சாகசத்துக்கு உதவுவதும் சாதனையே!

By என்.கெளரி

மலையிலும் கடலிலும், முடிவற்ற சாலையிலும் சாகசப் பயணங்கள் செல்வதுதான் இப்போதைய டிரண்ட். வார இறுதியை எப்படிக் கழிப்பது என்ற குழப்பமே இன்றைய இளைஞர்களிடம் இல்லை. காரணம், வழக்கமான வாழ்க்கைக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பு வந்தவுடனே அவர்கள் தங்களைப் புதுப்பித்துக்கொள்ளப் பயணம் செய்யப் புறப்பட்டுவிடுகிறார்கள். இப்படிப்பட்ட இளைஞர்களுக்கு உதவுவதற்காகவே ஒரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார் சாகசப் பயண விரும்பியான எஸ்.ஆர். மனோஜ் சூர்யா. ‘டேம் - டென்ட் அண்ட் டிரக்’ (Tame - Tent n Trek) என்ற பெயரில் செயல்படும் இவரது நிறுவனம் பல புதுமையான சாகசப் பயணங்களை ஒருங்கிணைத்து வருகிறது.

பயணமே வாழ்க்கை

கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட ‘டேம் - டெண்ட் அண்ட் டிரக்’ , தற்போதுவரை ஐம்பது பயணங்களுக்கு மேல் ஒருங்கிணைத்திருக்கிறது.

“நான் ஒரு தீவிரமான பயணி. எப்போதுமே பயணித்துக்கொண்டுதான் இருப்பேன். எம்.பி.ஏ., படித்து முடித்தவுடன் உதவி மேலாளராக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே, அறுபதாயிரத்துக்கு மேல் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தேன். ஆனால், வழக்கமான ‘கார்ப்பரேட்’ வாழ்க்கை எனக்கு ஒத்துவரவில்லை. வேலையை விட்டுவிட்டேன். அதற்குப் பிறகு, தொடர்ந்து நிறைய பயணங்களை மேற்கொண்டேன்.

பயணங்கள் எனக்கு ஒருவிதமான மன அமைதியையும் நிறைவையும் கொடுப்பதை உணர்ந்தேன். இந்த அனுபவத்தை மற்றவர்களும் பெற வேண்டுமேன்று நினைத்தேன். அதுதான் இந்த நிறுவனத்தை உருவாக்க வைத்தது. சாகசத்துக்கு உதவுவதும் ஒரு சாதனைதானே..! என்னுடைய நண்பர்களும் அப்பாவும் என்னுடைய இந்த முயற்சியைத் தொடர்ந்து ஊக்குவித்துவருகிறார்கள்” என்று சொல்கிறார் மனோஜ் சூர்யா.

மலைகளில் ஒரு முகாம்

இயற்கையை ரசிப்பதற்குத்தான் நாம் பயணங்களுக்குச் செல்கிறோம். ஆனால், அப்படி பயணம் சென்ற இடத்தில் நாம் முழுமையாக இயற்கையின் அழகை ரசிக்கிறோமா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இந்த விஷயத்தை மனதில்வைத்தே மனோஜ், தான் ஒருங்கிணைக்கும் பயணங்களில் முகாம் அமைத்துக் கூடாரங்களில் தங்கவைக்கும் வழக்கத்தை உருவாக்கியிருக்கிறார்.

“ஒரு மலைப் பிரதேசத்துக்கு வந்துவிட்டு, விடுதிக்குள் முடங்கிப் போவதில் எனக்கு உடன்பாடில்லை. இயற்கையின் அதிசயங்களை உணர்வதற்குக் கூடாரங்களில் தங்குவதுதான் சரியானதாக இருக்கும் என்று நம்பினேன். அத்துடன், எங்களுடைய பயணங்கள் பெரும்பாலும் மலைப் பிரதேசங்களிலும், காடுகளிலும் இருப்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்புமில்லாத வகையில் அவற்றைத் திட்டமிடுகிறோம். அதனால், மது அருந்தவோ, பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தவோ நாங்கள் அனுமதிப்பதில்லை.

