வேலையற்றவனின் டைரி 07 - ஆகஸ்ட் 17 வதந்தி!

By ஜி.ஆர்.சுரேந்திரநாத்

டிசம்பர் 7, 2016.

கவிஞர் வைரமுத்து தனது வருடாந்திர உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றார். அவர் பரிசோதனைகளை முடித்துவிட்டு வெளியே வருவதற்குள், அவருடைய உடல்நிலை பற்றி வதந்தியைப் பரப்பிவிட்டார்கள்.

இதே போல‌ சமீபத்தில் நடிகர் கவுண்டமணி பற்றியும் வதந்திகள் பரவ அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இது போன்று தீயாய்ப் பரவும் வதந்திகள், இரண்டு வகையாக உள்ளன‌. ஒன்று, பிரபலங்கள் தொடர்பான வதந்திகள். அடுத்தது, மொத்த சமூகத்திற்கும் கெட்டது நடக்கும் என்று பரப்பப்படும் வதந்திகள்.

எனது பள்ளிக்காலம் முதல், இது போல் ஏராளமான வதந்திகளைப் பார்த்திருக்கிறேன். ஊரில் ஒரு நாள் பள்ளி விட்டு வரும்போது அந்தத் தகவலைச் சொன்னார்கள். ‘நள்ளிரவுகளில், வெள்ளைச் சேலை அணிந்திருக்கும் ஒரு பெண்மணி, ஐந்து பெண் குழந்தைகளுடன் வந்து, வீட்டுக் கதவைத் தட்டி, தண்ணீர் கேட்டு வாங்கிக் குடிக்கிறார். அவர் தண்ணீர்க் குடித்துவிட்டு திருப்பிக் கொடுக்கும் சொம்பு முழுவதும் ரத்தமாக இருக்கிறது. அதிர்ந்துபோய் நிமிர்ந்து பார்த்தால், அவர்கள் மாயமாக மறைந்திருப்பார்கள். வீட்டுக் கதவில் நாமம் வரைந்து வைத்தால், அந்தப் பேய் கதவைத் தட்டாது’ என்று கூற, எனக்கு வயிற்றைக் கலக்கிவிட்டது.

நல்லவேளையாக சொம்பில் ரத்தம் என்பதோடு விட்டார்கள். அந்தப் பெண் தண்ணீரைக் குடித்துவிட்டு, பாய்ந்து தண்ணீர் கொடுத்தவரின் குரல்வளையைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சிவிடும் என்று சொல்லியிருந்தால், அங்கேயே நான் மயக்கம் போட்டு விழுந்திருப்பேன்.

அன்றிரவு எங்கள் வீட்டுக் கதவில், சாக்பீஸில் சிறிதாக ஒரு நாமத்தைப் போட்டுவிட்டுப் படுத்தேன். இருந்தாலும், ‘இந்த சாக்பீஸ் நாமம் போதுமா? பேசாமல் ஒரு நாமக்கட்டி வாங்கி, நம் நெற்றியிலேயே ஒரு நாமத்தைப் போட்டுக்கொண்டு படுத்தால் இன்னும் ஸேஃபாக இருக்குமோ…’ என்று யோசித்துக்கொண்டே தூங்கிவிட்டேன்.

இந்த வதந்தி வேகமாகப் பரவ, பலரது வீட்டு வாசல்களிலும் நாமம் போடப்பட்டது. எப்போதும் நெற்றியில் திருநீறு பட்டையுடன் காணப்படும் தவிட்டுக் கடைக்காரர் வீட்டில்கூட, ‘பேயிடம் எதற்கு வம்பு?’ என்று கதவில் பெயின்ட்டிலேயே நாமம் போட்டு தங்கள் பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டனர். வீட்டிற்குத் தினந்தோறும் வரும் தயிர்க்காரம்மா தண்ணீர் கேட்டால்கூடத் தர அஞ்சிய மக்கள், பின்னர் யார் தண்ணீர் கேட்டாலும் சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்தார்கள்.

இந்த வதந்தி வேகமாகப் பரவ, பலரது வீட்டு வாசல்களிலும் நாமம் போடப்பட்டது. எப்போதும் நெற்றியில் திருநீறு பட்டையுடன் காணப்படும் தவிட்டுக் கடைக்காரர் வீட்டில்கூட, ‘பேயிடம் எதற்கு வம்பு?’ என்று கதவில் பெயின்ட்டிலேயே நாமம் போட்டு தங்கள் பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டனர். வீட்டிற்குத் தினந்தோறும் வரும் தயிர்க்காரம்மா தண்ணீர் கேட்டால்கூடத் தர அஞ்சிய மக்கள், பின்னர் யார் தண்ணீர் கேட்டாலும் சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்தார்கள்.

நான் ‘எதற்குப் பிரச்னை?’ என்று கொஞ்ச காலத்திற்குச் சொம்பில் தண்ணீர் குடிப்பதையே நிறுத்திவிட்டேன். பின்னர் காவல் துறை, அது வதந்தி என்று அறிக்கை விட்ட பிறகுதான் அந்தப் பீதி அடங்கியதாக ஞாபகம்.

எனக்குத் திருமணமாகி, சென்னையில் குடியேறிய புதிதில் 30 வீடுகள் கொண்ட ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தோம். அந்தக் குடியிருப்பில் ஒரு வீட்டில், பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் கொலை செய்யப்பட்டிருந்தார். அதன் பிறகு ஒரு குடும்பம் அங்கு குடியேறி, அமோகமாக வாழ்ந்து மூன்று ஆண் பிள்ளைகள் பெற்று, 27 ஆண்டுகள் அந்த வீட்டில் குடியிருந்துவிட்டுக் காலி செய்தனர்.

உடனே சிலர், இரவில் அந்த வீட்டிலிருந்து மல்லிகைப்பூ வாசனை வருவதாகவும், கொலுசுச் சத்தம் கேட்பதாகவும் கொளுத்திப் போட்டார்கள். இரவுகளில் அந்த வீட்டைக் கடக்கும்போது, என் மீது மிகவும் அன்பு வைத்திருக்கும் என் மனைவி, முதலில் என்னை முன்னால் போகவிட்டு, என்னைப் பேய் அடிக்குதா என்று பார்த்துவிட்டு, அதற்குப் பின்புதான் வருவார்.

திடீரென்று ஒரு நாள், ‘அந்த வீட்டு வாசலில், கண்ணாடி வளையல்கள் தினமும் உடைந்து கிடக்கின்றன’ என்று செய்தி பரவியது. நான், “வா… நிஜமான்னு பாத்துடுவோம்” என்று என் மனைவியை அழைத்துக்கொண்டு அந்த வீட்டுக்குச் சென்றேன். என் மனைவி என்றும் மாறாத அதே அன்புடன், என்னை முன்னால் விட்டுப் பின்னால் வந்தார்.

அந்த வீட்டு வாசலில் நான்கைந்து வளையல்கள் உடைந்து கிடந்ததைப் பார்த்தவுடன், எனக்கே உள்ளுக்குள் உதைப்பாகத்தான் இருந்தது. அப்போது ‘க்ளிங்… க்ளிங்…’ என்று வளையல் சத்தம் கேட்க, நான் பீதியாகி நெற்றி வியர்வையைத் துடைத்தபடி சுற்றிலும் பார்த்தேன்.

பிறகுதான் விஷயம் புரிந்தது. அந்த வீட்டினர் காலி செய்த பிறகு, மீண்டும் அந்த பெண் பேய் அந்த வீட்டுக்கு வந்தால், அவரைச் சாந்தப்படுத்துவதற்காக வீட்டு வாசலின் உச்சியில் கறுப்புக்கயிறு, மஞ்சள்துண்டு போன்றவற்றுடன் கண்ணாடி வளையல்களையும் யாரோ கட்டித் தொங்கவிட்டிருக்கிறார்கள். அந்த வளையல்கள்தான் காற்றில் மோதி உடைந்து கீழே விழுந்திருக்கின்றன’ என்று நான் சொன்ன பிறகுதான் அந்த வதந்தி அடங்கியது.

இவையெல்லாம் குறிப்பிட்ட ஏரியா வதந்திகள். பச்சை சேலை வதந்தி முதல் லேட்டஸ்ட் உப்பு வதந்தி வரை பலவும், ஏராளமான இடங்களில் பரவிய பெரும் வதந்திகளாகும். இதில் மிகவும் சுவாரஸ்யமானது, கடந்த 2014-ல் தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில், ஒரு பசு மாட்டிற்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும், பிறந்த சில மணி நேரங்களிலேயே பேசிய அந்தக் குழந்தை, ‘இன்றிரவு தூங்குபவர்கள், மறுநாள் காலை உயிரோடு இருக்க மாட்டார்கள்’ என்று சொன்னதாகவும் போட்டுத் தாக்கியிருக்கிறார்கள். இது நல்கொண்டா, வாரங்கல் போன்ற மாவட்டங்களுக்கும் பரவ, ஏராளமான மக்கள் தூங்காமல், கும்பல் கும்பலாக வீதியில் நின்றிருக்கிறார்கள். சிலர் ஏற்கெனவே தூங்கிக் கொண்டிருந்தவர்களையும் எழுப்பி உட்கார வைத்துவிட்டார்கள்.

இது போல‌ அமெரிக்காவில் பிரபலமான வதந்தி ஒன்று உள்ளது. 1991-ம் ஆண்டு, ‘ட்ராப்பிகல் ஃபேன்டஸி’ என்ற ஸோடாவைக் குடிக்கும் கறுப்பின ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என்று கிளப்பி விடப்பட்டது. இதனால் அந்த சோடாவின் விற்பனை 70 சதவீதம் குறைந்ததுடன், சிலர் அந்த சோடாவை ஏற்றிச் சென்ற ட்ரக்குகளைத் தாக்கவும் செய்தார்கள்.

இவ்வாறு பரப்பப்படும் அனைத்து வதந்திகளும் கெட்டதாகவே இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். எதற்காக இந்த வதந்திகள் பரப்பப்படுகின்றன? பிரபலங்கள் தொடர்பான வதந்திகளைப் பொறுத்தவரையில், பிரபலங்களின் மீது, சில மனிதர்களின் அடிமனதில் ஒரு பொறாமை இருக்க வேண்டும். அந்தப் பொறாமையே அவ்வாறான வதந்திகளைப் பரப்பவும், நம்பவும் தூண்டுகிறது.

இதர‌ வதந்திகளைப் பொறுத்தவரையில், கெட்டது தனக்கு நடக்காத வரையிலும், கெட்டதைப் பரப்புவதால், கெட்டதை நம்புவதால் மனிதர்களின் உள்மனதிற்கு த்ரில்லிங்கான சந்தோஷம் கிடைப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஒரு மாறுதலுக்காக நாம் ஏன் நல்ல விதமான வதந்திகளைப் பரப்பக்கூடாது? உதாரணத்திற்கு ஆகஸ்ட் 17-ம் தேதி பிறந்தவர்களின் வீட்டுக் கூரையைப் பிய்த்துக்கொண்டு வரும் புத்தாண்டு தினத்தன்று இரவு, தங்கமும் பணமும் கொட்டும் என்று பரப்பினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

அது ஏன் குறிப்பாக ஆகஸ்ட் 17?

அன்று என் பிறந்த நாள்!

(தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: grsnath71@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

மேலும்