23.12.2016
மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்கில், உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு, தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ரூபாய் இரண்டு கோடிக்கான ஊக்கத்தொகை வழங்கிய காட்சியை டிவியில் பார்த்தபோது, என் மனதில் ஒரு காட்சி ஓடியது. .
கடந்த செப்டம்பர் மாதம், மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றவுடன், அவர் படித்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஒரு டிவி நேர்காணலில் சொன்ன விஷயம் நினைவுக்கு வந்தது.
மாரியப்பன் பள்ளியில் படிக்கும்போது, அனைவரும் உயரம் தாண்டுவதைப் பார்த்துக்கொண்டிருப்பார். ஆனால், அவர்களோடு சேர்ந்து அதில் கலந்துகொள்ள மாட்டார். தன் காலில் குறைபாட்டுடன் (மாரியப்பன், ஐந்து வயது இருக்கும்போது, ஒரு பேருந்து விபத்தில் வலது கால் கட்டை விரல் தவிர மற்ற கால் பகுதிகள் சிதைந்து மாற்றுத் திறனாளியானவர்) ஹைஜம்ப் செய்தால், மற்றவர்கள் கேலி செய்வார்கள் என்று தயங்குவார். எனவே, பள்ளி முடிந்து அனைவரும் சென்றவுடன், அவர் மட்டும் தனியாக உயரம் தாண்டி பார்ப்பாராம்.
இதை அந்த உடற்கல்வி ஆசிரியர் ஒரு நாள் பார்த்திருக்கிறார். மாரியப்பன் சாதாரண மாணவர்களைக் காட்டிலும், நன்றாகவே உயரம் தாண்டியிருக்கிறார். அதைப் பார்த்துவிட்டுதான் அவர் மாரியப்பனுக்குப் பயிற்சியளித்து, மாரியப்பன் கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து இன்று பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார்.
இதைக் கேட்டபோது, என் மனதிற்குள் அந்தக் காட்சி ஓட ஆரம்பித்தது. தமிழகத்தின் மூலையில், ஒரு கிராமத்துப் பள்ளி. ஆட்கள் யாருமில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் மைதானம். அந்தி மயங்கும் மெல்லிருட்டில், லேசாகச் சலசலக்கும் மரங்களை மட்டும் சாட்சியாக வைத்துக்கொண்டு, ஒரு சிறுவன் தன்னந்தனியாக மீண்டும் மீண்டும் ஓடி வந்து உயரம் தாண்டிக்கொண்டே இருக்கிறான். அந்தக் காட்சி, நான் நேரில் பார்த்தது போல், ஒரு அழியாச் சித்திரமாக இன்றும் என் மனதில் ஓடிக்கொண்டேயிருக்கிறது. அன்று அந்த அரையிருட்டில் ஓடியபோது மாரியப்பன் பாராலிம்பிக்கில் தங்கம் வெல்வோம் என்று நினைத்திருப்பாரா? நிச்சயமாக இருக்காது.
அந்த விளையாட்டு மீதிருக்கும் ஆர்வத்தில்தான் இறங்கியிருப்பார். இவ்வாறு மாரியப்பனின் பயணம், ஒரு வெளிச்சமில்லாத, ஆட்களற்ற மைதானத்தில் தொடங்கி, இன்று உலகம் முழுவதும் ஒருசேரப் பார்த்த பாராலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வரை வந்திருக்கிறது. இந்த இடத்தை வந்தடைய மாரியப்பன் கடந்து வந்த பாதை, மிகுந்த வலி நிரம்பியது.
இதில் நம் அனைவருக்கும், குறிப்பாக முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்குச் சில பாடங்கள் உள்ளன. மாரியப்பன் வாழ்ந்த சூழல், அவருக்கு மிக மிக எதிராக இருந்திருக்கிறது. வீட்டில் வறுமை. மாரியப்பனின் அம்மா காய்கறி வியாபாரம் செய்துதான் நான்கு பேர் கொண்ட குடும்பத்தைக் காப்பாற்றிவந்திருக்கிறார். அடுத்து, கால் குறைபாடு, அதற்கான சிகிச்சை… பிறகு, பயிற்சிகளுக்கு வசதியில்லாத கிராமப்புற வாழ்க்கை. இந்தப் பாதகமான சூழ்நிலையிலிருந்துதான், மாரியப்பன் இதைச் சாதித்திருக்கிறார். நமது இலக்கில் நாம் உறுதியாக இருந்தால், எத்தகைய எதிரான சூழ்நிலைகளையும் நம்மால் கடந்து வர முடியும் என்பதற்கு, மாரியப்பன் ஒரு மகத்தான சாட்சி.
அடுத்ததாக, அவர் இந்த நிலைக்கு வர எடுத்துக்கொண்ட கால அளவு. மாரியப்பன் எடுத்தவுடனேயே நேரிடையாக பாராலிம்பிக்கில் தங்கம் வாங்கவில்லை. பள்ளிப் பருவத்தில் ஆரம்பித்து, ஏராளமான நிலைகளைப் படிப்படியாக கடந்து, பத்தாண்டுகளுக்கும் மேற்பட்ட அயராத முயற்சி மற்றும் உழைப்பிற்குப் பிறகு தனது 21-வது வயதில்தான் இந்த இடத்தை அடைந்திருக்கிறார். மாரியப்பன் மட்டுமல்ல; இந்த உலகில் சாதனை படைத்த யாருமே ஒரே நாளில் உச்சத்தைத் தொட்டதில்லை.
