ஒரு கதை எழுதுவதற்காக இயக்குர் பத்மராஜனின், ‘நமுக்கு பார்க்கான் முந்திரித்தோப்புகள்’ என்ற மலையாளப் படத்தை டி.வி.டி.யில் பார்த்தேன். இப்படத்தின் கதாநாயகன் சாலமன் (மோகன்லால்), தனது பக்கத்து வீட்டுப் பெண்ணான ஷோஃபியாவிடம் (சாதனா) தனிப் பிரியத்துடன் பழகிக்கொண்டிருப்பான்.
ஒரு நாள் ஷோஃபியாவிடம் சாலமன், “ஷோஃபியா முந்திரித் தோட்டங்களுக்குப் போனதுண்டோ?” என்று கேட்பான்.
“இல்லை. பழைய சாலமன் ராஜாவோட முந்திரித் தோட்டங்களப் பத்தி பைபிள்ல வாசிச்சிருக்கேன்!” என்பாள் ஷோஃபியா.
அப்போது சாலமன், ஷோஃபியாவை நேசத்துடன் பார்த்தபடி மலையாளத்தில், “சாலமனின் ஸாங் ஆஃப் ஸாங்ஸில் பறையுன்னது போலே, நமக்கு அதிகாலத்து எழுந்நேட்டு, முந்திரித் தோட்டங்களில் போய் முந்திரி வள்ளி தளிர்த்து பூவிடருகயும், மாதளநாரகம் பூக்குகயும் செய்தோ என்னு நோக்காம்” என்று சொல்லிவிட்டு, ‘இதுக்கு அடுத்த வரி என்னன்னு பைபிள்ல பாரு…’ என்பார்.
ஷோஃபியாவும் பைபிளில் தேடிப் பார்க்க, அதில் சாலமன் சொன்ன மேற்கூறிய வசனத்துக்குப் பிறகு, “அவிடெ வச்சு ஞான் நினக்கு என்ட பிரேமம் தரும்” என்பதை ஷோஃபியா வாசித்தவுடன், ஷோஃபியாவை விட அதிகமாக எனக்குச் சிலிர்த்துப்போனது. சமீபத்தில் நான் பார்த்த மிகவும் கவித்துவமாக ‘காதலைத் தெரிவிக்கும்' காட்சி இதுதான்.
என் கதையின் ஆரம்பத்திலேயே இந்த வசனத்தைக் குறிப்பிடலாம் என்று முடிவெடுத்தேன். எனது கல்லூரி நாட்களிலிருந்து, வெளியில் சொல்ல முடியாத, சொல்லக்கூடிய ஏராளமான மலையாளப் படங்களைப் பார்த்துவந்திருப்பதாலும், மேற்கூறிய வசனத்தில் பல தமிழ்ச் சொற்கள் இருந்ததாலும் பின்வருமாறு உத்தேசமாக மொழிபெயர்த்தேன். நாம் அதிகாலையில் எழுந்து, முந்திரித் தோட்டங்களுக்குப் போய் முந்திரிவள்ளி தளிர்த்து மலர்வதையும், மாதுளம் செடிகள் பூத்துவிட்டதா என்றும் பார்ப்போம். அங்கே வைத்து நான் உனக்கு எனது காதலைத் தருவேன்.
எனக்கு முந்திரிவள்ளி என்றால் என்னவென்று தெரியவில்லை. எனவே என் மலையாளி நண்பனான ராமச்சந்திரனுக்கு ஃபோனடிக்க, அவன், “நான் சபரிமலைல இருக்கேன். என்ன விஷயம்?” என்றான்.
“சரி… நான் அப்புறம் பேசுறேன்!”
“பரவால்ல. சாமி பாத்துட்டேன். சொல்லு...”
நான் எனது மொழிபெயர்ப்பைச் சொல்லி, “ஓகேவா?” என்றேன். அதற்கு அவன், “முந்திரிவள்ளின்னா முந்திரிக் கொடின்னு அர்த்தம். மத்ததெல்லாம் ஓகே” என்று முடித்துக்கொண்டான். இருந்தாலும் இன்னொரு மலையாளியிடம் உறுதி செய்துகொள்ள நினைத்து, என் வீட்டருகில் பேக்கரி வைத்திருக்கும் உன்னியைச் சந்தித்தேன். உன்னிக்கு நான் ‘எப்போதாவது எழுத்தாளன்’ என்று தெரியும். எனவே மரியாதையுடன் நான் சொன்னதைக் கேட்ட உன்னி, “எல்லாம் சரிதான். ஆனா மாதளநாரகம்தான் கொஞ்சம் குழப்பமா இருக்கு” என்று எதிரிலிருந்த டீக்கடைச் சேட்டனிடம் அழைத்துச் சென்றார்.
அவரிடம் நான் என் மொழிபெயர்ப்பைக் கூற, அவர் பதற்றத்துடன், “சாரே… மலையாளத்துல முந்திரித் தோட்டம்ன்னா திராட்சைத் தோட்டம்” என்று கூற, எனக்குக் கை காலெல்லாம் ஆடிவிட்டது. எனது வாழ்வில் நான் சந்தித்த டாப் டென் அதிர்ச்சிகளுள் ஒன்று அது. அப்படியே பத்திரிகைக்கு அனுப்பியிருந்தால் என்னாகியிருக்கும்? இருந்தாலும் சந்தேகத்துடன், “அதெப்படி முந்திரின்னா திராட்சை வரும். அநியாயமா இருக்கே…” என்றேன். அதற்கு அவர், “சார்… மலையாளத்துல முந்திரின்னா திராட்சைதான். முந்திரிப் பருப்புக்கு அண்டி பருப்புன்னு சொல்வாங்க. அப்புறம் மாதளநாரகம்ன்னா, இங்க கிடாரங்காய்ன்னு சொல்வாங்கள்ல. அதுன்னு நினைக்கிறேன்” என்று அடுத்த குண்டைத் தூக்கிப் போட எனக்கு குப்பென்று வியர்த்துவிட்டது. “இதென்னடா வம்பா போச்சு? அங்கயும் இங்கயும் கேக்கறதுக்கு. பதிலா, நேரா பைபிள்லயே பாத்துட்டா என்ன?” என்று எனக்கு அப்போதுதான் தாமதமாகத் தோன்றியது.
உடனே எனது நண்பன் கிறிஸ்டோஃபருக்கு ஃபோன் செய்து, “உனக்கு பைபிள்ல இந்த சாலமனோட ஸாங் ஆப் ஸாங்ஸ் தெரியுமா?” என்றேன். அவன், ‘நியூக்ளியர் சயன்ஸ்’ குறித்து நான் போர்த்துக்கீசிய மொழியில் பேசுவது போல் எந்த ரியாக் ஷனும் இல்லாமல் கேட்டுவிட்டு, “தெரியலையே. இரு, ஃபோன என் மிஸஸ்கிட்ட தரேன்” என்று அவன் மனைவியிடம் கொடுத்தான். அவர் விஷயத்தைக் கேட்டுவிட்டு, “ஆமாங்க. சாலமனோட உன்னதப் பாட்டுன்னு சொல்வாங்க. பழைய ஏற்பாடுல இருக்கும்” என்றார்.
“உங்கள்ட்ட பழைய ஏற்பாடு இருக்கா?”
“இல்ல… புதிய ஏற்பாடுதான் இருக்கு. உடனே தெரிஞ்சுக்கணும்னா ஒண்ணு பண்ணுங்க. சாந்தோம் சர்ச்ல லிட்டர்ஜிகல் சென்டர்ன்னு ஒண்ணு இருக்கு. அங்க புத்தகக் கடை ஒண்ணு இருக்கும். அங்க சிஸ்டர்ஸ், ஃபாதர்ஸ் எல்லாம் இருப்பாங்க. அவங்கள கேட்டா சொல்லிடுவாங்க” என்று கூற பரபரப்புடன் சாந்தோம் சர்ச்சுக்குப் பறந்தேன்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால், அப்போதுதான் பூஜை முடிந்திருந்தது. அந்தப் புத்தகக் கடை மூடியிருந்தது. யாராவது ஃபாதர் அகப்படுகிறார்களா என்று சுற்றிலும் தேடினேன். சர்ச்சுக்குப் பின்னாலிருந்த ஒரு ஃபாதரைப் பார்த்துவிட்டு ஓடினேன்.
அவரிடம், ‘நான் ஒரு எழுத்தாளன்’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டு விஷயத்தைச் சொன்னேன். ஃபாதர், “ஆமாம்… சாலமன் பாட்டுல காதலப் பத்தி நிறைய இருக்கும்” என்றவர், அந்தப் புத்தகத்தை எடுத்துக் காட்டினார். அதில் சாலமனின் அந்த உன்னதப் பாட்டு இப்படியாக இருந்தது:
அதிகாலையிலே திராட்சத் தோட்டங்களுக்குப் போவோம். திராட்சக் கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதளஞ் செடிகள் பூப்பூத்ததோ என்றும் பார்ப்போம். அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன். (சாலொமோனின் உன்னதப் பாட்டு: 7:12)
(தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: grsnath71@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago