ஆதி மனிதனாக ஒரு நாள்!

By டாக்டர் வி.விக்ரம்குமார்

வாகன நெரிசல், முகம் மறைக்கும் புகைப் படலம், அதிகமான இரைச்சல் என எதுவும் இல்லாத ஒரு நாள் வாழ்க்கையை வாழ நானும் என் இளம் பிராயத்து நண்பன் மோகனும் முடிவு செய்தோம். மலைப் பிரதேசத்தில் அந்த ஒரு நாளைச் செலவழிக்கலாம் என்ற எண்ணத்தில், நாங்கள் தேர்ந்தெடுத்த இடம் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஒன்றான ஏலகிரி. ஒரு நாள் முழுவதும், செங்கல் வீடுகளை மறந்து, அரைவேக்காடு உணவு வகைகளைத் துறந்து, இயற்கை உணவு வகைகளோடு காட்டுக்குள் வாழ்வதென்று ஏற்பாடு.

காலை உணவுக்குப் பழங்கள்

காலை 7 மணிக்கு, வேலூர் மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து இரு சக்கர வாகனத்தில் தொடங்கிய எங்கள் பயணம், 8 மணி அளவில் ஏலகிரி மலைப் பகுதியில் முடிவடைந்தது. காலை உணவாகப் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ள நினைத்தோம். அதுவும் கொஞ்ச நஞ்சம் இல்லை. அங்கு கிடைத்த ஸ்டார் பழம், ஃபேஷன் பழம், லிச்சி, செர்ரி, ப்ளம்ஸ், கிவி, பப்ளிமாஸ், விதவிதமான நெல்லிகள், சீத்தாக்கள், பேரிக்காய், விளா, கொய்யா (வெள்ளை, சிவப்பு, பன்னீர்), பலா என ஒன்று விடாமல் கொய்வதாக முடிவெடுத்தோம்.

ஃபேஷன் பழத்தையும் விளாம் பழத்தையும் பாதியாக வெட்டி சிறிது பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்ட போது அவ்வளவு சுவையாக இருந்தது. ஸ்டார் பழத்தைச் சிறிது சிறிதாக அரிந்து, மிளகாய்த் தூளுக்குப் பதிலாக, மிளகுத் தூள் போட்டுக் கொடுக்கிறார்கள். சில இடங்களில் ஸ்டார் பழம், சீத்தா, கொய்யாப் பழங்களை மரங்களிலிருந்து உடனுக்குடன் பறித்துத் தருகிறார்கள்.

ஆலமர ஊஞ்சல்

காலை உணவுக்குப் பிறகு, அங்கிருந்த மரங்களையும், செடி, கொடிகளையும் பார்த்துப் பிரமித்து, இயற்கையோடு அளவளாவினோம். இரு சக்கர வாகனத்தில் மலைப் பகுதியைச் சுற்றி வந்தபோது இயற்கையின் பல்வேறு பரிமாணங்களைப் பார்க்க முடிந்தது.

ஆல மர விழுதுகளில் மகிழ் ஊஞ்சல் ஆடிய சிறிய வயது நினைவுகளை, அங்கு பெருமளவில் காணப்பட்ட ஆலமர விழுதுகளில் ஊஞ்சலாடி மீண்டும் தூசி தட்டினோம். குழந்தை மனநிலையுடன், விழுதுகளை அரவணைத்து, நம்பிக்கையுடன் துள்ளிக் குதித்தது உற்சாகமான அனுபவமாக அமைந்தது.

காட்டிற்குள் நடை

மதியத்துக்கு வாழை இலையில் பொதிவு செய்யப்பட்ட கறிவேப்பிலை, புதினா சாதமும், சில காய் வகைகளுமே எங்கள் உணவு. மதியத்துக்கு மேல், மலைப் பகுதிக்குள் நடைப்பயணம் சென்றது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தருவதாக இருந்தது. மான், காட்டு முயல், உடும்பு ஆகிய காட்டுயிர்களையும், சில வகைப் பறவைகளையும், அவை தண்ணீர் அருந்தும் நீர்நிலைகளையும் காண முடிந்தது.

பல வகையான மரங்கள், மருத்துவ மூலிகைகள் என காட்டுப் பகுதி முழுவதும் மருத்துவப் பொக்கிஷங்கள் நிறைந்திருந்தன. தைல மரக் காட்டினுள் நடந்து சென்றபோது உண்டான வாசம், மெய் மறக்கச் செய்தது. மற்ற ஊர்களில் அதிகமாகக் காணப்படும் நெகிழிப் பயன்பாடு இந்தக் காட்டில் மிகவும் குறைவு என்பது ஆறுதலான விஷயம்.

காட்டு இரவின் அழகு

இரவு நேரத்தில் காட்டிற்குள் செல்ல அனுமதி இல்லை. எனினும் இரவு சுமார் 7 மணி அளவில், காட்டின் எல்லைப் பகுதியில், தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சிறிது நேர நடைப் பயணம் மேற்கொண்டோம். சத்தம் உமிழும் பொம்மைத் துப்பாக்கி, வெளிச்சம் கக்கும் டார்ச், சில மரக்குச்சி கள், ஒளிப்படக் கருவி ஆகியவை எங்களோடு துணைக்கு வந்தன.

பறவைகளின் இரவு நாதம், காற்றோடு இலைகள் சேர்ந்து நடத்திய இன்னிசை விழா, விலங்கா அல்லது காற்றின் வேகமா என ஊகிக்க முடியாத சலசலப்பு, கால்களின் நடை வேகத்தை மிஞ்சும் இதய வேகம், இரவில் ஜொலித்த தாவரங்கள், அனைத்துக்கும் மேல் உண்டான உற்சாகம் ஆகியவை புது அனுபவத்தைக் கொடுத்தன.

படுக்கை அறையான கூடாரம்

காட்டுக்கு வெளியே சமவெளிப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறிய கூடாரம்தான் அன்று இரவு எங்களுக்கான படுக்கை அறை. அதற்குள் நானும் என் நண்பனும் மட்டும். கடந்த காலத்தை நினைவூட்டிய பல மணி நேரப் பேச்சு.காற்றின் வேகத்துக்கு ஏற்ப மரங்களும் எங்களோடு மெலிதாக உரையாடின. பின்னிரவு முழுவதும் கூடாரத்துக்கு வெளியே ஆள் அரவமற்ற அழகான அமைதி.

மையக் காட்டினுள் சிறிய கூடாரத்துக்குள் ஆழ்ந்த உறக்கத்திற்கான அற்புதமான சூழல் அமைந்தது. தூக்கமின்மை நோயால் அவதிப்படுபவர்கள் இது போன்ற இயற்கைச் சூழலை நாடலாம். குளிரைச் சகித்துக்கொள்ள ஆங்காங்கே கிடைத்த மரக்குச்சிகள் மூலம் உருவாக்கபட்ட நெருப்பு, குடிசைக்கு வெளியே இதமான வெப்பத்தையும் ஒளியையும் கசிய விட்டுக் கொண்டிருந்தது. கூடாரத்திற்குள் தங்க ஒருவருக்கு 400 ரூபாய் வசூலிக்கிறார்கள். ஒரு நாள் தங்குவதாக இருந்தால் தேவையான பொருட்களை மறக்காமல் எடுத்துக்கொள்வது பயணத்தைச் சிறப்பாக்கும்.

இயற்கை கொடுத்த அனுபவம்

ஒரு நாள் முழுவதும் இயற்கையோடு இசைந்து வாழ்ந்ததால், மறுநாள் காலை கிடைத்த புத்துணர்ச்சிக்கு அளவே இல்லை. சலித்துப்போன காலை அலாரத்துக்குப் பதிலாக, பல வகையான பறவைகளின் குரல்கள், பொழுது விடிந்ததை உணர்த்தின. மேகங்கள் உமிழ்ந்த நச்சில்லாப் புகை, சுவாசத்தை வசப்படுத்திய மூலிகை வாசம், மலைவாசிகளின் பழமை மாறாப் பழக்க வழக்கங்கள், மலை உயர மரக்கிளைகளில் மலைத் தேன்கூடுகள், வானுயர்ந்த ஆல மர விழுதுகளில் ஊஞ்சல் என மனதில் சுழன்றது ஏராளம். மொத்தத்தில் ஒரு நாள் ஆதி மனிதனாக வாழ்ந்த அலாதியான அனுபவம்.

மற்ற மலைப் பகுதிகளைப் போல‌ அல்லாமல், ஏலகிரியில் அமைதியான சூழல் நிலவுகிறது. படகு சவாரி, இயற்கைப் பூங்கா, பொழில்கள், வழிபாட்டு இடங்கள் எனச் சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. சில இடங்களில் கைபேசியில் பேச வாய்ப்பில்லாததால், இயற்கையோடு மட்டும் முழுமையாக நேரத்தைச் செலவிடலாம். அதிகமாகப் பணத்தை விரயம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. இயற்கை ஆர்வலர் கள் விரும்பும் அழகான,அமைதியான இடமாக ஏலகிரி நிச்சயமாக இருக்கும். ஏலகிரியில் ‘குறிஞ்சி பாதி முல்லை மீதி’. கூடவே பால்ய கால சிநேகிதன். இயற்கையை ரசிக்க இதை விட ஓர் அற்புதமான சூழல் அமையுமா என்ன?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்