ஆனால், இன்றைய இளைஞர்கள் பலரும், முதல் படியைக் கடக்காமலே, எடுத்தவுடனேயே நேராகப் பத்தாவது படிக்குச் சென்று நிற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த கார்ப்பரேட் பொருளாதார விளம்பர யுகம், இளைஞர்களிடம், ஒரு உயர் நடுத்தர வர்க்க அல்லது உயர் வர்க்கத்தினரின் வாழ்க்கையைத்தான் வாழ வேண்டும் என்ற கனவை விதைத்திருக்கிறது. அதற்கு முந்தைய நிலைகளைக் கடந்து செல்லப் பலரும் விரும்புவதில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு இளைஞனுக்கு, என் நண்பன் பணிபுரியும் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சிபாரிசு செய்தேன். இன்டர்வியூவுக்குச் சென்ற அந்த இளைஞன், “எட்டாயிரம் ரூபாய்தான் சம்பளம். அதனால் அந்த வேலை வேண்டாம்” என்று வந்துவிட்டான். பிறகு ஏதோ வேலைக்குச் சென்றான், பிறகு அந்த வேலையை விட்டான். இன்று முப்பது வயதை நெருங்கும் நிலையிலும், அவன் உருப்படியாக செட்டிலாகாமல் இருக்கிறான்.
அந்த நிறுவனத்தில், அந்த ‘பேட்ச்’சில் வேலைக்குச் சேர்ந்தவர்கள், இன்று ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
நான் பிரம்மச்சாரியாக இருந்தபோது, எனது அறைத்தோழனாக இருந்த நாராயணன், 1250 ரூபாய் சம்பளத்துக்கு சென்னைக்கு வேலைக்கு வந்தான். பிஇ படித்தவன் (இருபது ஆண்டுகளுக்கு முந்தைய பிஇ). அப்போது ஒரு அரசு அலுவலக கிளார்க் சம்பளம்கூட மூவாயிரம் ரூபாய். அறை வாடகைக்கே அவன் 600 ரூபாய் எடுத்து வைக்க வேண்டும். அப்புறம் சாப்பாடு, இதர செலவுகள் என்று நீண்ட நாட்கள் சிரமத்துடன்தான் இருந்தான். இன்று அவன் டெல்லியில் லட்சக்கணக்கில் சம்பாதித்துக்கொண்டிருக்கிறான். அந்த 1250 ரூபாய் சம்பளத்திற்கு யோசித்துக்கொண்டு அவன் அந்த வேலையில் சேராமல் இருந்திருந்தால், இன்று இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது..
வேறு சிலர் வேலையில் சேர்ந்த பிறகு கஷ்டமாக இருக்கிறது என்று உடனே வேலையை விட்டுவிடுகிறார்கள். வேலையில் தாங்கக்கூடிய சுமை, தாங்க முடியாத சுமை என்று இரண்டு சுமைகள் உள்ளன. ஆனால், பலரும் தங்களால் தாங்கக்கூடிய சுமையைக்கூடச் சுமக்கத் தயாராக இல்லை என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அதேபோல் இன்றைய இளைஞர்கள் பலரும் ஒரே ஒரு சுடுசொல்லைக்கூடத் தாங்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்… இவர்கள் ஒரு மலையின் சிகரத்தை அடைய, பல கடினமான படிகளைக் கடந்தே ஆக வேண்டும் என்ற அடிப்படைப் பாடத்தை மறந்துவிடுகிறார்கள்.
ஒரு திரைப்பட இயக்குநர், உதவி இயக்குநர், பல ஆண்டு காலக் காத்திருப்பு என்று ஏறத்தாழத் தங்கள் இளமைக்காலத்தையே முற்றிலுமாகப் பலிகொடுத்துவிட்டுத்தான் இயக்குநராகிறார்கள். ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரர் மாவட்டம், மாநில அளவில் விளையாடி விட்டுத்தான் இந்திய அணியில் இடம் பிடிக்கிறார்.
இவ்வாறு நமது சாதனையாளர்கள் அனைவருமே, பல படிகளைக் கடந்து, பல அவமானங்கள், அலட்சியங்கள், பொருளாதார சிரமங்களுக்கிடையேதான், தங்கள் லட்சியத்தி லிருந்து விலகாமல், தங்கள் பயணத்தை தொடர்ந்திருக்கிறார்கள். எனவே, அன்று அரையிருட்டில், யாருமற்ற மைதானத்தில், வெற்று மணலில் ஓடுவதற்காக, மாரியப்பன் எடுத்து வைத்த முதல் அடியைப் போல், நாமும் நம்பிக்கையுடன் முதல் படியில், நமது முதல் அடியை எடுத்து வைப்போம். இந்தப் புத்தாண்டில் வெற்றியின் தேவதைகள் உங்களைப் பார்த்து அட்டகாசமாகப் புன்னகைக்க எனது வாழ்த்துகள்.
-
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: grsnath71@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago