வேலையற்றவனின் டைரி 08 - கடலோர நினைவுகள்!

By ஜி.ஆர்.சுரேந்திரநாத்

டிசம்பர் 26

சென்னையில் நான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு, பட்டினப்பாக்கம் கடற்கரையிலிருந்து மிக அருகில் உள்ளது. கடந்த 16 ஆண்டுகளாக இங்குதான் வசித்துவருகிறேன்.

இந்த பட்டினப்பாக்கம் கடற்கரையோடு, எனக்கு ஒரு உணர்வுபூர்வமான பந்தம் இருக்கிறது. நானும் ராமச்சந்திரனும் அசோக்கும் சிவாவும் கார்த்தியும் எத்தனையோ இரவுகள் பேசிச் சிரித்து, சிரித்துப் பேசி, என்றும் தீரா நட்பை வளர்த்த கடற்கரை இது. கடந்த 2003-ம் ஆண்டு, எதிர்பாராத விதமாக நான் வேலையை இழந்து பரிதவித்தபோது, எனது நண்பர்கள் ஒரே நேரத்தில் குழுமி, இந்தக் கடற்கரையில் வைத்துத்தான் எனக்கு ஆறுதல் கூறினார்கள்.

சமீபத்தில்கூட இதே கடற்கரையில், தனது வாழ்நாளில் இது வரையிலும் பத்துத் திரைப்படங்கள்கூடப் பார்த்திராத நண்பன் மனோகரிடம், ‘சலங்கை ஒலி’ ஜெயப்ரதாவின் அழகைப் பற்றி அரை மணி நேரம் நான் சொற்பொழிவாற்றினேன். அவன், “அப்படியா? ஜெயப்ரதான்னா யாரு?” என்று கேட்டு, நான் வாழ்க்கையையே வெறுத்துப்போன கடற்கரை இது!

எனக்கு மட்டுமல்ல. இப்பகுதியில் வசிக்கும் பலருக்கும் இந்தக் கடற்கரை சார்ந்து ஒரு வாழ்க்கை உள்ளது. தங்கள் ஒரு வயதுக் குழந்தை தத்தித் தத்தி நடந்து, கடல் மணலில் விழுவதைப் பார்த்துப் பூரிக்கும் பெற்றோர்களின் முகத்தைவிட ஒரு சிறந்த ஓவியம் இருந்துவிட முடியுமா என்ன?

நடைப்பயிற்சி செல்லும் முதிர்ந்த தம்பதிகளிடையே நிலவும் மவுனத்தின் இடைவெளிகளில் எத்தனை எத்தனை கதைகள் இருக்கும்? படகு மறைவு காதலிகளின் ‘சீ…’ என்ற சிணுங்கலில் இசையைக் கோத்துவிட்டது யார்? இப்படி எவ்வளவோ பேரின் பேச்சுக்கள்… சிரிப்புகள்… கண்ணீர்த் துளிகள்… கை குலுக்கல்கள்… அணைப்புகள்… துரோகங்கள்... என்று மகத்தான மனித வாழ்க்கை இந்தக் கடற்கரையில் உள்ளது.

இந்தக் கடற்கரைதான், கடந்த 2004, டிசம்பர் 26-ம் தேதி, தனது அலைகளால் எங்கள் முதுகில் அறைந்து எங்களைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது.

அது மறக்க முடியாத ஒரு ஞாயிற்றுக்கிழமை. அரையாண்டு விடுமுறை என்பதால் எனது மனைவியும், மகனும் ஊருக்குச் சென்றிருந்தார்கள். காலை ஏறத்தாழ ஒன்பது மணிக்கு, திடீரென்று ஏராளமான மக்கள் கூக்குரலிடும் சத்தம் கேட்டது. அன்று காலை ஏற்கெனவே நிலநடுக்கம் வந்திருந்ததால், மீண்டும் நிலநடுக்கம் வந்து, ஏதோ கட்டிடம் இடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டேன். அதனால் வீட்டில் இருக்க வேண்டாம் என்று கதவைப் பூட்டிக்கொண்டு வேக, வேகமாகக் கீழே இறங்கினேன்.

