பெற்றோருடன் பொங்கலைக் கொண்டாடு வதற்காக, இந்த ஆண்டு பொங்கல் சமயத்தில் குடும்பத்துடன் திருச்சி சென்றிருந்தேன். தெருவில் நுழைந்தவுடன், எங்கள் வீட்டுக்கு எதிரில் பொங்கல் வாழ்த்துகள் கூறி, “போராளி பிரதர்ஸ்” என்று பெரிதாக பேனர் வைத்திருந்தார்கள். ரத்தச் சிவப்பில் ‘போராளி பிரதர்ஸ்’ என்றிருக்க… எழுத்துகளின் மேல் தீப்பற்றி எரிய… பயங்கரக் கலவரமாக பொங்கலைக் கொண்டாட உத்தேசித்திருந்தார்கள்.
இரண்டு காரணங்களுக்காக நான் அந்தப் போராளி பிரதர்ஸைச் சந்திக்க விரும்பினேன். முதல் காரணம், பொதுவாக இந்த மாதிரி பேனர்களில் தங்கள் ஒளிப்படத்துடன், பெயரைப் போட்டிருப்பார்கள். ஆனால் அதில் யாருடைய பெயரும் படமும் இல்லாமல், தன்னடக்கத்துடன் வெறும் ‘போராளி பிரதர்ஸ்’ என்று மட்டுமே இருந்தது. அடுத்ததாக, அவர்கள் எதற்காகப் போராடியிருக்கிறார்கள் என்பதையும் அறிந்துகொள்ள விரும்பினேன்.
போராளிகள் எனது 17 வயது மகனின் நண்பர்கள்தான் என்பதால், அவர்களை அழைத்து, ‘ஏன் உங்கள் பெயர், படங்களைப் போடவில்லை?’ என்று விசாரித்தேன். ஒரு போராளி, “எங்களைத் தனியா அடையாளம் காமிச்சுக்கக் கூடாது. போராளி பிரதர்ஸ்ன்னாலே எல்லாருக்கும் தெரியணும்ண்ணன்” என்றார். “குட். நீங்க இதுவரைக்கும் என்ன போராட்டம் பண்ணியிருக்கீங்க?” என்று நான் கேட்டவுடன் போராளிகள் அத்தனை பேரும் அதிர்ச்சியாகி, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
ஒரு கூலிங் க்ளாஸ் போராளி மட்டும் சமாளித்துக்கொண்டு, “தெருவுல ஏதாச்சும் பிரச்சினைன்னா போராடுவோம்ண்ணன்” என்றார்.
“அந்த மாதிரி எதுக்காக போராடுனீங்க?”
இதற்கு மற்றொரு உயரமான போராளி, “இப்ப தெருவுல யாருக்காச்சும் உடம்பு சரியில்லன்னு வச்சுக்குங்க. ஆம்புலன்ஸ் வரவழைச்சு அழைச்சுட்டுப் போவோம்” என்றார்.
“குட். ஆனா அது போராட்டம் இல்ல. ஹெல்ப்”
இப்படி நான் கூற… போராளிகளுக்கு ‘போராட்டம்’ என்றால் என்ன என்பதிலேயே மிகுந்த குழப்பம் உண்டாகி திருதிருவென்று விழிக்க, நான் வீட்டுக்குத் திரும்பினேன்.
பின்னாலேயே வந்த என் மகன், “பொங்கலுக்கு விளையாட்டு நடத்தி, நாங்க பிரைஸ் தரப்போறோம்” என்றவுடன் நான் அரண்டுபோனேன். “நாங்க பிரைஸ் தரப்போறோம்” என்றால், எனது மகனும் போராளியாகிவிட்டான் என்றுதானே அர்த்தம்.
“இந்த போராளி பிரதர்ஸ்ல நீயும் ஒருத்தனா?” நான் கவலையுடன்.
“ஆமாம்… ஊருல இருக்கிறப்பவே ஃபோன்ல பேசிட்டோம். ஆளுக்கு ஒரு செலவு. என் பங்குக்கு ஐநூறு ரூபா தாங்க” என்றான். ஒரு 500 ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு, “உனக்கு என்ன செலவு?” என்று கேட்க... அவன், “இந்த பேனர் செலவு” என்றான்.
ஊருக்குச் செல்லும்போதேல்லாம் எனது மிக முக்கியமான வேலை, இது போன்ற பேனர்களைக் கவனிப்பதுதான். இந்த பேனர் விஷயத்தில், மாநிலத் தலைநகரான சென்னை மிக மிகப் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. சென்னையிலிருந்து தெற்காகச் செல்ல செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம் போன்ற இடங்களில் எல்லாம் ஆங்காங்கே பேனர்கள் கண்ணில் பட்டு, திருச்சியில் வேகம் எடுத்து, மதுரையிலிருந்து பின்னி எடுக்கிறார்கள். இளைஞர்கள்தான் பெரும்பாலும் பேனர்கள் வைக்கிறார்கள். கல்யாணம், காதுகுத்து என்று ஆரம்பித்து, ஊர்த் திருவிழாக்கள்வரை பல்வேறு தருணங்களில் பேனர் வைக்கிறார்கள்.
இந்த பேனர்களில் சில பொதுவான அம்சங்களைக் காண முடிகிறது. முன்புபோல் சும்மா பெயரும் ஒளிப்படமும் போட்டுக்கொள்வதில்லை. ‘போராளி பிரதர்ஸ்’ என்பது போல், ‘ஃபயர் பாய்ஸ்’, ‘தண்டர் பிரதர்ஸ்’, ‘டெர்ரர் பாய்ஸ்’ என்று சும்மா பெயரிலேயே மிரட்டுகிறார்கள். இவர்கள் ஏன் ‘ஃப்ளவர் பிரதர்ஸ்’, ‘பட்டர் பாய்ஸ்’, என்று மென்மையான பெயர்களை வைத்துக்கொள்ளக் கூடாது என்று யோசித்துப் பார்த்தேன். எனக்கே பிடிக்கவில்லை.
இந்த பேனர்காரர்கள், தங்கள் பெயர்களுக்கு முன்னால் பட்டப் பெயர் வைக்கும்போது முடிந்த அளவு எதுகை மோனையுடன், ‘சிலிண்டர் சின்னசாமி’, ‘சிவப்பு சிவா’, ‘கறுப்பு கந்தசாமி’, ‘நறுமணம்(?) நாராயணன்’ என்று ரைமிங்காக இருப்பதுபோலப் பார்த்துக்கொள்கிறார்கள். இவ்வாறு ரைமிங்காக இருப்பதற்காக, பொருத்தமற்ற பட்டங்களை தங்கள் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வதில்லை. சிலிண்டர் சின்னசாமி, கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்வார். சிவாவுக்கு, ஏன் சிவப்பு சிவா என்று சொல்லுங்கள் பார்ப்போம்.
பதில் மிகவும் எளிது. சிவா சிவப்பாக இருப்பார். இதை வைத்து ‘கறுப்பு கந்தசாமி’ கறுப்பாக இருப்பார் என்று நினைத்தால் அது தவறு. கந்தசாமியும் சிவப்பாகத்தான் இருப்பார். ஆனால் அவர் எப்போதும் கையில் கறுப்புக் கயிறு கட்டியிருப்பதால் இந்த பெயர். அதே போல் நறுமணம் நாராயணனும், நீங்கள் நினைப்பது போல் நறுமணத்துடன் இருக்க மாட்டார். அவர் ஊதுபத்தி கடை வைத்திருப்பார்.
இந்த பேனர்காரர்கள், தங்கள் பெயர்களுக்கு முன்னால் பட்டப் பெயர் வைக்கும்போது முடிந்த அளவு எதுகை மோனையுடன், ‘சிலிண்டர் சின்னசாமி’, ‘சிவப்பு சிவா’, ‘கறுப்பு கந்தசாமி’, ‘நறுமணம்(?) நாராயணன்’ என்று ரைமிங்காக இருப்பதுபோலப் பார்த்துக்கொள்கிறார்கள். இவ்வாறு ரைமிங்காக இருப்பதற்காக, பொருத்தமற்ற பட்டங்களை தங்கள் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வதில்லை. சிலிண்டர் சின்னசாமி, கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்வார். சிவாவுக்கு, ஏன் சிவப்பு சிவா என்று சொல்லுங்கள் பார்ப்போம்.
பதில் மிகவும் எளிது. சிவா சிவப்பாக இருப்பார். இதை வைத்து ‘கறுப்பு கந்தசாமி’ கறுப்பாக இருப்பார் என்று நினைத்தால் அது தவறு. கந்தசாமியும் சிவப்பாகத்தான் இருப்பார். ஆனால் அவர் எப்போதும் கையில் கறுப்புக் கயிறு கட்டியிருப்பதால் இந்த பெயர். அதே போல் நறுமணம் நாராயணனும், நீங்கள் நினைப்பது போல் நறுமணத்துடன் இருக்க மாட்டார். அவர் ஊதுபத்தி கடை வைத்திருப்பார்.
அடுத்ததாக ஒளிப்படங்கள்… முன்பெல்லாம் போஸ்டர்களில் பல காலம்வரை, ரோலிங் சேரில் சுற்றுவதுபோல், லேண்ட்லைன் ஃபோனில் பேசுவது போல் ஒளிப்படம் போட்டுக்கொண்டிருந்தார்கள். பிறகு செல்ஃபோன் வந்த புதிதில், காதில் பேசுவது போல் ஒரு செல்ஃபோன். சட்டைப் பாக்கெட்டில் ஒரு செல்ஃபோன், கையில் ஒரு செல்ஃபோன் என்று தூள் கிளப்பினார்கள். சிலர் கம்ப்யூட்டர் முன்பு ஜாவா புரோக்ராம் எழுதுவது போல் ஒளிப்படம் போட்டுக்கொண்டனர். சமீபகாலமாக அதையும் காணோம்.
இப்போது வெறுமனே வெள்ளைச் சட்டை அல்லது கோட் சூட் ஃபோட்டோ. அல்லது ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போல், யானை மேல், குதிரை மேல் அமர்ந்திருப்பது போல் போட்டு, ‘நாடு ஜனநாயகத்திலிருந்து மன்னராட்சிக்கு மாறிவிட்டதா’ என்று திகில் கிளப்புகிறார்கள்.
இவ்வாறு வைக்கப்படும் பேனர்கள், தமிழ் மொழிக்குச் செய்யும் பங்களிப்பு குறித்து யாரும் விவாதிப்பதில்லை என்பதில் எனக்குச் சற்று வருத்தம்தான். இத்தனை ஆண்டு காலம் தமிழில் இருந்து வந்த ‘ல’, ‘ள’, ‘ழ’, ‘ர’, ‘ற, ‘ன’, ‘ண’ என்ற வேறுபாடுகளை முற்றிலும் நீக்கிவிட்டு, யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எந்த ல, ள, ழ, எந்த ர, ற வேண்டுமென்றாலும் போடலாம் என்று முடிவெடுத்து, “பாளு-ழதா திறுமனத்திர்கு வந்தவர்கலை அண்புடண்’ வரவேற்றார்கள்.
சமீபகாலமாக தமிழ் மொழியில் இருக்கும் ‘துணைக்கால்’ என்பதைக் காலி செய்யலாமா என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் இவர்கள் ஆங்கிலத்தில் பேனர் வைக்க ஆரம்பித்தால், என்ன நடக்கும் என்று நினைத்தால், இப்போதே வயிற்றைக் கலக்குகிறது.
இந்த பேனர் கலாச்சாரத்தில் நமக்கு ஏன் இத்தனை மோகம்? அடிப்படையாக மனிதர்கள், சுயமோகம் கொண்டவர்கள். இந்த சுயமோகத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான், பேனர் கலாசாரம். நன்கு யோசித்துப் பார்த்தால், நம் அனைவருக்கும் நமது பெயரை தனித்துப் பார்ப்பதில் ஒரு விருப்பம் இருக்கிறது. நாம் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டவுடன் செய்யும் முதல் வேலை, நோட்டுப் புத்தகங்களின் கடைசிப் பக்கங்களில், விதம் விதமான டிசைன்களில் நமது பெயரை எழுதிப் பார்ப்பதுதான்.
பிறகு ரூபாய் நோட்டுகளில் தங்கள் பெயர்களை எழுதி புழக்கத்தில் விடுகிறார்கள். கோயில் டியூப்லைட்டில் உபயம் என்று பெயரை எழுதிக்கொள்கிறார்கள். கதை, கவிதைகள் எழுதுகிறார்கள். சினிமா எடுக்கிறார்கள். அவ்வளவு ஏன்? என்னிடமே “இந்தக் கட்டுரையை, உங்கள் பெயர் போடாமல் பிரசுரிக்கலாமா?” என்று கேட்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். நான், “கட்டுரையை வேணும்னா பிரசுரிக்காம விடுங்க. ஆனா என் பேரைப் போட்டுருங்க” என்பேன்.
(தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: grsnath71@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago