந்து என்னைக் கலாய்த்துவிட்டார். எனக்கு வந்த கோபத்தில் அந்தப் பெண்ணிடம், ‘நீ பேசுற இங்கிலீஷைவிட என் இங்கிலீஷ் லெவலை உயர்த்திக் காட்டுறேன்’னு சவால் விட்டுட்டு வந்துட்டேன் சார். நீங்கதான் அதுக்கு உதவணும்” என்று முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு கேட்டார்.

பேச்சுப் போட்டி சவால்

நான் உடனே சிட்னி ஷெல்டன், ராபின் குக், ஆர்.கே. நாராயண், ஜெஃப்ரி ஆர்ச்சர் என்று நான் விரும்பிப் படித்த ஆங்கிலப் புத்தகங்களை அவருக்குக் கொடுத்துப் படிக்கச் சொன்னேன்.

கல்லூரியில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆங்கிலப் பேச்சுப் போட்டி நடக்கும். அந்தப் போட்டிக்கு நடுவராக நான் இருப்பேன். அந்த மாணவர் முதல் வரிசையில் பார்வையாளராக அமர்ந்திருப்பார். அந்த வட நாட்டுப் பெண்தான் முதல் பரிசை அதிக முறை வென்றிருக்கிறார். இது தொடர்கதையானது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் ஆங்கிலப் பேச்சுப் போட்டி நடந்தது. மூன்று நடுவர்களில் ஒரு நடுவராக நானும் அமர்ந்திருந்தேன். பிரசாத் பெயரும் பேசுவோர் பட்டியலில் இருந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியம்.

‘அவனுக்கு என்ன ஒரு அசட்டுத் தைரியம்’ என்று மனதுக்குள் தோன்றியது. இருந்தாலும், அவனுக்கு இது பயிற்சியாக இருக்கும் என்று நினைத்தேன். முன் வரிசையில் இருந்த அவனது பெயரை கடைசிக்கு மாற்றினேன். வழக்கம்போல் அந்த வட இந்திய மாணவி, ஆங்கிலச் சுனாமியைப் பிரசவித்தார். கடைசியாக பிரசாத்தைச் சற்று அலட்சியத்தோடு அழைத்தேன்.

அன்று பேசியது அவன்தானா?, என்ன அற்புதமான நடை. என்ன ஒரு வார்த்தை பிரவாகம்? ஆர்க்டிக் பனியை உருக்குகிற வெப்பக் கருத்துகள், சீசன் குற்றாலமாய்க் கொட்டின வார்த்தைகள். பேச்சின் இடையே ராபர்ட் ஃப்ராஸ்ட் கவிதை, வால்ட் விட்மனின் வசனம், கலீல் ஜிப்ரானின் வாக்கியங்களை மேற்கோளாகக் காட்டி பேச்சை முத்தாய்ப்பாக முடித்தான்.

பேசி முடித்ததும் அரங்கமே அதிர்ந்தது. அவரது பேச்சைக் கேட்டு நான் மட்டுமல்ல, பிற நடுவர்களும் வாயடைத்துப்போனோம். இறுதியில் நாங்கள் அந்த மாணவரை முதல் பரிசுக்குத் தேர்வு செய்தோம். பரிசு வாங்கிய பிறகு பிரசாத் ஏற்புரை வழங்கினார்.

பேச வார்த்தை இல்லை

“தனது பரிசை அந்த மூத்த சீனியருக்கும் மூத்த பேராசிரியரான எனக்கும் சமர்ப்பிப்பதாக”ச் சொன்னார். அவர் பேசிய பேச்சைவிட இது எனக்குச் சிலிர்ப்பாக இருந்தது. பட்டம் பெற்ற பிறகு வெளிநாடு சென்று பயிலப் போவதாகவும், கிராமப்புற மாணவர்களுக்காக ஆங்கிலப் பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்கப் போவதாகவும் என்னிடம் சொன்னார். அவ்வாறே அவர் செய்தார். சில ஆண்டுகள் கழித்து அவரைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சைகையிலேயே என்னிடம் பேசினார். விபத்தில் சிக்கி அவருக்குப் பேசும் நரம்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. திரும்பவும் பேச்சு வர மருத்துவர்கள் முயல்வதாக சைகையில் சொன்னார். என் மனம் வலித்தது. அன்று அவர் பேசிய ஆங்கில உரை என் ஞாபகத்தைக் கிளறியது.

இவருக்கு ஏன் இப்படி ஆனது என்று மனதுக்குள் ஆயிரமாயிரம் கேள்விகள் சுற்றின. வாழ்க்கையில் சில கேள்விகளுக்குப் பதிலே இல்லை. அவர் செய்யக்கூடிய நல்ல விஷயங்களுக்குப் பலன் இல்லாமல் போகாது என்ற வார்த்தையும் எனக்கு நினைவு வந்தது. அவர் திரும்பவும் பேச வருவார் என்ற நம்பிக்கையை அது எனக்குள் விதைத்தது. அவர் திரும்பவும் பேச வருவார்தானே?

- பேராசிரியர் ஆ. குமரவேல்

உடற் கூறியல் துறை (அனாடமி),

கால்நடை மருத்துவக் கல்லூரி,

சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்