‘கேம்ப் ஃபயரின்’ போது மென்மையான இசைக் கருவிகளை வாசிப்பது, சமூகம் சார்ந்த விஷயங்களை விவாதிப்பது என ஆக்கபூர்வமான வகையிலே எங்களுடைய பயணத்திட்டங்களை உருவாக்கியிருக்கிறோம். 2020-க்குள் ‘கேம்பிங்’ எனப்படும் இந்த வகையான பயணங்கள்தான் டிரண்டாக இருக்கும்” என்று உற்சாகமாகச் சொல்கிறார் அவர்.

சாகச விளையாட்டுக்கள்

தற்போது தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் என தென்னிந்தியாவில் சாகசப் பயணங்களை ஒருங்கிணைத்துவரும் இவர், விரைவில் வடஇந்தியாவிலும் பயணங்களை ஒருங்கிணைக்க விருக்கிறார். மலையேற்றம், மலையில் பைக் சவாரி, படகு சவாரி, ‘ஸ்கூபா டைவிங்’ போன்ற பல சாகச விளையாட்டுக்கள் இவருடைய பயணங்களின் முக்கிய அம்சமாக இருக்கின்றன.

“பெரும்பாலும் கொடைக்கானல், மூணாறு போன்ற இடங்களில் வாராவாரம் எங்களுடைய பயணங்களை ஒருங்கிணைத்துவருகிறோம். இதில் நண்பர்கள் குழு மட்டுமல்லாமல் தனித்துப் பயணப்பட விரும்பும் பெண்களும் கலந்துகொள்கிறார்கள். எப்படியும் ஒரு குழுவில் முப்பது பேராவது இருப்பார்கள்” என்று சொல்கிறார் மனோஜ்.

நள்ளிரவில் சைக்கிள் பயணம்

‘டேம் - டென்ட் அண்ட் டிரக்’ சமீபத்தில் சென்னையின் கடற்கரைச் சாலைகளில் நிலவொளியில் சைக்கிள்களில் பயணிக்க ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இளைஞர்களிடம் பெரும் வரவேற்பும் கிடைத்தது. தற்போது டிசம்பர் 16-ம் தேதி மீண்டும் இந்த நள்ளிரவு சைக்கிள் பயணம் நடக்கவிருக்கிறது. அத்துடன், புதுச்சேரிக்கு ‘அவளும் நானும்’ என்ற பெயரில் ஒரு பைக் ரைடும் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி ஜனவரி 14-ம் தேதி திட்டமிடப்பட்டிருக்கிறது.

“எங்களுடைய எல்லா நிகழ்ச்சிகளையும் ஃபேஸ்புக் பக்கத்தில்தான் ஒருங்கிணைக்கிறோம். அதனால், நிகழ்ச்சியைப் பற்றிய கருத்துகள் உடனுக்குடன் எங்களுக்குக் கிடைத்துவிடும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் ‘கேம்பிங்’ எல்லோருக்குமான விஷயமாக மாறிவிடும். அப்போது இன்னும் சிறப்பாகச் செயல் படுவதற்கான ஏற்பாடுகளைத் திட்டமிட்டுவருகிறேன். இதுவரை நான் ஒருங்கிணைத்த சாகசப் பயணங்களில் எனக்கு எந்தவிதமான எதிர்மறை விமர்சனமும் கிடைத்ததில்லை. இந்தச் சாகசப் பயணங்களை முடித்துத் திரும்புபவர்கள் பலரும் எனக்கு மனதார நன்றி தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுடைய இந்த மனநிறைவுதான் என்னைத் தொடர்ந்து சாகசப் பயணங்களுக்குத் திட்டமிட வைக்கிறது!” என்கிறார் மனோஜ் சூர்யா.

மேலும் தகவல்களுக்கு: >https://www.facebook.com/tentntrek/

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்