ஐ வில் பி (ஃ)பேக்!

By ந.வினோத் குமார்

அர்னால்ட்.

இந்தப் பெயருக்குத்தான் எத்தனை வலிமை. எத்தனை பெருமை!

வியர்வை ஆறாகக் கொட்ட, நரம்புகள் புடைக்க, இரும்பு போன்ற தசைகளைப் பெறுவதற்காக ஒவ்வொரு நாளும் ‘ஜிம்’மில் தவமாகக் கிடக்கிற எந்த ஒரு இளைஞரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள், ‘உங்களின் பாடிபில்டிங் ரோல்மாடல் யார்?’ என்று. அவர்கள் சொல்லும் முதல் பெயர், அர்னால்டாகத்தான் இருக்கும்!

அர்னால்ட், பாடிபில்டிங்குக்காக மட்டுமே ரோல்மாடலாக இருக்கவில்லை. ஆஸ்திரியாவில் சாதாரண ஜிம்மில் ‘பெஞ்ச் பிரஸ்’ செய்துகொண்டிருந்த ஒரு வாலிபன், பின்னாளில் ஹாலிவுட்டையே திரும்பிப் பார்க்கவைத்து, ரசிகர்களின் நெஞ்சங்களை அள்ளி, பிறகு கலிஃபோர்னியா கவர்னராகவும் ஆன பாதை இளைஞர்கள் பலருக்கும் ஒரு படிப்பினை!

ஆஸ்திரியாவில் பிறந்த அவர், தனது 15 வயது முதல் ஜிம்முக்குச் செல்ல ஆரம்பித்தார். 20 வயதில் ‘மிஸ்டர் யுனிவர்ஸ்’ பட்டத்தை வென்றார். 7 முறை ‘மிஸ்டர் ஒலிம்பியா’ பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டார்.

பாடிபில்டிங் மட்டுமே செய்துகொண்டிருப்பது வாழ்க்கைக்கு உதவாது என்று நினைத்த அர்னால்ட், நடிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். அதன் பலன், பல ஹாலிவுட் படங்களில் அடியாளாக வலம் வந்தார். ‘உன்னுடைய உடல் பார்ப்பதற்கு ஒரு மாதிரியாக இருக்கிறது’, ‘உன்னுடைய ஆங்கில உச்சரிப்பு சரியாக இல்லை’, ‘உன்னுடைய பெயர் ரொம்ப நீளமாக இருக்கிறது’- இப்படியெல்லாம் உப்புச் சப்பில்லாத விமர்சனங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இப்படிப் போய்க்கொண்டிருந்த காலத்தில் 1977-ம் ஆண்டு பாடிபில்டிங் பற்றிய ‘டாக்கு ட்ராமா’ படமான ‘பம்பிங் அயர்ன்’ எனும் படத்தில் நடித்தார். அந்தப் படம் வெளியான பிறகு அவருக்கு நிறைய படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன. அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி வளர்ந்துவந்த அவருக்கு 1982-ம் ஆண்டு வெளியான ‘கானன் தி பார்பேரியன்’ எனும் படம் திருப்புமுனையாக அமைந்தது.

அதற்குப் பின், ‘கமாண்டோ’, ‘ப்ரிடேட்டர்’, ‘ரெட் ஹீட்’, ‘டெர்மினேட்டர்’ எனப் பல வெற்றிப் படங்களில் நடித்து, ஆக்‌ஷன் ஹீரோவாகப் புகழின் உச்சிக்குச் சென்றார். ‘டெர்மினேட்டர்’ படத்தில் அவர் சொல்லும் ‘ஐ வில் பி பேக்’ (நான் திரும்பி வருவேன்) எனும் வசனம், பிரபலமோ பிரபலம்!

மேற்கண்ட பல படங்களைப் பார்த்து, உலகம் முழுவதும் அன்றைக்கு இருந்த பல இளைஞர்கள் பாடிபில்டிங்கை நோக்கி ஈர்க்கப்பட்டார்கள். இன்றைக்குப் பல இளைஞர்கள், பாடிபில்டிங்கையே ஒரு தொழிலாக வைத்திருக்கிறார்கள். அவர்களுக்காகவே ‘அர்னால்ட்: தி எஜுகேஷன் ஆஃப் எ பாடிபில்டர்’ என்ற புத்தகத்தை எழுதினார். ‘ஊமை விழிகள்’ படத்தில் அறிமுகமான அருண்பாண்டியன், அர்னால்டின் புத்தகத்தைப் படித்துத்தான் ‘இணைந்த கைகள்’ படத்துக்காகத் தன் உடலை ஏற்றியதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

நடிப்பில் உச்சத்தைத் தொட்ட அர்னால்ட், 2003-ல் கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராகவும் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தான் பதவியிலிருந்த காலத்தில், புவி வெப்பமயமாதல் குறித்துப் பேசியதோடு அல்லாமல், பசுங்குடில் வாயுக்களைக் குறைப்பதற்கான புதிய சட்டம் ஒன்றையும் இயற்றினார். அமெரிக்காவிலேயே கலிஃபோர்னியாவில்தான் அப்படி ஒரு சட்டம் முதன்முதலாக வந்தது.

இப்படிப் பல பெருமைகள் கொண்ட அர்னால்ட், சென்ற வாரம், தன் சிலை உள்ள ஓட்டலின் முன்பு தூங்கியது போன்ற ஒளிப்படம் வெளியானபோது, இணைய உலகில் அது வைரலானது. அந்தப் படத்தின் கீழே ‘காலம் எப்படி மாறிவிட்டது?’ என்றும் எழுதப்பட்டிருந்தது.

தான் பதவியிலிருந்த காலத்தில் அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில், தன்னை மாடலாக வைத்துச் செய்யப்பட்ட ‘கொலம்பஸ்’ சிலை உள்ள ஓட்டல் ஒன்றை அவர் திறந்துவைத்தார். தற்போது அவர் கவர்னர் பதவியில் இல்லாததாலும், பட வாய்ப்புகள் இல்லாததாலும் வறுமையால் வாடிய அவருக்கு, தங்குவதற்கான அனுமதியை அந்த ஓட்டல் நிர்வாகம் மறுத்தது. அதனால், தன் சிலை முன்பே படுத்துவிட்டார்.

இதைத்தான் கண்ணதாசன், ‘உன் நிலைமை கொஞ்சம் இறங்கிவந்தால் நிழலும்கூட மிதிக்கும்’ என்றாரோ?

இந்தக் கட்டுரையை இப்படி முடிப்போம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. வைரலான அந்தப் படம் உண்மை. ஆனால் அதற்குப் பின்னால் உள்ள கதை கட்டுக்கதை!

சென்ற ஆண்டு ஒஹையோவில் அந்தச் சிலை இருக்கும் பகுதியில் அர்னால்ட் கலந்துகொண்ட படம் ஒன்றின் ஷூட்டிங் நடந்தது. அப்போது குறும்பாக, இப்படி ஒரு படத்தை எடுத்துக்கொண்டு, அதைத் தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்திலும் ‘ஹவ் டைம்ஸ் ஹேவ் சேஞ்ச்ட்!’ என்ற வாக்கியத்துடன் பகிர்ந்திருந்தார். அதுதான் இன்று ‘ஓட்டல் கதை’யாகத் திரிக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் அந்தச் சிலைக்குப் பின்னால் இருக்கும் கட்டிடம், ஓட்டல் அல்ல. அது ‘கிரேட்டர் கொலம்பஸ் கன்வென்ஷன் சென்டர்’ எனும் ஒரு அரங்கம்.

அட போங்கப்பா! அர்னால்டாவது, வறுமையிலாவது, அடுத்த ஆண்டு ‘தி எக்ஸ்பெண்டபிள்ஸ் 4’-ல் அதிரடியா வருவார் பாருங்க… ஆமாம், ஹி வில் பி பேக்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்