அப்போது அருகிலிருந்த குப்பத்து ஜனங்கள் கூட்டமாக அலறியபடி ஓடி வருவதைப் பார்த்தேன். அவர்களுடன் ஆவேசமாகத் தண்ணீரும் வந்துகொண்டிருப்பதைப் பார்த்தபோது ஒன்றும் புரியவில்லை. அலை கொஞ்சம் ஓவராகப் பொங்கிவிட்டது போல என்று திரும்பி, எனது டி.வி.எஸ். சேம்ப்பை ஸ்டார்ட் செய்தேன். அப்போது ஒரு தண்ணீர்த் திரள் என் முதுகில் சுள்ளென்று அதிவேகத்தில் அடிக்க… நான் ஒரு பக்கம், வண்டி ஒரு பக்கம் அடித்துச் செல்லப்பட்டோம். மக்களும் ஆளுக்கொரு திசையில் அடித்துச் செல்லப்பட்டார்கள்.

நான் சமாளித்துக்கொண்டு எழுந்து, இடுப்பளவு நீரில் நடக்க ஆரம்பித்தேன். கிடுகிடுவென்று நீர்மட்டம் அதிகரிக்க, என்னால் நடக்க முடியாமல் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டேன். சில வினாடிகள் நீரில் மூழ்கி, உப்புத் தண்ணீரையும், குடிசைக் கூரைகளின் அழுக்கேறிய குச்சிகளையும் விழுங்கியபோது எல்லாம் முடிந்துவிட்டதாகத்தான் நினைத்தேன். அரியலூர் முதல் சென்னை வரையிலான எனது வாழ்க்கை மின்னல் போல் மனதில் ஓடி மறைந்தது. அப்போது சட்டென்று நீரின் வேகமும் அளவும் குறைந்தது. மேலும் சிறிது தூரத்திற்கு அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் அருகிலிருந்த கார்ப்பரேஷன் பள்ளி கேட்டைப் பிடித்து எழுந்து, இடது முழங்காலில் ஒரு பெரும் காயத்துடன் தப்பித்தேன்.

அங்கிருந்து கே.கே.நகர் சென்று, ராமச்சந்திரனின் வீட்டில் தங்கியிருந்தேன். தகவல் தெரிந்து அன்று மாலை அங்கு வந்த கார்த்தி, “மச்சி… அங்கெல்லாம் ஒரு ஆளும் கிடையாது. கரண்ட்டும் இல்ல. வீட்டுல காஸ்ட்லி ஐட்டம்ல்லாம் இருந்தா எடுத்துட்டு வந்துடலாம் வா” என்று என்னை அழைத்துச் சென்றான்.

பட்டினப்பாக்கம் பிரதான சாலையில், யாரையும் செல்லவிடாமல் காவல் துறையினர் தடுத்திருந்தார்கள். நாங்கள் அங்கு குடியிருப்பவர்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றோம். அந்த மாலையில் நான் அங்கு பார்த்த காட்சிகள், ஒரு துயரக் காவியத்தின் இறுதிப் பக்கங்களைப் படிப்பதுபோல இருந்தன. மெல்ல கவிந்துகொண்டிருந்த இருள், கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் ஒருவரும் இல்லை. என் வீட்டருகிலிருக்கும் மைதானத்திலும், சாலையிலும் திட்டுத் திட்டாகத் தேங்கியிருந்த நீர் நடுவே நாங்கள் மட்டும் சென்றோம்.

திரும்பிய‌ திசையெங்கும் குவியல் குவியலாகப் பொருட்கள். கண்ணாடிகளில் எத்தனையோ முறை பார்க்கப்பட்ட ஆடைகள், எத்தனையோ பேரை எங்கெங்கோ நடத்திச் சென்ற செருப்புகள். நேற்றிரவு குழந்தையின் அணைப்புடன் தூங்கிய பொம்மைகள், யாரோ ஒருவனின் அந்தரங்கத்தைக் கூறும் டைரி, பாதி வாசிப்பில் அடித்துக்கொண்டு வந்த புத்தகங்கள், சின்னாபின்னமாகியிருந்த பைக்குகள், கார்கள்.

என் வீட்டுக்குச் சென்று நகைகளையும், பணத்தையும் எடுத்துக்கொண்டோம். கிளம்புவதற்கு முன்பு நான் மொட்டை மாடிக்குச் சென்று கடலைப் பார்த்தேன். அன்று காலை தனது பெரும் பசிக்கு ஆயிரமாயிரம் உயிர்களை விழுங்கியிருந்த கடல் அலைகள், முக்கால் இருட்டில் முனகிக்கொண்டிருந்தன. அப்போது அந்தத் துயர இரவின் மௌனத்தைக் கிழித்துக்கொண்டு, ஒரு பெண்மணியின் அழுகுரல், இருட்டில் அமானுஷ்யம்போல் சத்தமாகக் கேட்க, எனக்குச் சிலிர்த்துப்போனது. சுற்றிலும் பார்த்தேன்.

நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கால்பந்தும், கிரிக்கெட்டும் விளையாடிய மைதானத்தில், ஒரு பெண்மணி அவிழ்ந்து கிடந்த கூந்தலுடன், சத்தமாக அழுதபடி எதையோ தேடிக்கொண்டிருந்தார். அந்தப் பெண்மணி தனது உடைமைகளை இழந்தவரா? இல்லை, உறவுகளை இழந்தவரா? தெரியவில்லை. எல்லாக் கடவுள்களும் தங்கள் கண்களை மூடிக்கொண்ட அந்த நாளில், எல்லாக் கடவுள்களும் பிரார்த்தனைகளுக்குச் செவிசாய்க்க மறுத்த அந்த ஞாயிற்றுக்கிழமையில், பிரம்மாண்டமான இயற்கைக்கு முன்பு, மனித குலம் முற்றிலும் தோற்றுப்போனதின் சாட்சியாக அந்த அழுகுரல் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

அந்த சுனாமிக்குப் பிறகு ஒவ்வொரு முறையும் வானிலை ஆய்வு மையத்திலிருந்து அவ்வப்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கும்போது, காவல் துறையினரின் அறிவுறுத்தல்படி, அத்தியாவசியப் பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறுவோம். ஆனால் எது அத்தியாவசியப் பொருள் என்பதில் எனக்கும், என் மனைவிக்கும் அடிக்கடி பிரச்சினை உண்டாகும். ஒரு முறை என் மனைவி அத்தியாவசியப் பொருட்களில் ஒரு பட்டுப் புடவையையும் சேர்த்தார். நான் பதிலுக்கு, ‘வண்ணதாசன் கதைகள்’ புத்தகத்தை எடுத்து அத்தியாவசியப் பட்டியலில் சேர்த்தேன். பதிலுக்கு அவர் இன்னொரு பட்டுப் புடவையை எடுத்தார். கடுப்பான நான் டால்ஸ்டாயின் ‘வார் அண்ட் பீஸ்’ நாவலின் தமிழாக்கத்தின் மூன்று வால்யூம்களையும் களத்தில் இறக்க, மிரண்டு போன என் மனைவி பட்டுப் புடவைகளை உள்ளே வைத்துவிட்டார்.

இவ்வாறு சுனாமியில் பாதிக்கப்பட்ட பிறகும், நான் அதே குடியிருப்பில்தான் வசிக்கிறேன். அதன் பிறகு நான்கைந்து முறை சுனாமி எச்சரிக்கை விட்டிருக்கிறார்கள். டிவியில் இந்த எச்சரிக்கை செய்தி வந்தவுடன், வரிசையாக வரும் ஃபோன் கால்களிலிருந்து நம் மீது அக்கறை கொண்டுள்ளவர்களை அறிந்துகொள்ளலாம்.

ஒரு முறை என் மனைவியிடம், “நமக்கு ஃபோன் பண்ணவங்க பேர எழுதி, ஒரு குலுக்கல் நடத்தி பிரைஸ் கொடுத்துடணும். ஆமாம்… இவ்ளோ பேரு ஃபோன் பண்ணாங்க. உங்க வீட்டுலருந்து ஒரு ஃபோனையும் காணோம்” என்று விளையாட்டுக்குச் சொன்னேன். அவ்வளவுதான். அது அவர்கள் வீட்டுக்குச் செல்ல, என் மாமனார் மறுநாள் எனக்கு ஃபோன் செய்து, “மாப்ள தப்பா நினைச்சுக்காதீங்க. நாங்க வீட்டுல இல்ல. எங்களுக்கு சேதி தெரியாது” என்று என்னைச் சமாதானப்படுத்தினார். நான், “அய்யோ… நான் விளையாட்டுக்குச் சொன்னன்ங்க” என்ற பிறகும் விடாமல் நீண்டதொரு விளக்கம் அளித்துவிட்டுத்தான் அமைதியானார்.

அதன் பிறகு அவர் டிவி செய்திகளைக் கூர்ந்து கவனித்து, உலகில் எந்த மூலையில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டாலும், உடனே எங்களுக்குச் சொல்லிவிட்டுதான் மறு வேலை பார்ப்பார்.

அடுத்த முறை சுனாமி எச்சரிக்கை விடுக்கும்போது, நீங்களும் தகவல் தெரிவித்தால், குலுக்கல் பட்டியலில் உங்கள் பெயரும் சேர்க்கப்படும்.

(தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: grsnath71@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்