அலையோடு விளையாடு! 12 - உலகக் கூரையின் மீது திக்... திக்...

By குமரன்

கடல், சதுப்புநிலப் பகுதிகள், ஏரிகள், குளங்கள், ஆறுகளில் பேட்லிங் செய்த பிறகு ஒரு வருட காலமாக உலகின் மிக உயரமான இடத்தில் பேட்லிங் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். இமயமலையின் மடியில் பனிப்பாறைகளில் இயற்கையாகத் தோன்றிய ஏரிகள்-நீர்நிலைகளில் பேட்லிங் செய்ய வேண்டும் என்ற என் விருப்பம் நிறைவேறாமலேயே இருந்தது.

ஒரு வருட காலமாக அது தொடர்பான ஆய்வுகளில் என்னையே தொலைத்த நாட்கள் ஏராளம். அந்த ஆய்வின் முடிவில் ஏழு அல்லது எட்டு உயரமான நீர்நிலைகளின் பட்டியலை முதலில் தேர்ந்தெடுத்தேன். 2013-ல் கடல் மட்டத்திலிருந்து 16,000 அடி உயரத்தில் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள சூரஜ் என்ற ஏரியில் ஒரு பிரிட்டன் பெண்ணும் இந்திய இளைஞனும் இணைந்து பேட்லிங் செய்திருந்தார்கள். அது உலகில் அதிகபட்ச உயரத்தில் உள்ள நீர்நிலையில் பேட்லிங் செய்த சாதனை. அந்தச் சாதனை 2016 செப்டம்பர் 6-ம் தேதி வரைதான் நீடித்தது. ஏனென்றால், அவர்களுடைய சாதனையை அந்த நாளில் நான் முறியடித்திருந்தேன்.

மாறிய பயணத் திட்டம்

இது சார்ந்த எனது பயணம் மற்ற பயணங்களைவிட நெடிய பயணமாக இருக்கும் என்று தோன்றியது. நான் தேர்ந்தெடுத்த ஏரிகளின் விவரங்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். அதில் 80 சதவீதம் இந்திய-சீன எல்லையிலும், சில திபெத்திலும், மற்றவை புனிதமானவையாகவும் கருதப்பட்டன. இந்த அம்சங்களால் அந்த ஏரிகளில் பேட்லிங் செய்வதற்கான அனுமதியைப் பெறுவதிலும் சிக்கல் ஏற்படும். இது என் பயணத் திட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் சென்னையில் என்னிடம் பேட்லிங் பயிற்சி பெற்ற சில நண்பர்கள் லே, லடாக் பகுதிகளுக்கு வருமாறு அழைத்தார்கள். நானும் சம்மதித்து, அதற்கான பயணத்தைத் திட்டமிட்டோம். அந்தப் பயண நாளில், எங்களுடைய பயணத் திட்டத்தில் தவிர்க்க முடியாத மாற்றத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை வந்தது. எங்கள் பயணத் திட்டம் செப்டம்பர் 3-ம் தேதி டெல்லியிலிருந்து ஸ்ரீநகர் செல்வது. அங்கு ஒரு நாள் தங்கி, தால் ஏரியில் பேட்லிங் செய்வது. அங்கிருந்து கார் எடுத்து லே செல்வது என்பதுதான்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் திடீரென்று ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில் கார் பயணம் பாதுகாப்பானது அல்ல என்பதால், கடைசி நேரத்தில் அந்தப் பயணத்தை ரத்து செய்தோம். திட்டத்தை மாற்றி, டெல்லியிலிருந்து தரை வழியில் காரிலேயேலேயை அடைய முடிவு செய்தோம்.

கார்கிலைத் தவறவிட்டோம்

ஸ்ரீநகரில் இருந்து லேவுக்கு செல்லும் சாலைப் பயணம், மணாலி முதல் லேவரை செல்லும் பயணத்தைவிட எளிதாக இருந்திருக்கும். திராஸ், கார்கில் வழியே போயிருக்க வேண்டிய பயணம் அது. உலகிலேயே இரண்டாவது அதிகக் குளிர் மிகுந்த இடம். முக்கியமாக இந்தியாவின் மிகப் பெரிய ராணுவத் தளம் அமைந்துள்ள இடமும் அதுதான். ஆனால், வேறு வழியில்லாமல் டெல்லி முதல் மணாலிவரை 600 கி.மீ., மணாலி முதல் லேவரை சுமார் 450 கிலோ மீட்டர் காரிலேயே பயணிக்கும் நிலை ஏற்பட்டது.

உற்சாகமாக அந்தப் பயணத்தைத் தொடங்கினோம். டெல்லியிலிருந்து சண்டிகர்வரை சமவெளிப் பகுதி. சண்டிகரைக் கடந்த பிறகு சிவாலிக் மலைக்குன்றுகள் தொடங்கிவிடும். இவை துணை இமயமலைப் பிரிவில் வரக்கூடியவை. இந்த மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் முதல் 1000 மீட்டர் உயரமுள்ள மலைகள் காணப்படுகின்றன.

4000 மீட்டர் உயரத்தில்...

இந்தப் பயணத்தில் இமயமலைத் தொடரின் மூன்று பிரிவுகளிலும் பயணம் செய்ய இருக்கிறோம் என்ற ஆர்வம் கலந்த உற்சாகத்தால் மனம் துள்ளியது. சண்டிகரிலிருந்து மணாலி மலைப் பயணம் மிகவும் ரம்மியமானது. உடலுக்கு இதமான தட்பவெப்பம் நிலவியது. இயற்கையின் கொடையான அடர்ந்த காட்டுப்பகுதி, மனிதர்களினுடைய உழைப்பின் பரிசாக மாடித்தோட்டங்கள், விவசாய நிலப்பகுதிகள் உள்ளிட்டவற்றையும் பார்க்க முடிந்தது.

குலு நகரத்தைக் கடந்து இரவு 12 மணிக்கு மணாலியை அடைந்தோம். அடுத்த நாள் காலையும் எங்கள் பயணம் ஜிஸ்பாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. முதல் 28 கி.மீயைக் கடந்ததும் சோலிங் பள்ளத்தாக்கு, அடுத்துப் பனிமலைத் தொடர் ஆரம்பித்தது. அங்கே கொண்டையூசி வளைவுகள் அதிகம். அடுத்து ‘ரோட்டங்’ என்ற பகுதியைக் கடந்து நாங்கள் போக வேண்டும். அதற்காகக் கிட்டத்தட்ட 4,000 மீட்டர் உயரத்தில் பயணம் தொடர்ந்தது.

அச்சம் தந்த பிரச்சினைகள்

இந்த மலைத் தொடருக்கு அடுத்தபடியாகக் கீழடுக்கில் பீர் பஞ்சால் மலைத்தொடர் உள்ளது. நாங்கள் சென்றிருந்த நேரம் தட்பவெப்ப நிலை தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கக்கூடிய காலகட்டம். கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டருக்கு மேலே போனால் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜன் குறைந்துவிடும். ‘ஆல்டிடியூட் மவுன்டெய்ன் சிக்னெஸ்’ (ஏ.எம்.சி.) என்று இதற்குப் பெயர். இதைச் சமாளிப்பது மிகப் பெரிய சவாலாகிவிடும். தாங்க முடியாத தலைவலி, மூச்சு திணறல், வாந்தி, கைகால் வீக்கம், வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம். உடனே அதற்கான மருத்துவச் சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால் நுரையீரலில் தண்ணீர் சேர்ந்தோ அல்லது மூளை வீக்கம் அடைந்தோ இறந்துவிடும் ஆபத்து இருக்கிறது.

அதேபோல , உயரத்தில் ஏறுவதால் Hape and Hace என்ற பிரச்சினையும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். மலை உச்சிகளில் ஏறும்போது மெதுவாக ஏற வேண்டும். ஓய்வெடுத்து ஓய்வெடுத்து அடுத்த நிலையைத் தொட வேண்டும்.



கடந்த வாரம் காசி எனப்படும் வாராணசியில் இருந்து பேட்லிங்கைத் தொடர்ந்தோம். இடையில் இரண்டு நாள் ஓய்வில் சென்னை வந்துவிட்டு, திரும்பவும் காசிக்கு விமானத்தில் புறப்பட்டேன். ஆனால், பனிமூட்டப் பிரச்சினை காரணமாக ஹைதராபாத்துக்குப் பிறகு விமானம் மூலம் காசியைத் தொட வாய்ப்பில்லாமல் இருந்தது. இதனால் சென்னையில் இருந்து அகமதாபாத் - லக்னோ சென்று, அங்கிருந்து டாக்சி வழியாகவே காசியை அடையத் திட்டமிட்டேன். ஆனால், பனிமூட்டம் காரணமாகச் சாலைப் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. லக்னோ - காசி இடையிலான 300 கி.மீ. தொலைவில், கடைசி 30 கி.மீ. கடுமையான போக்குவரத்து நெரிசல். இதனால் சைக்கிளிலேயே 30 கி.மீ. தொலைவைக் கடந்தேன். பேட்லிங் சாகசப் பயணத்தைத் தொடர்ந்தாக வேண்டுமே!

காசி கங்கையாற்றிலும் பனி பெய்துகொண்டுதான் இருந்தது, எதிரில் உள்ள ஆளே தெரியாத அளவுக்கு. அதிகபட்சமாக 10 மீட்டருக்கு மேல் எதுவுமே தெரியாது. காலை 11 மணிக்குப் பிறகே பனிமூட்டம் விலக ஆரம்பிக்கும். மதியம் 3.30-க்குப் பிறகு மீண்டும் பனிமூட்டம் சூழ்ந்துகொள்ளும். காசி ஆறு 3, 4 பிரிவாகப் பிரிந்து மீண்டும் கூடும். இடையில் 2 கி.மீ. அளவுக்குக்கூட ஆறு அகலமாக இருக்கும். பனிமூட்டம் காரணமாக ஒரு கரையில் சிலரும், மற்றொரு கரையில் சிலருமாக அடிக்கடி பிரிந்து போய் விடுகிறோம். வயர்லெஸ் தொடர்பு மூலமே ஒவ்வொருவரும் எங்கிருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

முன்பு வேகமாக வீசிய காற்று சவாலாக இருந்தது. இப்போது காற்று இல்லை. அந்த இடத்தைப் பனிமூட்டம் பிடித்துக்கொண்டிருக்கிறது. நகர்ப் பகுதிகளில் இந்தப் பனிமூட்டத்துடன் காற்று மாசு புகையும் சேர்ந்துகொள்வதால், பிரச்சினைகள் கூடுதலாக அதிகரிக்கின்றன. நாள் முழுக்கச் சூரியனையே பார்க்க முடிவதில்லை. ஆற்றோட்டமும் வேகமாக இருப்பதால் பேட்லிங் பலகையை இழுத்துச் சென்றுவிடுகிறது.

விரைவில் உத்தரப்பிரதேச மாநிலத்தைக் கடக்க உள்ளோம். உத்தரப்பிரதேச மாநிலம் பாதுகாப்பாக இருக்காது என்ற மனச்சித்திரமே பொதுவாக இருக்கிறது. ஆனால், இங்குள்ள கிராம மக்கள் அன்பாக இருக்கிறார்கள். நாங்கள் பேட்லிங் செய்வதை ஆர்வமாக வந்து வேடிக்கை பார்க்கிறார்கள். பால், தண்ணீர் போன்றவற்றைத் தந்து உதவுகிறார்கள். இந்த மாநிலத்தில் இதுவரை எந்தப் பெரிய பிரச்சினையையும் நாங்கள் எதிர்கொள்ளவில்லை. விரைவில் பிஹாரை அடையப் போகிறோம்.

ஆளை மறைக்கும் பனிமூட்டம்

(அடுத்த வாரம்: 16,000 அடி உயரத்தில்...)
தொடர்புக்கு: wellsitekumaran@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

15 hours ago

இணைப்பிதழ்கள்

17 hours ago

இணைப்பிதழ்கள்

17 hours ago

இணைப்பிதழ்கள்

22 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்